Sunday, 21 February 2016

மாலைமலர் வார ராசிபலன் (22.2.2016 - 28.2.2016)

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் எட்டில் இருந்தாலும் அது அவருடைய ஆட்சி வீடு என்பதாலும் வார ஆரம்ப நாளன்று பவுர்ணமி யோகம் உண்டாவதாலும் இந்த வாரம் மேஷராசிக்கு கெடுதல்கள் எதுவும் இல்லாமல் நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரமாக இருக்கும்.

அதேநேரத்தில் இந்த வாரம் எவரையும் நம்பி ஜாமீன் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை இந்தவாரம் கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் பங்குச்சந்தை விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது.

இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் போன்ற விஷயங்கள் வரும். வருமானத்தைச் சேமிக்க முடியாமல் இந்த வாரத்திலேயே செலவும் செய்ய வேண்டி இருக்கும். புதிய முயற்சிகளையும் தொலை தூர பிரயாணங்களையும் இந்த வாரம் தவிர்க்கவும்.

ரிஷபம்:

ஏழாமிடத்தில் செவ்வாய், சனி அமர்ந்து ராசியை பார்ப்பதால் குறிப்பிட்ட சில ரிஷபராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணைவரிடம் வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும், கசப்பான அனுபவப் பரிமாறால்களும் இருக்கும் என்பதால் எல்லா விஷயத்திலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் இருக்க வேண்டிய வாரமாக இது இருக்கும்.

பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் குறிப்பிட்ட சிலர் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். பேச்சினால் தொழில் செய்யக்கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கு வீடுமாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கும்.

மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம்.

மிதுனம்:

ராசிநாதன் எட்டில் மறைந்தாலும் யோகாதிபதி சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் இந்த வாரம் எல்லா விஷயங்களும் மிதுனராசிக்கு இழுத்துக்கொண்டே போய் இறுதியில்தான் நிறைவாக முடியும் என்பதால் பொறுமை தேவைப்படும் வாரமாக இது இருக்கும். வலுப்பெற்ற செவ்வாய் ராசியை பார்ப்பதால் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.

நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. தந்தைவழியில் எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். உங்களின் ஆன்ம பலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட அனைத்தும் இனிமேல் கைகூடி வரும்.

தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனிதயாத்திரை போகமுடியும். குறிப்பிட்ட சிலருக்கு ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். கிரகங்கள் யோக நிலையில் இருப்பதால் இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

கடகம்:

ராசிநாதன் குருவுடன் இணைந்து பவுர்ணமி யோகத்துடன் இந்த வாரம் ஆரம்பிப்பதால் கடகராசிக்காரர்களுக்கு சென்ற சில வாரங்களாக எந்த விஷயங்களில் பிரச்சினைகள் இருந்து வந்ததோ அவை அனைத்தும் உங்கள் மனம்போல உங்கள் விருப்பப்படியே தீர்ந்து நன்மைகள் நடக்கும் வாரமாக இது இருக்கும்.

வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு இந்தவாரம் நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் ஆசி பெறுவீர்கள். ஆலயப்பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய வாரம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.

சிம்மம்:

மாசி மாதம் முழுவதும் ராசிநாதன் சூரியன் ராசியைப் பார்ப்பார் என்பதால் உங்கள் ராசியில் ராகு இருக்கும் தோஷமும் சனிபகவான் ராசியை பார்க்கும் தோஷமும் பூரணமாக விலகி சிம்மராசிக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரமாக இது இருக்கும்.

நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வாரம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உயரமான இடங்களுக்கு செல்லும் போது கவனம் தேவை. புதிய முயற்சிகள், முதலீடுகளை இந்த வாரம் தவிர்க்கவும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. குறுக்குவழி சிந்தனைகள் செயல்கள் கை கொடுக்காது. ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும்.

கன்னி:

மூன்றாமிடத்தில் கூடி இருக்கும் செவ்வாய், சனியும் ஐந்தாமிடத்தில் இணைந்திருக்கும் புதனும், செவ்வாயும் உங்களுடைய மனதைரியத்தையும், செயல்திறனையும் கூடுதலாக்கும் அமைப்பு என்பதால் இதுவரை இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று தயங்கிக் கொண்டிருந்த கன்னிராசிக்காரர்கள் யாவரும் துணிச்சலுடன் செயலாற்றும் வாரமாக இது இருக்கும்.

வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

துலாம்:

வாக்குஸ்தானத்தில் செவ்வாய் சனி கூடி ஐந்தாமிடத்தில் பவுர்ணமி யோகம் உண்டாவதால் இந்த வாரம் துலாம்ராசிக்காரர்கள் மனமுவந்து சொல்லும் வார்த்தைகள் பலிக்கும் என்பதால் துலாம்ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் வாரமாக இது இருக்கும்.

கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு இந்த வாரம் ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும். கருத்து வேற்றுமையால் சண்டை போட்டு பிரிந்திருந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்.

விருச்சிகம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் செவ்வாய் ராசியில் சனியுடன் இணைவதாலும் சூரிய, சந்திரர்கள் பவுர்ணமி யோகத்துடன் நேருக்கு நேர் அமர்ந்து தர்மகர்மாதிபதி யோகம் உண்டாவதாலும் இந்த வாரம் குறிப்பிட்ட சில விருச்சிகராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பேசிச் ஜெயிக்கின்ற வாரமாக இருக்கும்.

இந்த வாரம் சிலருக்கு மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போல தொழிலிலும், வீட்டிலும் ஏதேனும் ஒரு விஷயத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படும் நிலைமை இருக்கும். குறிப்பாக சிலர் வீட்டில் மனைவி, அம்மாவிற்கு நடுவிலும் அலுவலகத்தில் முதலாளிக்கும் மேனேஜருக்கும் நடுவிலும் மாட்டிக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது.

தனுசு:

ராசிநாதன் குருபகவான் சூரிய, சந்திரர்களுடன் இணைந்து மிகவும் நல்ல அமைப்பில் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஆரம்பிப்பதால் 30 வயதுகளில் இருக்கும் தனுசுராசிக்காரர்களின் பின்னடைவுகள் மற்றும் எதிர்மறை பலன்கள் அனைத்தும் இந்த வாரம் நீங்கி எதிர்காலம் பற்றிய நல்லவைகள் தொடங்கும் வாரமாக இது இருக்கும்.

செலவுகள் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் இருக்கும். பணம் இருந்தாலே பாதிப்பிரச்னை தீர்ந்து விடும் என்பதால் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பிரிட்ஜ், ஏசி, வாஷிங்மிஷின், செல்போன் போன்ற பொருட்களை வாங்குவீர்கள்.

சிலருக்கு பொன்பொருள் சேர்க்கை உண்டு. குழந்தைகள் பேரில் சேமிக்க முடியும். தனலாபங்கள் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.

மகரம்:

பதினொன்றில் இருக்கும் செவ்வாய், சனியும் ராசியில் இருக்கும் சுக்கிரனும், புதனும் மிகச்சிறந்த யோக அமைப்புகள் என்பதால் இந்த வாரம் மகர ராசிக்கு ஏற்கனவே இருந்து வரும் கெடுதல்கள் தடைகள் அனைத்தும் நீங்கி அதிர்ஷ்டம் ஆரம்பமாகும் வாரமாக இது இருக்கும்.

பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. பணப்புழக்கம் கையில் இருக்கும். கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்துவந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க இப்போது ஆரம்பங்கள் இருக்கும்.

போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம்.

கும்பம்:

வார ஆரம்பநாளில் உங்கள் ராசியிலேயே பவுர்ணமி யோகம் ஏற்பட்டு ஏழாமிடத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானும் இதில் இணைவதால் 30 வயதுகளுக்கு மேலாகியும் இதுவரை செட்டிலாகாமல் இருக்கும் இளம் வயது கும்ப ராசிக்காரர்கள் அனைவருக்கும் நல்ல தகவல்கள் கிடைக்கும் வாரமாக இது இருக்கும்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கும் இந்தவாரம் அதிகமாக நன்மைகள் நடைபெறும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும்..

சகோதர விஷயத்தில் நன்மைகளும், சுப நிகழ்ச்சிகள் இந்தவாரம் இருக்கும். இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவைத்தொகை கைக்கு வரும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது கருவுறுதல் இருக்கும்.

மீனம்:

பாக்கியஸ்தானத்தில் செவ்வாய், சனி இணைந்து பத்தாம் வீட்டைக் குருபார்ப்பதால் இந்த வாரம் மீனராசிக்காரர்களுக்கு தந்தை வழியில் செலவுகளும் விரையங்களும் ஏற்படும் வாரமாக இது இருக்கும்.

எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் இந்த வாரம் தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு இந்த மாதம் நல்லபலன்கள் அதிகம் இருக்கும்.

தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.

No comments :

Post a Comment