Monday, 8 February 2016

மாலைமலர் வார ராசி பலன்கள் 8.2.16 – 14.2.16

மேஷம்:

வாரம் முழுவதும் நான்கிற்குடைய சந்திரபகவான் லாபம் தரும் அமைப்புகளில் இயங்குவதால் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற நிலையும் எதிலும் தடைகள் இல்லாத லாப நிலையும் இருக்கும் என்பதால் மேஷத்திற்கு இந்த வாரம் நல்ல வாரம் தான்.

குறுக்குவழி சிந்தனைகள் இப்போது வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஐந்தாம் இடத்தில் குரு அமர்ந்து ஐந்துக்குடைய சூரியன் பத்தில் அமர்வதால் பிள்ளைகள் உங்களுக்கு பெருமை தேடித் தருவார்கள். பிள்ளைகளுக்குரிய கடமைகளை நீங்கள் சரியாக செய்ய முடியும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுவதால் வாரம் முழுவதும் அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

ரிஷபம்:

ராசியை சனி, செவ்வாய் வலுப்பெற்று பார்த்து ராசிநாதன் சுக்கிரனும் எட்டில் மறைந்து வலுவிழந்து இருந்தாலும் சுக்கிரன் தன்னுடைய சுயச்சாரத்தில் இருப்பதால் ரிஷபராசிக்கு வர இருக்கும் கெடுதல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி உங்களுக்கு நன்மைகள் நடக்கும் வாரமிது.

புத்திர விஷயத்தில் நல்ல செய்திகள் இருக்கும். தெய்வதரிசனம் கிடைக்கும். ராசியை சனி பார்ப்பதால் எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள்.

தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். பாகப்பிரிவினை போன்ற பூர்வீக சொத்து பிரச்சனைகளை தள்ளி வையுங்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை அமைவதற்கான ஆரம்பங்கள் இந்த வாரம் இருக்கும்.

மிதுனம்:

வார ஆரம்பத்தில் தனாதிபதி சந்திரன் எட்டில் மறைந்து சந்திராஷ்டம நிலையில் இருந்தாலும் ஒன்பதுக்குடைய சனியின் பார்வையை வாங்கி லாப ஸ்தானம் வலுப்பெறுவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மறைமுகமான தனலாபங்கள் கிடைக்கும் வாரமாக இருக்கும்.

ஐந்தில் செவ்வாய் இருப்பதால் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். அதேநேரத்தில் அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். பெண்களுக்கு மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்.

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இளையவர்களுக்கு இனிமேல் இருக்காது. புதியதாக எந்தப் பிரச்னையும் வராது. இருக்கும் பிரச்னைகளும் தீருவதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு வழி திறக்கும். விருச்சிகத்திற்கு இனிமேல் கஷ்டங்கள் வர காரணங்கள் இல்லை.

கடகம்:

யோகாதிபதிகளான சூரியன், குரு, செவ்வாய் மூவரும் நல்ல இடங்களில் வலுவான அமைப்புகளில் இருப்பதால் கடக ராசிக்கு இந்த வாரம் பின்னடைவுகள் எதுவும் இல்லாமல் நினைத்தகாரியம் யாருடைய தயவுமின்றி நிறைவேறும் வாரமாக இருக்கும்.

எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். குறிப்பிட்ட சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும்.

வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். ஒருசிலர் சுக்கிரனின் தயவால் திருமண உறுதி கிடைக்கப் பெறுவீர்கள். சிலர் இந்த வாரம் எதிர்கால வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பீர்கள்.

சிம்மம்:

ராசிநாதன் ஆறில் மறைந்து சனிபார்வை பெற்றாலும் அவரை யோகாதிபதி செவ்வாயும் பார்ப்பதால் வாரம் முழுவதும் டென்ஷனுடன் நீங்கள் இருக்க வேண்டி இருந்தாலும் வாரத்தின் பிற்பகுதியில் அனைத்தும் நீங்கி பண வரவும் பொருளாதார லாபங்களும் கிடைக்கும் வாரமாக இது இருக்கும்.

என்ன இருந்தாலும் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க முடியும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை முழுக்க நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.

அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் மறுபடியும் லேசாக எட்டிப் பார்க்கும். அதேநேரத்தில் உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும். வாயதானவர்கள் உடல்நலத்தின் மீது அக்கறை வைக்கவும். உங்கள் தோளில் கை போட்டபடி டீ சாப்பிடும் நண்பர் இன்னொரு கையால் உங்களுக்கு ஆகாதவரின் கையை குலுக்குவார். கவனமாக இருங்கள்.

கன்னி:

இரண்டில் செவ்வாய் நிலை கொண்டிருப்பது கன்னி ராசிக்கு கிடைக்கும் பண வரவை தடுக்கும் ஒரு அமைப்பு என்றாலும் வாரம் முழுவதும் சுக்கிரன் வலுவாக இருப்பதால் சிக்கல்கள் எதுவும் இல்லாத வாரமாகவே இது இருக்கும். அதேநேரம் இரண்டில் செவ்வாய் என்பதால் பேச்சில் கவனமாக நீங்கள் இருக்க வேண்டியது இருக்கும்.

ஒன்பது, பத்துக்குடையவர்கள் வலுப்பெற்று இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பான முறையில் செய்து முடிப்பீர்கள். அந்தஸ்து கௌரவம் உயர்வான நிலையில் இருக்கும். சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் மதகுருக்களின் நேரடி ஆசிகள் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். குறிப்பிட்ட சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள்.

துலாம்:

துலாம் ராசிக்கு இந்த வாரம் அறிமுகம் இல்லாத நபர்கள் மூலம் ஆதாயம் அல்லது என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் கருதாத செய்த உதவியால் இன்றைக்கு சரியான நேரத்தில் பதில் உதவி என்பவை நடக்கின்ற வாரமாக இருக்கும். உங்களுக்கு உதவிகள் என்பதை போல நீங்களும் அடுத்தவர்களுக்கு உதவி செய்து நற்பெயர் வாங்கும் வாரம் இது.

ராசிக்கு இரண்டில் சனி வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். எந்த ஒரு விஷயத்திலும் சோம்பலை ஒதுக்கித் தள்ளி சுறுசுறுப்புடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.

ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த வாரம் முன்னேற்றமாக இருக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

விருச்சிகம்:

ஆறாமிடம் வலுப்பெறுவதால் இனம்புரியாத கலக்கங்களும் எதிர்காலத்தை பற்றிய நிச்சயமற்ற நன்மையும் உங்களுடைய மனதை போட்டு அழுத்தி கொண்டிருந்தாலும் இன்னும் சில நாட்களில் உங்கள் ராசிக்கு மாறப்போகின்ற உங்கள் ராசிநாதன் செவ்வாயின் தயவினால் அனைத்தும் நல்ல விதமாக முடியும் வாரமாக இது இருக்கும்.

எட்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாடு சம்மந்தப்பட்ட விஷயங்கள் கைகொடுக்கும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத மறைமுக இலாபம் கிடைக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். சிலருக்கு வேலை மாறுதல், இடம் மாற்றங்கள் ஆகியவை உண்டு.

மேலிடத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் குழப்பங்கள் இருக்கலாம். பருவவயது குழந்தைகள் ஏதாவது வம்பிழுத்துக் கொண்டு வரலாம். ராசிநாதன் வலுவால் அந்தஸ்து கௌரவம் கூடும்படியான செயல்கள் இருக்கும். பொதுஇடத்தில் மதிப்பும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.

தனுசு:

ஒன்பதில் குரு, பதினொன்றில் செவ்வாய் நல்ல இடங்களில் சந்திரன் என இந்த வாரம் யோக கிரகங்கள் உங்கள் ராசிக்கு நன்மைகள் தரும் அமைப்பில் உள்ளதால் தனுசு ராசிக்கு யோக வாரமாகவே இது இருக்கும். குறிப்பாக 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு எதிர்கால நன்மைகளை அடையாளம் காட்டும் வாரம் இது.

நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். அவசியத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியது வரலாம். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். மறைமுக எதிர்ப்புக்கள் மேலோங்கும். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம்.

தேவையற்ற விஷயங்களில் இந்த வாரம் மூக்கை நீட்ட வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. குறுக்குவழி சிந்தனைகள் செயல்கள் இந்த வாரம் கை கொடுக்காது. யாரையும் நம்ப வேண்டாம். பணம் எடுத்துப் போகும்போது மிகுந்த கவனம் தேவை. நீண்ட தூரப் பிரயாணங்களை தவிர்க்கலாம்.

மகரம்:

வாரம் ஆரம்பமே ராசியில் சூரியனும், சந்திரனும் இணைந்து அமாவாசை நாளாக ஆரம்பமாவதால் இந்த வாரம் வாழ்க்கைத்துணை மூலம் நன்மைகளும் லாபங்களும் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். இதுவரை திருமணம் தாமதமாகி வந்த இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் நல்ல செய்திகள் உண்டு.

ராசி வலுவுடன் இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகள் நல்ல வருமானத்துடன் எந்தவித பாதிப்பும் இன்றி சுமுகமாகவே நடக்கும். ஆறுக்குடைய புதன் ஆறாம் வீட்டை சுக்கிரனுடன் இணைந்து பார்ப்பதால் சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம்.

அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு இது வசந்த காலம்.

கும்பம்:

ஏழாமிடத்தில் கூடி இருக்கும் குரு, ராகுவினால் இந்த வாரம் அன்னிய, இன, மத மொழிகாரர்களை நண்பர்களாக, பங்குதாரர்களாக கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு லாபங்கள் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வாழ்க்கை துணை மூலமும் நல்ல செய்திகள் உண்டு.

செலவு செய்தே ஆக வேண்டும் என்பதால் இந்த வாரம் வருமானமும் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் எல்லோரும் கடன் தரமாட்டார்கள். கடன் வாங்குவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்பதால் செலவு செய்வதற்கு கடன் வாங்காமலேயே வருமானம் வரும்.

தொழில் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. குருவின் பலத்தால் பணத்துக்கு கஷ்டங்கள் இருக்காது. சிலருக்கு வெகுநாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் தற்பொழுது முடியும். வேற்றுமத நண்பர்கள் இப்போது கை கொடுப்பார்கள்.

மீனம்:

வாரம் முழுவதும் சந்திரன் நல்ல இடங்களில் இயங்குவதாலும் தன, லாப, பாக்கிய ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதாலும் இந்த வாரம் மீன ராசிக்கு எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும் வாரமாக இருக்கும்.

அதேநேரத்தில் செவ்வாய் எட்டில் மறைந்து வலிமை இழப்பதால் உங்களுடைய செயல்களில் “இரண்டும் கெட்டான்தனம்” இருக்கும். சில விஷயங்களில் சட்டென ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிப்பீர்கள். ஒன்பதில் சனி இருப்பது இருப்பது உங்களை சுறுசுறுப்புடன் செயல்பட முடியாமல் தடுக்கும்.

இந்த வாரம் பெண்கள் பற்றிய புது விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ராசியின் எதிரி சுக்கிரன் பத்தாமிடத்தில் அமர்ந்து ராசிநாதன் குரு அவரைப் பார்ப்பதால் பெண்களால் ஏதேனும் பிரச்னைகள் வருமோ என்று உங்களை யோசிக்க வைக்கலாமே தவிர கெடுதல்கள் எதுவும் நூறு சதவிகிதம் உங்களுக்கு நடக்காது.

No comments :

Post a Comment