Monday, 1 February 2016

மாலைமலர் வார ராசி பலன்கள் (01-2-16 – 07-2-16)

மேஷம்

மேஷராசிநாதன் செவ்வாய் சுபவலு அடைவதால் இதுவரை கருத்து வேற்றுமைகளால் மனச்சங்கடத்தில் இருந்து வந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி சண்டை நீங்கும் வாரமாக இது இருக்கும். அதே நேரத்தில் எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம்.

குறிப்பிட்ட சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும்.

அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் மறுபடியும் லேசாக எட்டிப் பார்க்கும். அதேநேரத்தில் கடன் உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும். உங்கள் தோளில் கை போட்டபடி டீ சாப்பிடும் நண்பர் இன்னொரு கையால் உங்களுக்கு ஆகாதவரின் கையை குலுக்குவார். கவனமாக இருங்கள்.

ரிஷபம்

ராசிநாதன் எட்டாமிடத்தில் மறைவது ரிஷபராசிக்கு சாதகமற்ற நிலை என்றாலும் ராசிநாதனே ஆறுக்கும் உடையவனாகி எட்டில் மறைவதால் இந்த வாரம் உங்கள் செயல்களின் மூலம் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் நீங்கள் வெற்றி கொள்ளும் வாரமாக இருக்கும். பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உண்டாகும்.

இந்த வாரம் அறிவால் எதையும் சாதிப்பீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை முழுக்க நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். வயதானவர்கள் உடல்நலத்தின் மீது அக்கறை வைக்கவும்.

வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். ஒருசிலர் சுக்கிரனின் தயவால் திருமண உறுதி கிடைக்கப் பெறுவீர்கள். சிலர் இந்த வாரம் எதிர்கால வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பீர்கள்.

மிதுனம்

ராசிநாதன் புதன் ஏழாவது கேந்திரத்தில் இருந்து ஐந்துக்கு அதிபதி சுக்கிரனுடன் ராசியைப் பார்த்து வலுப்படுத்துவதால் கேட்ட இடங்களில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் வாரமாகவும் உங்களுடைய சிந்தனை செயல்திறன், தைரியம் ஆகியவை சிறப்பாக செயல்படும் வாரமாகவும் இது அமையும்.

ஒன்பது, பத்துக்குடையவர்கள் வலுப்பெற்று இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பான முறையில் செய்து முடிப்பீர்கள். அந்தஸ்து கௌரவம் உயர்வான நிலையில் இருக்கும். சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் மதகுருக்களின் நேரடி ஆசிகள் கிடைக்கும்.

தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். பாகப்பிரிவினை போன்ற பூர்வீக சொத்து பிரச்சனைகளை தள்ளி வையுங்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை அமைவதற்கான ஆரம்பங்கள் இந்த வாரம் இருக்கும்.

கடகம்

வார ஆரம்பத்தில் ராசிநாதன் நீசநிலை அடைந்து சனியுடன் இணைந்து பலவீனம் அடைவதால் இந்த வாரம் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் அவசரப்படாமல் நிதானமாக முன்னெச்சரிக்கையுடன் செய்ய வேண்டிய வாரமாக இருக்கும். அதே நேரத்தில் அடுத்த நாட்களில் ராசிநாதனுக்கு குருபார்வை இருப்பதால் எந்த கெடுதல்களும் உங்களை அணுகாது.

நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். அவசியத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியது வரலாம். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். மறைமுக எதிர்ப்புக்கள் மேலோங்கும். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம்.

வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். குறிப்பிட்ட சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள்.

சிம்மம்

ராசியில் ராகு அமர்ந்து சனியின் பார்வையைப் பெறுவது சும்மா இருக்கும் உங்களை யாராவது தூண்டி விட்டு கோபத்தில் வார்த்தைகளை கொப்பளிக்க வைக்கும் நிலை என்பதால் எவரிடமும் பேசும் முன்பு நிதானத்தையும், கவனத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய வாரமாக இது இருக்கும்.

புத்திர விஷயத்தில் நல்ல செய்திகள் இருக்கும். தெய்வதரிசனம் கிடைக்கும். ராசியில் ராகு இருப்பதால் எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள்.

தேவையற்ற விஷயங்களில் இந்த வாரம் மூக்கை நீட்ட வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. குறுக்குவழி சிந்தனைகள் செயல்கள் இந்த வாரம் கை கொடுக்காது. யாரையும் நம்ப வேண்டாம். பணம் எடுத்துப் போகும்போது மிகுந்த கவனம் தேவை. நீண்ட தூரப் பிரயாணங்களை தவிர்க்கலாம்.

கன்னி

ராசிநாதன் புதன் யோகாதிபதி சுக்கிரனுடன் இணைந்து பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் இந்த வாரம் உங்களுக்கு என்ன பிரச்னைகள் இருந்தாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்து அனைத்தையும் தனி ஆளாக நீங்கள் ஒருவரே சமாளிப்பீர்கள் என்பது உறுதி.

ஐந்தாம் இடம் ஐந்துக்குடைய சனியின் பெறுவதால் பிள்ளைகள் உங்களுக்கு பெருமை தேடித் தருவார்கள். பிள்ளைகளுக்குரிய கடமைகளை நீங்கள் சரியாக செய்ய முடியும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுவதால் வாரம் முழுவதும் அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு இது வசந்த காலம்.

துலாம்

வார ஆரம்பத்தில் பத்துக்குடைய சந்திரன் நீசபங்கமாவதும் ராசிநாதன் மூன்றாமிடத்தில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தைப் பார்ப்பதுமான பலமான நிலை துலாம் ராசிக்கு ஏற்படுவதால் உங்களுடைய அனைத்து முயற்சிகளும் இந்த வாரம் வெற்றி பெறுதலும், அலுவலகங்களில் சுமுகமாக சூழ்நிலை உங்களுக்கு இருத்தலுமான நல்ல நிகழ்வுகள் நடக்கும் வாரமாக இருக்கும்.

ராசி வலுவுடன் இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகள் நல்ல வருமானத்துடன் எந்தவித பாதிப்பும் இன்றி சுமுகமாகவே நடக்கும். ஆறுக்குடைய குரு பதினொன்றில் இருப்பதால் சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம்.

குறுக்குவழி சிந்தனைகள் இப்போது வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

விருச்சிகம்

ராசிக்கும், ராசிநாதனுக்கும் சுபர்பார்வை இல்லையென்றாலும் ராசிநாதன் செவ்வாய் சுபரின் வீட்டில் இருப்பதால் இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லாத வண்ணம் சாதகமான, சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும் என்பது உறுதி.

ராசியில் சனி இருப்பதால் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். அதேநேரத்தில் அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். பெண்களுக்கு மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்.

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இளையவர்களுக்கு இனிமேல் இருக்காது. புதியதாக எந்தப் பிரச்னையும் வராது. இருக்கும் பிரச்னைகளும் தீருவதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு வழி திறக்கும். விருச்சிகத்திற்கு இனிமேல் கஷ்டங்கள் வர காரணங்கள் இல்லை.

தனுசு

ஐந்திற்குடையவன் அந்த வீட்டைப் பார்த்து ஏழுக்குடையவன் ஏழைப் பார்த்து ராசி குருவின் பார்வையில் இருப்பதால் இந்த வாரம் வேலை, தொழில் விஷயமாக தனுசு ராசிக்காரர்கள் பிரயாணம் செய்ய வேண்டிய வாரமாகவும், அதனால் பிரயோஜனம் உள்ள வாரமாக இருக்கும்.

செலவு செய்தே ஆக வேண்டும் என்பதால் இந்த வாரம் வருமானமும் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் எல்லோரும் கடன் தரமாட்டார்கள். கடன் வாங்குவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்பதால் செலவு செய்வதற்கு கடன் வாங்காமலேயே வருமானம் வரும்.

தொழில் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. குருவின் பலத்தால் பணத்தால் கஷ்டங்கள் இருக்காது. சிலருக்கு வெகுநாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் தற்பொழுது முடியும். வேற்றுமத நண்பர்கள் இப்போது கை கொடுப்பார்கள்.

மகரம்

ஏழுக்குடைய சந்திரன் வார ஆரம்பத்தில் நீசம் பெற்று ராசிநாதன் சனியுடன் இணைவதால் இந்த வாரம் கணவன், மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரும். மூன்றாம் மனிதரின் கோள்மூட்டலை நம்பி ஒருவருக்கொருவர் மனச்சங்கடத்திலும் இருப்பீர்கள்.

எட்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாடு சம்மந்தப்பட்ட விஷயங்கள் கைகொடுக்கும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத மறைமுக இலாபம் கிடைக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். சிலருக்கு வேலை மாறுதல், இடம் மாற்றங்கள் ஆகியவை உண்டு.

மேலிடத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் குழப்பங்கள் இருக்கலாம். பருவவயது குழந்தைகள் ஏதாவது வம்பிழுத்துக் கொண்டு வரலாம். ராசிநாதன் வலுவால் அந்தஸ்து கௌரவம் கூடும்படியான செயல்கள் இருக்கும். பொதுஇடத்தில் மதிப்பும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.

கும்பம்

ஒன்பதில் செவ்வாய், பத்தில் சனி, ஏழில் ராகு என சாதகமற்ற நிலைகள் இந்த வாரம் இருப்பது போல தோன்றினாலும் எதிர்ப்புகளை குறிக்கும் சந்திரன் நீசமடைவதால் இந்தவாரம் உங்களுடைய உடல், மனம் இரண்டும் புத்துணர்ச்சியுடன் உற்சாகத்துடன் இருக்கும் வாரமாக இருக்கும்.

செவ்வாய் வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். எந்த ஒரு விஷயத்திலும் சோம்பலை ஒதுக்கித் தள்ளி சுறுசுறுப்புடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.

ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த வாரம் முன்னேற்றமாக இருக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

மீனம்

எட்டில் செவ்வாய் அமர்ந்து இரன்டாம் வீட்டைப் பார்ப்பது பணவரவைத் தடுக்கும் என்றாலும் பத்தாமிடம் வலுப்பெறுவதால் இந்த வாரம் மீனராசிக்கு மிகப்பெரிய கெடுதல்கள் எதுவும் இன்றி அனைத்து விஷயங்களும் உங்கள் கையை மீறிப் போகாமல் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வாரமாக இருக்கும்.

அதேநேரத்தில் ராசிநாதன் குரு ராகுவுடன் இணைந்து வலிமை இழப்பதால் உங்களுடைய செயல்களில் “இரண்டும்கெட்டான் தனம்” இருக்கும். சில விஷயங்களில் சட்டென ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிப்பீர்கள். இது உங்களை சுறுசுறுப்புடன் செயல்பட முடியாமல் தடுக்கும்.

எட்டாமிடம் வலுப்பெறுவதால் புது விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. என்னதான் எதிரி சுக்கிரன் வலுப்பெற்றாலும் ராசிநாதன் குருவின் பார்வை அவருக்கு இருப்பதால் பிரச்னைகள் வருமோ என்று உங்களை யோசிக்க வைக்கலாமே தவிர கெடுதல்கள் எதுவும் நூறு சதவிகிதம் உங்களுக்கு நடக்காது.

No comments :

Post a Comment