Monday, 29 February 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (29.2.16 முதல் 6.3.16)

மேஷம்:

ராசிநாதன் எட்டில் சனியுடன் மறைந்தாலும் ராசியைக் குரு பார்ப்பதாலும் ஐந்துக்குடையவன் வலுப்பெறுவதாலும் இந்தவாரம் மேஷராசிக்கு வர இருக்கின்ற துன்பங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல உடனே விலகி விடும் என்பதால் மேஷராசிக்காரர்கள் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லாத வாரமாக இது இருக்கும்.

வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் இனிமேல் வேறுவிதமான வடிவங்களைப் பெறும். சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனிமேல் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். வீண் விரையங்கள் இனிமேல் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும்.

சிலர் நீண்ட தூர பிரயாணங்களை வேலை விஷயமாக இப்போது செய்வீர்கள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கைக்கெட்டும் தூரத்தில் மதிய உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. அலுவலகத்தில் நடக்கும் சில சம்பவங்கள் உங்களை எரிச்சல்படுத்திப் பார்க்கும் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

ராசியின் யோகாதிபதி புதனுடன் இணைந்து நட்பு நிலையில் ராசிநாதன் சுக்கிரன் இருப்பதால் இந்த வாரம் நண்பர்கள் மூலம் ரிஷப ராசிக்காரர்கள் ஆதாயங்களும், உதவிகளும் பெறும் வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அன்னிய, இன மத மொழி நண்பர்கள் நல்ல உதவிகளை செய்வார்கள்.

செவ்வாய் வலுவடைந்து ராசியைப் பார்க்கிறார் என்பதால் காரணமின்றி மற்றவர்கள் மீது எரிந்து விழுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் கூட உங்களது இந்த மாற்றத்தால் உங்களை விட்டு விலகி ஓடுவார்கள். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம்.

அப்பாவின் ஆதரவு இந்த வாரம் கிடைப்பது கஷ்டம். நீங்கள் மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எனவே மூன்றாம் மனிதரை நம்பாமல் நீங்களே எதிலும் நேரிடையாக செயல்படுவது நல்லது.

மிதுனம்:

ராசிநாதன் எட்டில் அமர்ந்து பனிரெண்டுக்குடைய சுக்கிரனுடன் இணைந்துள்ளதால் இந்த வாரம் தொலைதூரங்களில் இருந்து நல்ல செய்திகள் வரும் வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு நீண்ட தொலைவு பயணங்களும் மேற்கு திசையால் நன்மைகளும் பெற்றோரால் உதவிகளும் இருக்கும்.

ராசிநாதன் புதனுக்கு இந்த வாரம் முதல் சனிபார்வை விலகப் பெறுவதால் சுயத்தன்மை பெற்று உங்கள் ராசிக்கு நன்மை செய்யும் அதிகாரத்தை பெறுகிறார். எனவே ஏற்கனவே நீங்கள் யோசனையின்றி செய்த காரியங்கள் அனைத்தையும் இப்போது முறைப்படுத்தி நன்மைகளை வழங்குவார் என்பது உறுதி.

கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும். மூன்றில் இருக்கும் ராகுவால் சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும்.

கடகம்:

ராசியை இரண்டு சுபர்கள் வலுப்பெற்று பார்ப்பதாலும் பணவரவைக் குறிக்கும் தனஸ்தானம் வலுப்பெறுவதாலும் இந்த வாரம் கடக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருக்கும் கடன் தொகையோ, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சம்பள உயர்வு தொகையோ கிடைக்கும் வாரமாக இருக்கும்.

கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் அனைத்து கடகராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அவரவர் வயதுக்கேற்ற திருப்புமுனைகள் இப்போது நடக்கும். நடப்பவை அனைத்தும் உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் நீங்கள் மாற்றங்களை எதிர்கொள்ள ஆரம்பிக்கும் வாரம் இது.

இதுவரை இருந்து வந்த மிகச் சிறிய தயக்கத்தையும், சோம்பலையும் உதறித்தள்ளி எடுத்துக் கொண்ட காரியங்களில் சிறிதளவு முயற்சி செய்தாலே மிகப்பெரிய நன்மைகளை தருவதற்கு பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் எந்த விஷயத்திலும் தயக்கத்தை விட்டொழிக்கவும்.

சிம்மம்:

மாசி மாதம் முழுவதும் சிம்மத்திற்கு நல்ல மாதம் என்பதாலும் ராசியில் ராகு இருக்கும் தோஷத்தை அவருடன் இருக்கும் குருபகவான் நிவர்த்தி செய்வதாலும் அவயோககிரகங்கள் ஆறாமிடத்தில் இருப்பதாலும் இந்த வாரம் சிம்மராசிக்கு சிக்கல்கள் எதுவும் இல்லாமல் சிறப்புகள் மட்டுமே உள்ள வாரமாக இருக்கும்.

ஏழாமிடம் வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் இந்த வாரம் மீண்டும் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள்.

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சனைகள் தொந்தரவுகள் தராது. நடுத்தரவயதுடையவர்கள் உடல்நல விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிறு ஆரோக்கியக்குறைவு என்றாலும் கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தந்தை வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள்.

கன்னி:

ஆறு, பனிரெண்டாமிடங்கள் வலுப்பெற்று இருப்பதாலும் ஆறுக்குடையவன் பனிரெண்டாமிடத்தை பார்ப்பதாலும் இந்த வாரம் கன்னிராசிக்காரர்களுக்கு கடன் வாங்கி விரையம் செய்யும் அமைப்பு இருப்பதால் ஏதேனும் ஒரு வீடு வாங்குதல், கல்யாணம் போன்ற சுபகாரியங்களுக்கு கடன் வாங்க அடிபோடும் வாரம் இது.

வார ஆரம்பத்தில் கன்னிநாதன் புதன் ஐந்தாமிடத்தில் சுக்கிரனுடன் இணைந்து நண்பர் சனியின் பார்வையில் இருப்பதால் இந்த வாரம் கன்னிக்கு வருமானங்களும், சந்தோஷங்களும் உள்ள வாரமாக இருக்கும். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். வீண்வாக்குவாதங்களை தவிருங்கள்.

இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் போன்ற நல்ல விஷயங்கள் இந்தவாரம் இருக்கும். இன்னும் சில காலத்திற்கு உங்களுக்கு கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் கன்னி ராசிக்காரர்கள் துணிவுடன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்பது உறுதி.

துலாம்:

வார ஆரம்பத்தில் பத்துக்குடையவன் ராசியில் அமர்ந்து பத்தாமிடம் சுபத்துவம் அடைவதால் இனிமேல் துலாம் ராசிக்காரர்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் முன்னேற்றம் அடைந்து பொருளாதார மேன்மையை நீங்கள் அடையப் போகும் வாரமாக இது இருக்கும்.

மருந்து எப்போதுமே கசக்கும் என்றாலும் அது நோயை தீர்க்கும் என்பது உண்மை என்பதால் ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நடக்கும் மாற்றங்கள் அனைத்தும் நன்மையாகவே முடியும் என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. விரைவில் சனி முடிய இருப்பதால் இனிமேல் என்றென்றும் உங்களுக்கு சந்தோஷம்தான்.

தனம், வாக்கு, குடும்பஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் சனியால் இந்த மூன்று அமைப்புகளும் பாதிக்கப்படும் என்பதால் தனவரவு சுமாராகத்தான் இருக்கும். அதே நேரத்தில் கவலைப்படும்படியாக வருமானம் குறையவே குறையாது. உங்களுடைய தேவைகள் பரம்பொருளால் கண்டிப்பாக நிறைவேற்றித் தரப்படும்.

விருச்சிகம்

சென்ற வருடத்தை போல இந்த வருடம் கஷ்டங்கள் எதுவும் விருச்சிக ராசிக்கு இருக்காது என்பது உறுதி. அதிலும் ராசிநாதன் நீண்டநாள்களுக்கு ராசியில் ஆட்சி நிலை பெறுவதால் இனிமேல் ஏழரைச்சனி அமைப்பு உங்களுக்குக் கெடுதல்களைத் தராது என்பதால் விருச்சிக ராசிக்காரர்களின் வேதனைகள் தீரும் வாரமாக இது இருக்கும்.

இளைய பருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாரம் இது. வலிமை உள்ளதுதான் வாழும் எனும் அடிப்படையில் செழுமையான நம்பிக்கை மனம் கொண்ட விருச்சிக ராசிக்காரரான நீங்கள் இந்த ஜென்மச்சனிக் காலத்தை ப்பூ என ஊதித் தள்ளிவிடுவீர்கள்.

இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இந்தவாரம் உண்டு. அதேநேரம் செலவுகள் நிறைந்த வாரமாகவும் இது இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி மூலமும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலமும் செலவுகள் இருக்கும் என்பதை கிரகநிலைகள் காட்டுகின்றன.

தனுசு:

ராஜகிரகங்கள் அனைத்தும் தனுசுராசிக்கு சாதகமாக இருப்பதாலும் வாரம் முழுவதும் சந்திரன் நல்ல இடங்களில் வலம் வருவதாலும் இந்த வாரம் தனுசு ராசிக்கு செலவுகள் செய்வதற்கு ஏற்ப அதிகமான வருமானங்களும் லாபகரமான பிரயாணங்களும் உள்ள வாரமாக இருக்கும்.

தனுசுராசிக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. முப்பது வயதுகளில் இருக்கும் இளையபருவத்தினர் அடுத்த முப்பது வருடங்களுக்கு தங்கள் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டிய அனுபவங்களை இப்போது சனிபகவான் உங்களுக்கு தருவார் என்பதால் ஏழரைச்சனியை நினைத்து கலக்கம் எதுவும் தேவையில்லை.

அதேநேரத்தில் முப்பதுகளை தாண்டி நாற்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு இந்த ஏழரைச்சனி பொங்குசனியாக செயல்பட்டு நன்மைகளைத் தரும் என்பதால் நடுத்தர வயதுக்காரர்கள் இந்த ஏழரைசனியைக் கண்டு பயப்படவும் தேவையில்லை.

மகரம்:

பதினொன்றாமிடத்தில் சனியும் செவ்வாயும் கூடி இருப்பது ஒரு யோக அமைப்பு என்பதால் மகர ராசிக்காரர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்கு பின்னடைவுகள் எதுவும் இல்லாத முன்னேற்றங்கள் மட்டுமே இருக்கும் வாரமாக இது இருக்கும். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு மகரராசிக்கு தொட்டது துலங்கும்.

லாபாதிபதி செவ்வாய் பகவான் இந்த வாரம் முதல் சொந்த வீட்டில் நீண்ட நாட்கள் இருக்கப் போவதால் இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள் அமைந்து இனிமேல் மாதமானால் ஒரு நிம்மதியான வருமானம் வரக்கூடிய சூழல் வரும்.

இந்த வாரம் உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும். வாரம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள்.

கும்பம்:

ஏழாமிடத்தில் குரு இருந்து ஏழுக்கதிபதி ராசியில் இருப்பது கும்பராசிக்கு திருமண அமைப்புகளை துரிதப்படுத்தும் கிரக நிலைகள் என்பதால் இதுவரை திருமணம் ஆகாத கும்பராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளும் ஏற்கனவே மணமாகி முதல் திருமணம் முறிந்தவர்களுக்கு இரண்டாவது நல்ல அமைப்பு உருவாக உள்ள வாரமாகவும் இது இருக்கும்.

தசம அங்காரா எனும் நிலையில் தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் வலுவாக இருப்பதால் இந்த வாரம் முழுவதும் உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற இனங்களில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும்.

வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். ராசியை செவ்வாய் பார்ப்பதால் எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

மீனம்:

ஆறாமிடத்தில் சுபத்துவமான ராகு இருந்து உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் வலுவுடனும், எதிர்ப்புகளை அடக்கும் திறனுடனும் இருப்பதால் மீனராசிக்காரர்கள் எதைப்பற்றியும் கலங்காமல் காரியமாற்றும் வாரமாக இது இருக்கும்.

இதுவரை தடங்கலாகிக் கொண்டிருந்த தொழில் முன்னேற்றங்கள் அனைத்தும் எந்த ஒரு சிக்கலும் பின்னடைவும் இல்லாமல் முன்னேற்றமாக சென்று உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வாரமாக இது இருக்கும். ஆகஸ்டு மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு தொழில் விஷயத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு குறையும் இருக்காது.

வார ஆரம்பமே யோகத்துடன் ஆரம்பிப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் மனமகிழ்ச்சியான சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறி இப்போது வரன் உறுதியாகும். கலைஞர்களுக்கு வெற்றிகள் தரக்கூடிய அமைப்புகளும் நிகழ்சிகளும் இந்த வாரம் உருவாகும். .

No comments :

Post a Comment