Monday, 4 January 2016

மாலைமலர் வார ராசிபலன் (3.1.16 முதல் 9.1.16)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

ராசியை ராசிநாதனும் யோகாதிபதி குருவும் பார்க்கும் யோகமான வாரம் இது. 2016-ம் ஆண்டு மேஷ ராசிக்கு பின்னடைவுகள் எதுவும் இல்லாத வருடமாகவும் இருப்பதோடு ஏற்கனவே உள்ள சிக்கல்களை தீர்க்கும் வருடமாக இருக்கும் என்பதால் வருடத்தின் முதல் வாரம் உங்களுக்கு யோக வாரமாகவே இருக்கும்.

எட்டில் இருக்கும் சனியால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில ஏமாற்றங்கள் இருக்கும் என்பதால் எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக் கொடுத்துப் போவதின் மூலம் சிக்கல் இன்றி செல்லலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

இரண்டாமிடம் வலுப் பெறுவதால் நல்ல பணவரவு இருக்கும் என்பதால் பிரச்னைகள் எதுவும் உங்களுக்கு பெரியதாகத் தெரியாது. சூரிய வலுவால் வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு உண்டு. கணவர், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு இருப்பீர்கள்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் ராசியை பார்த்து பலப்படுத்தும் நிலையில் பூரண ராஜயோகாதிபதி சனிபகவானும் சுக்கிரனுடன் இணைந்து ராசியை பார்ப்பது ரிஷபத்திற்கு மிகவும் நல்ல அமைப்பு என்பதோடு செவ்வாய் ஆறாமிடத்தில் இருப்பதால் புதுவருடத்தின் முதல் வாரம் யோகமாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். வியாபாரிகளுக்கு இது நல்ல லாபம் தரும் வாரமாக அமையும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக காவல் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும்.

வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் திருமணம் உறுதியாகும்.

மிதுனம்:

வருடத்தின் முதல் வாரத்தில் ஏழுக்குடையவனும், மூன்றாம் அதிபதியும் பரிவர்த்தனை ஆவதாலும் தனாதிபதி சந்திரன் ராகுவுடன் இணைவதாலும் இந்த வாரம் வாழ்க்கைத்துணை மூலமாக தனலாபங்கள் கிடைப்பதும். நீண்டநாள் கிடைக்காத நிலுவைத்தொகை வருவதும் உள்ள வாரமாக இது இருக்கும்.

எட்டில் ராசிநாதன் இருப்பதால் சிலருக்கு வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு, ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகள் வெற்றி பெறும். வெளிநாட்டுப் பயணம் செல்வீர்கள். வேலை மாற்றம், ஊர் மாற்றம், இடம் மாற்றம் போன்றவைகள் நடக்கும். எந்த மாற்றம் நடந்தாலும் அது உங்கள் எதிர்கால நன்மைக்கே என்பது உறுதி.

சகாயஸ்தானம் வலுப்பெற்ற நிலையில் இந்த வாரம் ஆரம்பிப்பதால் தகுந்த நேரத்தில் யாராவது ஒருவர் கடவுள் போல வந்து உங்களுக்கு கை கொடுத்தும், காசு கொடுத்தும் உதவுவார் என்பதால் மிதுன ராசிக்காரர்கள் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.

கடகம்:

இரண்டில் குருவும் ஆறில் சூரியனும் சுபத்துவமான நிலையிலும் பரிவர்த்தனை யோகத்திலும் அமைந்திருப்பதால் புதுவருடத்தின் முதல் வாரம் மங்களகரமாகவும், பணவரவுடனும் கடகராசிக்கு அமையும் என்பது ஜோதிட விதி. பத்தாம் இடத்தை தொழில் ஸ்தானாதிபதி பார்ப்பதும் இதை உறுதி செய்கிறது.

சிலருக்கு அரசு வேலைவாய்ப்பு அல்லது அரசு உதவிகள் உண்டு. அப்பாவின் அன்பும் ஆதரவும் இப்போது கிடைக்கும். குழந்தைகளினால் நல்ல விஷயங்கள் உண்டு. அரசு ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த மேல் வருமானம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு நல்ல அனுபவங்கள் இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.

வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இப்போது கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் உடனடியாக அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும், கிடைக்கும் காசு செலவாகலாம்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியனும் ஐந்துக்குடைய குருபகவானும் தங்களுக்குள் வீடுகளை மாற்றிக் கொண்டு ஒருவர் வீட்டில் இன்னொருவர் அமர்ந்திருக்கும் யோகமான வாரம் இது. வருடத்தின் முதல் வாரம் சிம்மராசிக்கு யோகமாக அமைவதால் வருடம் முழுவதுமே மனமகிழ்ச்சி இருக்கும் என்பதை கிரக நிலைகள் காட்டுகின்றன.

இந்த வாரம் உங்களில் சிலருக்கு வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில கசப்பான நிகழ்ச்சிகளும் கருத்து வேற்றுமை மற்றும் சண்டை சச்சரவுகள் இருக்கும். அதே நேரத்தில் எதுவும் எல்லை மீறி போகாது. அதேநேரம் தனகாரகன் வலுப் பெற்ற நிலையில் இருப்பதால் இந்த வாரம் நல்ல வருமானமும் இருக்கும்.

வேலையின்றி இருப்பவர்கள் நல்லவேலை இப்போது கிடைக்கப் பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் நன்மைகளும், பூர்வீக சொத்து விஷயத்தில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி உங்கள் பக்கம் சாதகமாக அனைத்தும் நடக்கும்படியான மாற்றங்களும் இருக்கும்.

கன்னி:

இன்னும் மூன்று வாரங்களில் ராசியில் இருக்கும் ராகுபகவான் விலக போவதாலும் ராசிநாதன் ஐந்தாமிடத்தில் சுபத்துவமுடன் அமர்ந்திருப்பதாலும் புதுவருடத்தின் முதல் வாரம் வருடம் முழுவதும் உங்களை சந்தோஷமாக வைத்திருக்கும் என்பதை காட்டும் வாரமாக இது இருக்கும்.

வியாபாரிகளுக்கும் சுய தொழில் செயபருக்கும் இது மிகவும் நல்ல நேரம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புதிய கிளைகள் ஆரம்பிக்கலாம். எந்த ஒரு செயலும் தற்போது வெற்றியாக முடியும். கலைஞர்கள் புதிய திருப்பங்களை சந்திப்பீர்கள். மாணவர்களுக்கு இது ஜாலி வாரம்.

கணவன், மனைவி உறவு சந்தோஷமாக செல்லும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். லாபம் வரும். வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இப்போது நடக்கும்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரனும் யோகாதிபதி சனியும் இணைந்து இரண்டாம் இடத்தில் அமர்ந்து சுக்கிர பகவான் தனது எட்டாம் இடத்தைப் பார்ப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டாகும் வாரம் இது. மேலும் வருடம் முழுவதும் எந்த கஷ்டமும் உங்களுக்கு இருக்காது என்பதை நிருபிக்கும் வாரமாகவும் இது இருக்கும்.

எல்லா விஷயங்களும் உடனே நடக்காமல் தள்ளிப் போகும் வாரம் இது. அனைத்திலும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் உங்களுக்கு தேவைப்படும். அதே நேரத்தில் புதனும் சுக்கிரனும் வலுவான நிலையில் நல்ல அமைப்புக்களில் இருப்பதால் முடிவில் எல்லாமே நல்லபடியாக அமையும்.

அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலிடத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

விருச்சிகம்:

ராசிநாதன் தனது ஆறாம் வீட்டை பார்த்து பலப்படுத்தி மனசஞ்சலங்களை உருவாக்கினாலும் இரண்டு, பத்திற்குடைய சூரியனும், குருபகவானும் பரிவர்த்தனை யோகத்தில் ஒருவருக்கொருவர் வீடுகளை மாற்றிக் கொண்டு அமர்ந்திருப்பதால் வேலை, தொழில் போன்றவைகளில் மேன்மைகள் நடக்கும் வாரம் இது.

பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் இருக்கும். நீண்ட நாட்களாக புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இப்போது கருவுறுதல் இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ஒரு சிலர் குலதெய்வ வழிபாட்டுக்கு குடும்பத்துடன் பிரயாணம் செல்வீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

ராசியில் சனி சுக்கிரன் சம்பந்தப்படுவதால் சற்று குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனகலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும்.

தனுசு:

ராசிநாதன் சூரியனும் ஒன்பதிற்குடைய பாக்கியாதிபதி குருபகவானும் பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்திருக்கும் நல்ல வாரம் இது. யோகாதிபதி செவ்வாயும், பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து தன் ஐந்தாம் வீட்டையே பார்ப்பதால் குறைகள் எதுவும் சொல்லமுடியாத முதல் வாரமாக இது இருக்கும்.

அரசு ஊழியருக்கு இந்த வாரம் நல்லவாரம். குறிப்பாக காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். சூரியன் வலுவாக இருப்பதால் சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும்.

பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். தெய்வ வழிபாடு செய்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் நற்பெயர் வரக்கூடியவைகள் நடக்கும்.

மகரம்:

ராசியில் ஒன்பதுக்குடைய புதன் அமர்ந்து ராசிநாதன் சனி பார்வையில் இருப்பதால் இந்த வாரம் திடீர் அதிர்ஷ்டங்களும் குடும்பத்தில் சந்தோஷ நிகழ்ச்சிகளும் நடைபெறும் வாரமாக இது இருக்கும். இந்த வாரத்தின் கிரக நிலைகளே புது வருடம் உங்களுக்கு சிறப்பாக இருக்கின்றது என்பதையும் உறுதி செய்யும்.

கடன் பிரச்னையாலோ அல்லது ஆரோக்கியக்குறைவாலோ உங்கள் மனம் குழப்ப நிலையில் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. எட்டுக்குடையவன் பரிவர்த்தனையாவது உங்களுக்கு நன்மைகளைச் செய்யாது என்பதால் கவனம் தேவை

மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாரம் இது. குறிப்பாக பெண்களுக்கு மிக நல்ல பலன்கள் நடக்கும். எதிர்பாராத வகையில் இதர வருமானங்கள் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.

கும்பம்:

ராசியை குருபகவான் பார்த்து ராசிநாதன் சனி யோகாதிபதி சுக்கிரனுடன் இணைந்து சூரியன் பதினொன்றில் அமர்ந்திருக்கும் யோகவாரம் இது. புத்தாண்டின் முதல் வாரம் யோகமான அமைப்பில் ஆரம்பிப்பதால் வருடம் முழுவதுமே உங்களுக்கு யோகமாக இருக்கும் என்பதற்கு அச்சாரமான வாரம் இது.

இரண்டாமிடத்தில் உள்ள கேதுவால் தனம், வாக்கு, குடும்பம் மூன்றிலும் சாதகமற்ற பலன்கள் நடக்கும் என்பதால் என்னதான் சிறப்பான பலன்கள் என்றாலும் வருமானம் மற்றும் தனலாபம் கொஞ்சம் இடிக்கத்தான் செய்யும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது.

பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகளும் நன்றாக நடக்ககூடிய கும்ப ராசிக்காரர்களுக்கு “பருத்தி புடவையாய்க் காய்த்தது” என்பது போல மிகவும் அற்புதமான பலன்கள் இந்த வாரம் உண்டு. எனவே தங்களது நீண்டகால திட்டங்களை செயல்படுத்த கும்ப ராசிக்கு இது நல்ல நேரம்.

மீனம்:

ராசிநாதன் ஆறில் மறைந்தாலும் ஆறுக்குடைய சூரியனுடன் வீடுகளை மாற்றிக் கொண்டு பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்திருப்பதாலும் தனாதிபதி எட்டில் அமர்ந்து தன் வீட்டையே பார்ப்பதாலும் எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மறைமுக வருமானம் உள்ள வாரமாக இது இருக்கும்.

இந்த வாரம் உங்களுக்கு நல்ல வருமானங்களும், பண வரவுகளும் இருக்கும் என்றாலும் எந்த ஒரு யோகமும் முழுப்பலன் செய்ய ஐந்துக்குடையவன் பலமாக இருக்க வேண்டும் என்னும் விதிப்படியும் குருபகவான் ஆறில் மறைந்துள்ளதால் அனைத்திலும் ஏதேனும் குறை இருக்கத்தான் செய்யும்.

விவசாயிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பங்குதாரர்களிடம் கருத்து வேறுபாடு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

No comments :

Post a Comment