Monday, 21 March 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (21.3.16 முதல் 27.3.16)

மேஷம்:

லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் இரண்டுக்குடைய சுக்கிரன் அமர்ந்து அவரை ஒன்பதுக்குடைய குருபார்ப்பதால் இந்த வாரம் மேஷராசிக்காரர்களுக்கு தனயோகம் உண்டாகி எதிர்பாராத பணவரவுகளும் நீண்டநாட்களாக கிடைக்காமல் இருந்த நிலுவைத் தொகைகள் கிடைக்கும் வாரமாகவும் இருக்கும்.

பங்குச்சந்தை போன்ற யூகவணிகத்துறையில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதாலும் ராகுபகவான் ஐந்தில் இருப்பதாலும் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். கடன் பெற்று வீடு வாங்கும் அமைப்பு உள்ளது. புதிய வாகனம் அமையும்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்த வாரம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் சுபவலுவடன் குரு, செவ்வாய், சந்திரன் ஆகியோரின் பார்வையில் இருப்பதால் இந்த வாரம் ரிஷபராசிக்காரர்களின் வேலை, வியாபாரம், தொழில் போன்ற அமைப்புகளில் நன்மைகளும், முன்னேற்றங்களும் இருக்கும் வாரமாக இருக்கும்.

கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழில் இருப்பது பாபகிரகம் என்றாலும் அவர் உங்களின் யோகாதிபதி என்பதால் கெடுதல் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.

அரசு, தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கும், காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வாரம் நல்லபலன்கள் உண்டு.. சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர் பார்த்தபடி ஓரளவு கிடைக்கும்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் வாரம் முழுவதும் நீசநிலையில் இருப்பதால் மிதுன ராசிக்காரர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தடைகள் இருக்கும் வாரமாக இது இருக்கும். அதேநேரத்தில் ராசியின் மற்ற யோகாதிபதிகள் சுக்கிரனும், சனியும் வலுவாக இருப்பதால் வாரக்கடைசியில் தடைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் வாரமாகவும் இருக்கும்.

இதுவரை வெளிநாடு வாய்ப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக விசா கிடைத்து வெளிநாடு செல்வீர்கள். இளைய பருவத்தினருக்கு காதல் வரும் வாரம் இது. மாணவர்களுக்கு கல்விக் கூடங்களில் நல்ல சூழ்நிலை இருக்கும். நன்கு பரீட்சை எழுதுவீர்கள்.

பெண்கள் சம்பந்தப்பட்ட சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது.

கடகம்:

ஒன்பதில் சூரியன், இரண்டில் குரு என காரகோ பாவநாஸ்தி அமைப்புடன் இந்த வாரக் கிரகநிலைகள் அமைவதால் கடகராசிக்காரர்களுக்கு தந்தையாலோ அல்லது தந்தைவழி உறவினர்களாலோ செலவுகளோ விரையங்களோ இருக்கும் என்பதால் இந்த வாரம் சிக்கனமாக இருக்க வேண்டிய வாரமாக இருக்கும்.

வாழ்க்கைத்துணை வழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைப்பேறு தள்ளிப் போன தம்பதிகளுக்கு இந்த வாரம் குழந்தை சம்பந்தப்பட்ட நல்லசெய்தி உண்டு. முப்பது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாத சிலருக்கு இந்தவாரம் திருமணம் உறுதியாகும்.

ஐந்தாம் இடத்தில் வலுவாக இருக்கும் சனியும் செவ்வாயும் பிள்ளைகள் விஷயத்தில் மனக்குறைகளையும், சங்கடங்களையும் தருவார்கல். பிள்ளைகளின் சுபகாரியங்கள் தள்ளிப் போகலாம். அல்லது நிறைவேறுவதற்கு பெரிய தடைகள் உருவாகலாம். குறிப்பிட்ட சிலருக்கு பிள்ளைகளுடன் விரோதமும், கூட்டுக் குடும்பத்தில் இருந்து அவர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் போவதும் இருக்கும்.

சிம்மம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சூரியனும், குருவும் பரிவர்த்தனையில் இருப்பதும் ராசியோடு குரு, சுக்கிரன், சந்திரன் ஆகிய சுபக்கிரகங்கள் சம்பந்தப்படுவதும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுபச்செலவுகளும், நன்மை தரும் விஷயங்களுக்கு பணம் செலவு செய்தலும் நடக்கும் என்பதைக் காட்டுகிறது.

சனியின் பார்வை ராசிக்கு இருப்பதால் எந்த நேரமும் படபடப்பாக இருப்பீர்கள். டென்ஷன் அதிகமாக இருக்கும். எல்லா வேலைகளையும் நீங்கள் மட்டுமே இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய வேண்டி இருக்குமாதலால் குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும். தந்தைவழி உறவினர்களிடம் சுமுகஉறவு தடைபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்களிடம் கொடுக்கல் வாங்கல் எதுவும் இந்த வாரம் செய்ய வேண்டாம்.

கன்னி:

ராசிநாதன் புதன் நீசமடைந்திருந்தாலும் அவர் உங்கள் ராசியை பார்ப்பதால் எவ்விதமான கெடுபலன்களும் இன்றி இந்த வாரம் நன்மைகள் மட்டுமே கன்னி ராசிக்கு உள்ள வாரமாக இருக்கும். அதேநேரத்தில் பனிரெண்டாமிடத்தில் கூடி நிற்கும் ராகு, குரு, சந்திரனால் வரவுக்கு மிஞ்சிய செலவும் இருக்கும் வாரமாகவும் இது இருக்கும்.

உடல் நலம் சிறப்பாக இருக்கும் என்பதையும், கடன் தொல்லைகள் நிச்சயம் இருக்காது மற்றும் புதிய கடன்கள் வாங்க வேண்டிய தேவையின்றி போதுமான வருமானம் தாராளமாக உங்களுக்கு வரப் போகின்றது என்பதையும் கிரகநிலைகள் காட்டுகின்றன.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். சிலருக்கு சம்பளஉயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

துலாம்:

ராசிக்கு ஆறாமிடத்தில் பதினொன்றுக்குடையவன் பரிவர்த்தனை அடைவதால் இந்த வாரம் மறைமுகமான வழிகளில் துலாம் ராசிக்காரர்களுக்கு பணவரவுகள் வரும். குறிப்பிட்ட சிலருக்கு இதர வருமானங்கள் எனப்படும் வெளியில் சொல்லமுடியாத வகையில் உள்ள வருமானங்களும் உண்டு.

இந்த வாரம் உங்களின் எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம். அனைத்தையும் சமாளிப்பீர்கள்.

வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் இந்த வாரம் விரும்பிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள். ஏற்கனவே வேலையில் நிம்மதியற்ற நிலைமையையும், தொந்தரவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அது நீங்கி அலுவலகங்களில் நிம்மதியான சூழல் அமையப் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

ராசிநாதன் ராசியில் இருப்பது வலுவானது என்பதோடு ராசிக்கு கேந்திரங்களில் இந்த வாரம் ஐந்து கிரகங்கள் கூடி இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வீடு, தொழில் இரண்டு இடங்களிலும் நிம்மதியும், சந்தோஷமும் இருக்கும் வாரமாக இருக்கும்.

இந்த வாரம் உங்களுக்கு மாறுதல்களுக்கான வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம், தொழிலிட மற்றம் செய்ய வேண்டியிருக்கும். நிறைய அலைச்சல்கல்கள் இருக்குமாதலால் வேளாவேளைக்கு சரியான நேரத்தில் நீங்கள் சாப்பிடுவது கஷ்டம்தான்.

வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்கள். செய்யாத தவறுக்கு இந்த வாரம் தண்டனை கிடைக்கலாம். வீண்பழி வரலாம். அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு இருக்கும் நிலையான வேலையை விட்டு விட்டு வேறொரு கம்பெனிக்கு மாறுவது இப்போது வேண்டாம். அது அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாகி விடும்.

தனுசு:

லாபாதிபதி சுக்கிரன் இரண்டாமிடத்தில் கேதுவோடு இணைந்திருப்பதால் இந்த வாரம் குறிப்பிட்ட சில தனுசுராசிக்காரர்களுக்கு பயணங்கள் மூலம் வருமானமும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள் மூலமான நன்மைகளும் கிடைக்கும் வாரமாக இருக்கும்.

நீண்ட நாட்களாக உங்களை சிக்கலில் ஆழ்த்தி வந்த எதிர்ப்புகளை இப்போது முறியடிப்பீர்கள். உங்களைப் பிடிக்காத உங்கள் எதிரிகள் இந்த வாரம் உங்களை ரோட்டில் பார்த்தாலே பயந்து பக்கத்து தெருவுக்கு நழுவுவார்கள். இளைய பருவத்தினரை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவர்களின் மேல் தனிப்பட்ட வகையில் அக்கறையும், கவனமும் எடுத்துக் கொள்வது நல்லது.

பெண்களால் வீண்பழி வந்து சேரும். பெண்களிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். பெண்களால் செலவுகளும், மனவேதனைகளும் இருக்கும். உங்கள் மனதைரியம் குறையும் சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது. இதுவரை நல்ல பெயர் எடுத்த இடங்களில் சற்று மதிப்பு குறையலாம். எனவே எல்லா நிலைகளிலும் விழிப்புடன் இருப்பது நல்லது.

மகரம்:

அஷ்டமகுரு மற்றும் ராகுவால் உங்களுடைய எண்ணம், செயல் அனைத்தும் எதிர்மறையாக இருந்தாலும் இந்த வாரம் பரிவர்த்தனையின் மூலம் எட்டில் கிரகங்கள் இருக்கும் தோஷம் நீங்குவதால் நடக்கும் அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் அமைப்பாகவே இருக்கும் என்பது உறுதி.

குறுக்குவழி பணம் வரும் சூழ்நிலையில் விழிப்பும் எச்சரிக்கையும் தேவை. சொல்வது புரியும் என்று நினைக்கிறேன். எங்கும் எதிலும் கவனமாக இருங்கள். இந்த வாரம் எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம். யார் எங்கே எப்படி உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்று தெரியாது.

வீடு வாங்குவது, தொழிலை விரிவுபடுத்துவது போன்றவைகளில் நன்கு யோசித்து செயல்படுங்கள். தற்போது வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் தடைப்பட்டு வீட்டை முடிக்கும் அமைப்பு இருப்பதால் நல்ல காண்ட்ராக்டரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்.

கும்பம்:

குரு, சுக்கிரன், சந்திரன் என மூன்று சுபக்கிரகங்கள் இந்த வாரம் ராசியோடு சம்பந்தப்படுவதால் பெண்கள் விஷயத்தில் நல்ல காரியங்கள் நடக்கும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சில கும்பராசிக்காரர்களின் மகள், சகோதரி போன்றவர்களின் திருமணம் உறுதியாகும் நிகழ்ச்சி இப்போது உண்டு.

சிலருக்கு இந்தவாரம் அரபுநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள். இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது சாதமான நிலை வரும். குலதெய்வவழிபாடு இதுவரை செய்யாதவர்கள் அதை உடனே செய்யும்படி இருக்கும்.

பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கம் மற்றும் வழக்கு இருப்பவர்கள், பாகப்பிரிவினை சம்பந்தமான பேச்சுவார்த்தை நிலுவையில் இருப்பவர்கள், இந்த வாரம் பிரச்சனையை தள்ளி வைப்பதும், வாய்தா வாங்குவதும் உங்களுக்கு சாதகமான பலனை தரும்.

மீனம்:

ராசிநாதனின் பரிவர்த்தனையால் மீனராசிக்கு தற்போது வலிமை உண்டாவதால் இந்த வாரம் எதிர்மறை பலன்கள் எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதே நேரத்தில் நடக்கும் அனைத்து நன்மைகளும் தாமதமாகவே நடைபெறும் என்பதால் உங்களுக்கு டென்ஷன் உள்ள வாரமாகவும் இது இருக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலைமை மாறி வியாபாரம் சூடுப்பிடிக்கும். போட்டியாளர்கள் ஒழிவார்கள். புதிய கடை திறக்க முடியும். இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். கிளைகள் ஆரம்பிப்பீர்கள்.

திருமணம் தாமதமாகி கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் திருமணம் சம்பந்தப்பட்ட நல்ல செய்திகள் உண்டு. காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தைரியம் வரப்பெற்று பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் வார பிற்பகுதியில் நல்ல செய்திகள் உண்டு.

No comments :

Post a Comment