Monday, 7 March 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (07.03.2016 – 13-03-2016)

இந்த வாரம் எப்படி ?

மேஷம்:

மேஷநாதன் செவ்வாய் இந்தவாரம் எட்டாமிடத்தில் சனியுடன் இருப்பதால் அனைத்திலும் குழப்பங்கள் உள்ள வாரமாக இது இருக்கும். சிலர் ரகசியமான வேலைகளை செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். அதேநேரத்தில் வாழ்க்கையில் இதுவரை செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு ஆறுதல் தரும் வாரமாகவும் இருக்கும்.

வார ஆரம்பத்தில் நான்காமிடம் வலுப்பெறுவதால் அம்மாவின் வழியில் ஏதேனும் அனுகூலமான விஷயங்கள் நடக்கும். சிலருக்கு வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த தாய்வழி சீதனங்கள் சொத்துக்கள் தற்பொழுது கிடைப்பதற்கான வழிபிறக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும்.

புனிதயாத்திரை செல்ல ஆர்வம் காட்டுவீர்கள். இளையபருவத்தினருக்கு வேலை விஷயமான பயணங்கள் இருக்கும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். அலுவலகத்தில் அடுத்தவர் வேலையையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். பொதுவாக இது நல்லவாரம்தான்.

ரிஷபம்:

ரிஷபநாதன் சுக்கிரன் தொழில் வீட்டில் இந்தவாரம் வலுப்பெறுவதால் உங்களை நீங்களே கெடுத்துக்கொள்ளும் சில விஷயங்களை இப்பொழுது செய்வீர்கள். வலுப்பெற்ற செவ்வாய் வாக்குஸ்தானத்தை பார்ப்பதால் தேவையில்லாமல் எதையாவது பேசி வேண்டப்பட்டவர்கள் மனங்களை நோக அடிப்பீர்கள்.

வயதான தாயாரின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டும். மருத்துவ விஷயங்களுக்கு இந்தவாரம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். திரவ பொருட்கள் விற்பனை செய்பவர்கள், துறைமுகம் சம்பந்தபட்டவர்களுக்கு இந்தவாரம் திடீர் தனலாபம் பணவரவு உண்டு.

வெளிநாட்டில் இருக்கும் ரிஷபராசிக்காரர்களுக்கு இந்தவாரம் பணிபுரியும் இடங்களில் நல்ல திருப்பங்கள் இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகளால் தொல்லைகள் வரும் என்பதால் அலுவலகங்களில் வீண் அரட்டையை தவிர்க்கவும்.

மிதுனம்:

மிதுனநாதன் புதன் ஒன்பதாமிடத்தில் வலுவாக இருந்தாலும் சூரியனுடன் இணைந்திருப்பது பலவீனம் என்பதால் இந்தவாரம் உங்களுக்கு முழுமையான நன்மைகளை கிடைக்காத வாரமாக இருக்கும். ராசியின் இன்னொரு யோகாதிபதியான சனியும் ஆட்சி பெற்ற செவ்வாயுடன் இணைந்திருப்பதும் இதைக் காட்டுகிறது.

ராசியை செவ்வாய் பார்ப்பதால் சிலருக்கு காரணமின்றி கோபமும் எரிச்சலும் வரும். இத்தனை நாள் பிரச்னைகளை கண்டு ஒதுங்கிப் போயிருந்த நீங்கள் இப்பொழுது வலியப் போய் பிரச்னைகளில் மாட்டுவீர்கள் என்பதால் நிதானமும் எச்சரிக்கையும் தேவைப்படும் வாரம் இது.

பெண்களுக்கு இந்தவாரம் நல்ல வாரமாக இருக்கும். சிலருக்கு உடல் ரீதியான சிறு தொந்தரவுகள் இருக்கலாம் என்பதால் உடல் நலத்தில் அக்கறை வையுங்கள். திரைப்படக் கலைஞர்களுக்கு மேன்மை வரும். அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம்.

கடகம்:

கடகநாதன் சந்திரன் வார ஆரம்பத்தில் ராசியைப் பார்த்து நல்ல நிலையில் இருந்தாலும் அடுத்து சந்திராஷ்டமமாக எட்டில் மறைவது உங்களுக்கு பணவரவைக் கட்டுப்படுத்தி குழப்பங்களைத் தரும் அமைப்பு என்றாலும் சூரியன் தனது இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் நீங்கள் கவலைப்பட எதுவுமில்லை.

பிறந்த ஜாதக வலுப்பெற்ற சிலர் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இதுவரை தன்னம்பிக்கை இன்றி இருந்து வந்த சிலருக்கு உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் இந்தவாரம் நடக்கும். வேலைசெய்யும் இடங்களில் சுமுக சூழ்நிலை இருக்கும். இனிமேல் வேலை, தொழில் விஷயங்களில் நன்மைகள் கடகத்திற்கு அதிகம் உண்டு.

இதுவரை இருந்து வந்த வீண்விரயங்கள் தடுக்கப்பட்டு இனி நல்ல விஷயத்திற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

சிம்மம்:

சிம்மநாதன் இந்த வாரம் முழுவதும் தனது வீட்டைத் தானே பார்த்து வலுப்படுத்துவதோடு தன, தொழில் ஸ்தானாதிபதிகள் புதன் சுக்கிரனுடன் இணைகிறார் என்பதால் இந்தவாரம் சிம்மராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் தயங்காமல் எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள்.

சூரியன் வலுவுடன் இருப்பதால் நீங்கள் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வெல்லும் வாரமாக இது இருக்கும். இழந்து போன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் மீண்டும் பெறுவீர்கள். போராட்ட குணமுடைய சிம்ம ராசிக்காரர்களை சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை பிறருக்கு உணர்த்துவீர்கள்.

சீருடை அணியும் காவல்துறை ராணுவம் போன்ற அரசுப்பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும். மேலதிகாரிகளால் அடிக்கடி விரட்டப்படுவீர்கள் குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

கன்னி:

கன்னிநாதன் புதன் ஐந்தாமிடத்தில் இருந்தாலும் சூரியன் மற்றும் கேதுவுடன் இணைந்திருப்பதால் உங்களுடைய செயல்கள் சிந்தனைகள் அனைத்திலும் ஒரு தேக்கநிலை இருக்கும். எதிலும் தைரியமாக அடியெடுத்து வைக்க சற்று யோசிக்கும் வாரமாக இது இருக்கும்.

தனாதிபதி வலுப்பெறுவதால் வெகு நாட்களுக்குப் பிறகு பணவரவு சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கும். அதேநேரத்தில் விரயஸ்தானம் வலுப் பெறுவதால் சேமிக்க முடியாத அளவுக்கு விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும். வருமானத்தை மனைவியின் கையில் கொடுத்து பத்திரப் படுத்தினால் மட்டுமே செலவிலிருந்து தப்பிக்க முடியும்.

கலைத்துறையினருக்கு இந்தவாரம் நீண்டநாட்களாக போக்கு காட்டிக் கொண்டிருந்த ஒரு வாய்ப்பு வீடு தேடி வந்து கிடைக்கும். டெக்ஸ்டைல், கார்மெண்ட் போன்ற ஆடை சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்தவாரம் நல்ல லாபம் உண்டு.


துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் பலம் பெற்று இருப்பதால் துலாம்ராசிக்கு நினைத்தது நடக்கும், தொட்டது துலங்கும் வாரமாக இது அமையும். அதே நேரத்தில் சுக்கிரனுடன் சூரியனும் கேதுவும் இணைவதால் நடக்கும் நல்லவைகள் அனைத்தும் இழுபறியாகவே நடந்து இறுதியில் சாதகமாக முடியும்.

குறிப்பிட்ட சிலருக்கு தந்தை வழியில் வீண் விரயங்களும் மருத்துவ செலவுகளும் அப்பாவினால் மனக்கஷ்டங்களும், விரோதமும் இந்தவாரம் உண்டு. தந்தையுடன் பிறந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக எவரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.

குரு லாபஸ்தானத்தில் வலுப்பெற்று இருப்பதால் சிலருக்கு வங்கி, சிட்பண்டு போன்ற பணம் புரளும் துறைகளிலோ அல்லது பணத்தை எண்ணும் கேஷியர் போன்ற வேலை வாய்ப்புகள் இப்பொழுது கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் உண்டு.

விருச்சிகம் :

விருச்சிகநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சிநிலையில் இருக்கிறார். அவருடன் இருக்கும் சனிபகவான் செவ்வாயினால் வலிமையிழந்து இருப்பதாலும் வாரம் முழுவதும் பாக்கியாதிபதி சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதாலும் இந்த வாரம் பணசிக்கல் இல்லாமல் வருமானம் வரும் வாரமாக இருக்கும்.

கடந்த காலங்களில் ஜென்மச்சனியாக இருந்த சனிபகவான் இன்னும் சில மாதங்கள் ராசியிலேயே இருக்கப்போகும் ராசினாதனால் மாற்றமடைந்து பலவீனமாவதால் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த விரையங்கள் தவிர்க்கப்பட்டு இனிமேல் வரும் வருமானத்தை நீங்கள் சேமிக்க முடியும். சனியிடம் இருந்து இனிமேல் கெடுதல்கள் வராது.

பத்தாமிடம் வலுப்பெறுவதால் இந்த வாரம் வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவார்கள். பெண்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது. அவர்களால் வீண்பழி ஏதாவது வரலாம்.

தனுசு:

தனுசுநாதன் குருபகவான் ராகுவுடன் இணைந்தாலும் வலிமைக் குறைவு இல்லாமல் இருப்பதால் இந்த வாரம் தனுசுராசிக்கு நன்மைகளை அளிக்கும் வாரமாக இருக்கும். அதே நேரத்தில் செவ்வாய் விரயத்தில் இருப்பதால் உங்களை செலவு வைக்கக்கூடிய சம்பவங்களும் இந்த வாரம் நடக்கும்.

தனுசுக்கு இப்போது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலம். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான மாற்றங்களை இப்போது சந்திப்பீர்கள். சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு வெளிநாடு வெளிமாநிலம் போன்ற மாற்றங்கள் இருக்கும்.

ராசினாதனுடன் இணைந்திருக்கும் ராகுவால் சிலருக்கு மறைமுகமான வருமானங்கள் தற்போது இருக்கும். பொதுவாக ராகு எப்படி சம்பாதித்தோம் என்று வெளியில் சொல்லமுடியாத வகையில் பணம் தரும் கிரகம் என்பதால் இப்போது இது போன்ற வழிகளில் தனுசுராசிக்காரர்களுக்கு வருமானம் வரும்.

மகரம்:

ஆறு எட்டுக்குடையவர்கள் பலம் இழந்து நிற்கும் வாரமாக இது அமைவதால் மகரராசிக்கு இந்த வாரம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நன்மைகள் இருக்கும் வாரமாக அமையும். இதுவரை நிறைவேறாமல் எதிர்ப்பு உருவாகிக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இப்போது உங்களுக்கு சாதகமாக முடியும்.

வார ஆரம்பத்தில் இருக்கும் கிரகநிலைகளால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடு தோன்றும் என்பதால் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்து போவதோடு மற்றவர் செய்யும் தவறை பொறுத்து போவதும் நல்லது. அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

பணவரவிற்கு குறை எதுவும் இருக்காது. ராசிநாதன் ராசியைப் பார்ப்பதால் எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் மிகுந்த யோககாலம் ஆரம்பிக்க இருப்பதால் மகரராசிக்கு இனிமேல் யோகம்தான்.

கும்பம்:

வார ஆரம்பத்தில் ஆறுக்குடைய சந்திரன் ராசியில் இருப்பதால் தேவையற்ற மனக்கலக்கம் உருவானாலும் நண்பர்கள் சுக்கிரனும், புதனும் வலுவான நிலைமையில் இருப்பதால் எந்த ஒரு பிரச்சினையையும் இப்போது உங்களால் சமாளிக்க முடியும்.

பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கின்ற செவ்வாயால் மருத்துவத் துறையில் இருப்பவர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், வீடு கட்டித்தரும் புரோமோட்டர்கள், இறைச்சி வியாபாரிகள் போன்றவர்களுக்கு மிகச்சிறந்த நன்மைகள் இருக்கும் என்பதால் இந்த வாரம் பணவரவுக்கு ஏற்ற வாரம்தான்.

கலைத்துறையினர் வாய்ப்புகளை பெறும் வாரமாக இது இருக்கும். நூதனக் கருவிகளை இயக்கும் துறையினர் முன்னேற்றம் அடைவார்கள். ஏழில் இருக்கும் ராகுவால் சிலருக்கு கூட்டுத்தொழில் விஷயங்களிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் ஏமாற்றம் இருக்கும் என்பதால் பணவிஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மீனம் :

ஆறுக்குடைய சூரியன் தனது ஆறாம் வீட்டையே பார்த்து வலுவாக்கினாலும் ஐந்துக்குடைய சந்திரன் ராசியில் இருக்கும் அமைப்பில் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. மீனராசிக்காரர்களின் திறமைகள் வெளிப்படும் வாரமாக இது அமையும். போட்டி இருந்தால்தானே ஜெயிக்க முடியும் என்பதற்கு இணங்க இந்த வாரம் எதிரிகளை வெல்வீர்கள்.

செவ்வாய் சனி இணைந்து சனிபகவான் ராசிநாதன் குருவைப் பார்ப்பதால் திடீரென முகத்தை சிடுசிடுவென மாற்றிக்கொள்வீர்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறிப் போவார்கள். நீங்களே இந்த வாரம் மற்றவர்களுக்கு புரியாத புதிராகத்தான் இருப்பீர்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனவருத்தம் இந்த வாரம் இருக்கலாம். நீங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்து அது சிக்கலில் முடிந்து கடைசியில் அந்த சிக்கலையும் நீங்களே தீர்க்க வேண்டிய வரும் என்பதால் பிள்ளைகளின் மேல் ஒரு கண்வைக்கவும்.

No comments :

Post a Comment