Saturday, 13 February 2016

2016 மாசி மாத பலன்கள்

மேஷம்

மாசிமாதம் உங்களின் ராசிநாதன் செவ்வாய் எட்டாம் வீட்டில் மறைந்து சனியுடன் இணைந்து பாபத்துவம் அடைவதால் இந்தமாதம் மேஷராசிக்கு தடைகளும் தாமதங்களும் கூடிய மாதமாக இருக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சுமாரான நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல மாதம் நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும். சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம்.

ரிஷபம்

மாசிமாதம் முழுவதும் ராசிநாதன் வலுவுடன் இருப்பதும் பத்தில் சூரியன் அமர்ந்து தன் நான்காம் வீட்டை பலப்படுத்துவதும் ரிஷபராசிக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் இந்த மாதம் உங்களுக்கு நல்ல சம்பவங்கள் நடக்கும் மாதமாக இருக்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் உண்டு. சுயதொழில் செய்பவருக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் உண்டு.

ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள்.. அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். மற்றவர்களால் மதிக்க படுவீர்கள். மேலதிகாரியின் தொந்தரவு இருக்காது.

தனலாபாதிபதிகள் வலுவாக இருப்பதால் தாராளமான பணவரவு இந்த மாதம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். வயதான சிலர் பேரன், பேத்திகளை பார்ப்பதற்காக வெளிநாடு போவீர்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள்.

மிதுனம்

கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் மாசிமாதம் முழுவதும் மிதுனராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நிச்சயம். ‘பருத்தி புடைவையாய்க் காய்த்தது’ என்பதைப் போல சுக்கிரனின் சுபபலம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அதிகமுயற்சி இல்லாமலே இந்த மாதம் அதிர்ஷ்டத்தினால் சில காரியங்கள் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். யோகக்கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இந்த மாதம் நல்லபடியாக நடக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு அவர்களின் வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் இந்த மாதம் இருக்கும். பெண்களால் லாபம் இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் உண்டு. எதிர்கால முன்னேற்றதிற்கான மாற்றங்கள் இந்த மாதம் நடைபெறும்.

ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இந்த மாதம் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.

கடகம்

மாதம் முழுவதும் சூரியன் எட்டில் இருப்பது. கடகராசிக்கு சாதகமற்ற நிலைதான் என்றாலும் குருபகவான் அவரைப் பார்ப்பதால் மாசிமாதம் எவ்வித சிக்கலும் இல்லாமல் நன்மைகளைத் தரும் மாதமாகவே அமையும் என்பது உறுதி. அதே நேரத்தில் சகல விஷயங்களும் முயற்சிகளுக்கு பின்பே வெற்றி அடையும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். உடல் நலத்தில் இந்த மாதம் அக்கறை காட்டவேண்டி இருக்கும்.

யாரையும் நம்பி எதையும் செய்து தருவதாக வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். மாதபிற்பகுதியில் ராசி சுபத்துவம் பெறுவதால் கெடுபலன்கள் குறைந்து நல்ல பலன்கள் நடைபெற ஆரம்பிக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். போலீஸ், கோர்ட், கேஸ் உள்ளவருக்கு சாதகமான திருப்பங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனகசப்புகள் விலகும்.

இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் இனிமேல் நடக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற முடியும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் நல்ல மாதம்.

சிம்மம்

ராசிநாதன் சூரியன் மாதம் முழுவதும் ராசியைப் பார்க்கும் அமைப்பு உருவாவதாலும் தொழில் ஸ்தானாதிபதி அவருடன் இணைந்து இருப்பதாலும் இந்த மாதம் சிம்மத்தின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நன்மை தரக்கூடிய மாறுதல்களும், உயர்வுகளும் உள்ள மாதமாக இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் தேவைகள் நிறைவேறுதல் இருக்கும்.

நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். குறிப்பிட்ட சில சிம்மராசிக்காரர்களுக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இந்த மாதம் வாங்குவீர்கள்.

சமுதாயத்தில் அனைத்து தரப்பு சிம்மராசிக்காரர்களுக்கும் இந்த மாதம் ஏதேனும் ஒரு வகையில் நன்மைகளை தரும் மாதமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். வெகு சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் இருக்கும். தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் நடக்கும்.

கன்னி

மாசிமாதம் முழுவதும் ராசிநாதன் புதன் நட்பு வலுவுடன் இருப்பது சிறப்பான ஒரு நிலை என்பதால் கன்னிராசிக்கு எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், வழிமுறைகளையும் இளைய பருவத்தினருக்கு சுட்டிக்காட்டும் மாதமாக மாசிமாதம் அமையும். மாத ஆரம்பத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்து நல்ல வீடுகளில் இருப்பதால் பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படாது.

வியாபாரிகளுக்கு இது சுமாரான காலகட்டம்தான். வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். அரசு, தனியார்துறை ஊழியர்கள் தங்களுடைய மேலதிகாரிகளின் பேச்சை கேட்டு செயல்படுவது நல்லது. சட்டத்தை மீறி யாருக்கும் சலுகைகள் காட்டாதீர்கள். காவல்துறை, சாப்ட்வேர் போன்ற நுணுக்கமான துறைகளில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து வேற்றுமைகளுக்கு விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிருங்கள்.

அடுத்தவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும் என்பதல் யாருக்கும் எதுவும் தருவதாக ப்ராமிஸ் செய்யும் முன் யோசிப்பது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருந்தாலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள்.. தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். பண வரவு தாராளமாக இருக்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

துலாம்

துலாம்நாதன் சுக்கிரன் புதனுடன் இணைந்து ஐந்தாம் வீட்டில் இருப்பதால் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த உங்களது அனைத்து முயற்சிகளும் மாசிமாதம் முதல் தடைகள் நீங்கி ஏழரைச்சனியின் தாக்கம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் செல்ல வைக்கும். இந்தமாதம் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த நேர்த்திக் கடன்களை செலுத்த முடியும்.

மாதம் முழுவதும் சனி செவ்வாய் இரண்டாம் வீட்டில் அமர்ந்து எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் தனம், வாக்கு, குடும்பஸ்தானம் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த மாதம் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் இருந்து பதினொன்றில் ராகு இருப்பது என்பது எப்பொழுதோ ஒருமுறை அமையும் விசேஷ அமைப்பு என்பதால் கிரகங்களால் தற்போது ஏற்பட்டிருக்கும் சாதக நிலையை உபயோகப்படுத்திக் கொண்டு துலாம்ராசிக்காரர்கள் தங்களது லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

குருபகவான் லாபஸ்தானத்தில் இருப்பதால் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் எந்தவித சிக்கலும் இன்றி நல்லபடியாக நடக்கும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். சூரியன் வலுவாக இருப்பதால் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் மாதம். கணவன், மனைவி உறவில் கருத்துவேற்றுமைகள் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

விருச்சிகம்

ராசிநாதன் செவ்வாய் ராசியில் இருப்பதால் ராசியும், ராசிநாதனும் சுபத்துவம் அடையும் நிலையில் விருச்சிகராசிக்கு மாசிமாதம் எவ்வித கெடுபலன்களையும் தராமல் நன்மைகளையே தரும் மாதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை மேலும் செவ்வாய் நீண்ட நாட்களுக்கு ராசியில் இருப்பார் என்பதால் ஜென்மச்சனியின் தாக்கம் இனிமேல் குறைவதோடு இனிமேல் விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரைச் சனியைப் பற்றி கலங்கத் தேவையில்லை. .

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் என்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே குடும்பத்தில் சேமிப்பு இருக்க வேண்டியது அவசியம். யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். நல்ல நண்பர்களும் சிறு பிரச்னைகளால் இந்தமாதம் எதிரிகளாக மாறுவார் எனபதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது. குழந்தைகளால் நல்ல சம்பவங்கள் இருக்கும்..

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். ஞானிகளின் ஜீவசமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்

தனுசு

ராசிநாதன் குருபகவான் ஒன்பதில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தை வலுப்படுத்துவதாலும் சூரியனும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதாலும் தனுசுராசிக்கு மாசிமாதம் நல்லபலன்களைத் தரும் மாதமாக இருக்கும் என்பதோடு இதுவரை இருந்த பிரச்னைகளும் சூரியனைக் கண்ட பனி போல இப்போது விலகும் என்பது உறுதி. எதிபார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள்.

எதிர்பாராத தனலாபங்கள் இந்த மாதம் இருக்கும். நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு நல்லதொகை கைக்கு கிடைக்கும். வீடு வாங்குவதற்கு இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்குகிறது. இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது.

ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த மாதம் யோகத்தை தரும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொண்டால் சிக்கல்கள் இருக்காது.

மகரம்

எட்டிற்குடையவன் இரண்டாம் வீட்டில் இருந்தாலும் அவருடன் புதபகவான் சுபத்துவத்துடன் இருந்து ராசியில் சுக்கிரன் இருப்பதாலும் ராசியை ராசிநாதன் பார்ப்பதாலும் மாசிமாதம் மகரராசிக்கு மேன்மைகளையும், நன்மைகளையும் தரும் மாதமாக இருக்கும். மகரராசிக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. ஆகஸ்டு மாதம் நடைபெறப்போகும் குருப்பெயர்ச்சி மிகவும் அற்புதமான பலன்களை மகரராசிக்கு தரும் என்பதல் நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும்.

நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு காரியம் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும். பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது நல்லது. ‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த மாதம் மகரராசிக்காரர்கள் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் சுபபலத்துடன் இருப்பதால் மனைவி, நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்சிகளும், சுபகாரியங்களும் இருக்கும். உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசம் வெளிமாநிலத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் உண்டு. வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள் நடக்கும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.

கும்பம்

ராசியில் யோகாதிபதி புதன் அமர்ந்து குருவின் பார்வையை பெற்று இருக்கும் நிலையில் மாசிமாதம் பிறப்பதால் கும்ப ராசிக்கு இப்போது இருந்துவரும் தடைகள் நீங்கி பொருளாதார மேன்மைகளையும், வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நன்மைகளையும் செய்யும் மாதமாக இது இருக்கும். இளைஞர்களுக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் மாதமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் தொழில்மேன்மை தனலாபங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகள் இந்த மாதம் உங்களுக்கு உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் தடைகள் போன்றவைகள் தீரும். உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். உற்சாகமாக இருப்பீர்கள்.. எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள்.

தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் தடைகள் இருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்கும். குருவின் பார்வையால் வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இந்த மாதம் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வரும் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்ல விதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம். எனவே வரும் வருமானத்தை முதலீடாக்குவது நல்லது.

மீனம்

மாசிமாதம் முழுவதும் ஆறுக்குடையவன் ஆறாமிடத்தைப் பார்த்து கெடுதல் தரும் நிலையில் இருந்தாலும் ராசிநாதனின் குருவின் பார்வை அவரை வலிமை இயக்க செய்யும் என்பதால் கெடுபலன்கள் எதுவும் மீனராசிக்கு இல்லாமல் நற்பலன்களையும், சாதகமான மாற்றங்களையும் தரும் மாதமாக மாசிமாதம் இருக்கும். இந்தமாதம் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு மேலே இருப்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு நன்மைகள் உண்டு.

தனலாபம் இந்தமாதம் உண்டு. பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் கையில் தாராளமாக நடமாடும். வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்குப் பலிக்கும். வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து இந்தமாதம் வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள்.

No comments :

Post a Comment