Monday, 25 January 2016

மாலைமலர் வார ராசிபலன் (25.1.16 - 31.1.16)

மேஷம்:

வாரம் முழுவதும் மூன்றுக்குடைய புதன் வலுப்பெறுவதால் இந்த வாரம் உங்களுடைய மனதைரியம், ஆக்கத்திறன்கள், வலுவடைந்து உங்களின் எல்லா செயல்களிலும் புத்திசாலித்தனமும், விவேகமும் வெளிப்படும் வாரமாக இது இருக்கும்.

இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வாரம் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் உங்களுக்கு காதல் வரக்கூடும். மாணவர்கள் படிப்பைத் தவிர மற்ற அனைத்து உல்லாசங்களிலும் ஈடுபடுவீர்கள். ஆனால் தேர்வு நேரத்தில் ஏதோ ‘மாய மந்திரம்’ செய்து பாசாகி விடுவீர்கள்.

வயதானவர்கள் உடல் நலத்தில் அக்கறை வைக்க வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு மறதியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்தோம் என்பதும் மறந்து போய், வேறு எதையாவது செய்து அதனால் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ரிஷபம்:

பாக்கியஸ்தானம் வலுவிழந்து காணப்படுவதால் பூர்வீகச்சொத்து தொடர்பான விஷயங்கள் மற்றும் தந்தையால் கிடைக்கும் நன்மைகள் தடைப்படும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலர் வயதான தந்தைக்கான மருத்துவ செலவுகள் மற்றும் தந்தையால் விரையம் போன்ற அமைப்புகளை எதிர்கொள்ளும் வாரமாகவும் இது இருக்கும்.

பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை நான்காமிடத்து குருபகவான் ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

குருபகவான் நான்காமிடத்தில் இருக்கும் பொழுது குடும்பச்சொத்துக்களை விற்கக்கூடாது. பூர்வீகச்சொத்துகளையோ வீடுநிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை தள்ளி வைப்பது நல்லது.

மிதுனம்:

வருமானத்தில் குறை சொல்லமுடியாத வாரம் இது. அதிலும் செவ்வாய், புதன் இரண்டு நாட்களும் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு குழந்தைகளால் செலவுகளும், குழந்தைகளுக்கான எதிர்கால அமைப்பில் முதலீடு போன்ற பலன்களும் இருக்கும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும்.

பணிபுரிபவர்களுக்கு நெடுநாட்களாக தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும் சம்பள உயர்வும் இப்பொழுது கிடைக்கும். தர்மகாரியங்கள் மற்றும் அறப்பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் வரும். ஒருசிலர் உங்களை ஆலயத்தொண்டில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். கம்ப்யூட்டர் சம்பந்தமாக படித்த இளைய பருவத்தினருக்கு நல்ல வேலை இப்போது கிடைக்கும்.

கடகம்:

நீங்கள் சொன்ன சொல்லும், கொடுத்த வாக்குறுதியும் பலிக்கும் வாரம் இது. ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக அமர்ந்து வார ஆரம்பத்தில் பவுணர்மி யோகம் உண்டாகுவதால் கடகத்திற்கு இது யோக வாரம்தான். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை வாழ்க்கையில் கிடைக்காத நல்ல அனுபவங்கள் இப்போது கிடைக்கும்.

பெரும்பாலான ராஜகிரகங்கள் இப்போது கடக ராசிக்கு நன்மை தரும் இடத்தில் உள்ளதால் எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது என்பதால் உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

சிம்மம்:

எதிர்ப்புகள் உங்களை லேசாக அசைத்து பார்க்கும் வாரமாக இது இருக்கும். ராசிநாதன் ஆறில் அமர்ந்து சனியால் பார்க்கப்படுவதால் நீங்களும் சற்று குழம்பித்தான் போவீர்கள். சிம்மம் என்றுமே சிங்கம் என்பதால் எந்த ஒரு எதிர்ப்பும் வார இறுதியில் உங்களை விட்டு விலகி ஓடும் என்பது நிச்சயம்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பொருட்கள் சேதமின்றி மீதமுமின்றி லாபத்திற்கு விற்பனையாகும். வியாபாரிகள் தொழில் இடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

முதலீடு இன்றி தனது புத்திசாலித்தனத்தை வைத்து சொந்ததொழில் செய்பவர்கள், மெக்கானிக்குகள் போன்ற சுயதொழிலர்கள், கடுமையான உழைப்பாளிகள், ஆலைத்தொழிலாளர்கள் விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வருமானம் மற்றும் பணவரவுகளுக்கு எந்தக் குறையும் இருக்காது.

கன்னி:

கன்னியின் மேல் ஆக்கிரமித்து உங்களின் உடல்நலம், மனநலம் இரண்டையும் பாதித்துக் கொண்டிருந்த ராகுபகவான் இந்த வாரம் முதல் விலகி அடுத்த ராசிக்கு செல்வதால் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகளும், சிக்கல்களும் தீர்வதற்கான ஆரம்ப வாரமாக இது இருக்கும்.

கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. உங்களில் எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நல்ல வாரம் இது. மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், குடும்ப சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். இதுவரை தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த மந்தநிலையும் அதிர்ஷ்டக்குறைவும் விலகும்.

பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு துறை சார்ந்த நெருக்கடிகள் இருக்கும். மேலதிகாரிகளிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். செய்யாத தவறுக்கு வீண்பழி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை உருவாகும்.

துலாம்:

வார இறுதியில் பதினொன்றாம் இடத்தில் ராகுவும், குருவும் இணைவதால் ஏழரைச்சனியின் பிடியில் இருந்து நீங்கள் விலகுவதற்கான ஆரம்ப வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பாக்கிய ஸ்தானம் வலுவடைவதால் எதிர்பார்க்காத மறைமுகமான பண வரவுகள் இந்த வாரம் உண்டு.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில் வியாபாரம் போன்ற அமைப்புகள் மீண்டும் எழுச்சியுடன் நடைபெறப் போகும் நல்ல காலம் வந்து விட்டது. கவலை வேண்டாம். நீண்டகால மருத்துவம் தேவைப்படும் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் நோய் கட்டுக்குள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

முப்பது வயதுக்கு உட்பட்டவர்களை இந்த முதல் சுற்று ஏழரைச்சனி கடுமையாக வாட்டி வதைத்து விட்டது. இன்னும் வேலை திருமணம் போன்றவைகள் நல்லபடியாக அமைந்து செட்டிலாகாத துலாம் ராசி இளைய பருவத்தினர்கள் அதிகம். அவர்களெல்லாம் இனிமேல் நல்ல பலன்கள் நடக்கப் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

ராசிநாதன் பனிரெண்டில் மறைந்து ஆறாமிடத்தை வலுப்படுத்தும் வாரம் இது என்பதால் நடுத்தர வயதை தாண்டியவர்கள் தங்களுடைய உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் வைக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இந்த வாரம் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருப்பது கண்டுபிடிக்கப்படும்.

வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள். வங்கிக்கடன் வாங்கி வீடு கட்டவோ நல்ல பிளாட் வாங்கவோ முடியும்.

வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

தனுசு:

வார ஆரம்பமே சந்திராஷ்டம நிலையில் ஆரம்பித்தாலும் ராசியில் சுபர் அமர்ந்து ராசியை சுபர் பார்ப்பதால் இந்த வாரம் குறிப்பிட்ட சிலருக்கு நீண்ட பயணங்களும், ஆன்மீகம் சம்பந்தபட்ட யாத்திரைகளும் இருக்கும். வார இறுதியில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சியால் குறிப்பிட்ட சிலருக்கு தொழில் ரீதியான வருமானங்கள் உண்டு.

நடுத்தர வயதுடையவர்கள் உடல்நலத்தில் அதிக கவனமுடன் இருப்பது நல்லது. சிறிய விஷயமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அனைத்து மருத்துவ பரிசோதனையும் செய்து குணமாக்கிக் கொள்ளுங்கள். அலட்சியமாக இருந்தால் சிறிய குறைகள் பெரிதாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இளையபருவத்தினர் இதுவரை இருந்து வந்த ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவீர்கள். இந்த வாரம் மிகப் பெரிய யோகத்தை தரப்போவதோடு இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாகவும் அமையப் போகிறது.

மகரம்:

எட்டுக்குடைய சூரியன் ராசியில் அமர்ந்து அவரை செவ்வாய் வலுப்பெற்று பார்ப்பதால் எதிலும் பொறுமையாக இருக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். அதே நேரத்தில் உங்களை எரிச்சல் படுத்தி பார்ப்பதற்கென்றே சில வருவார்கள் என்பதால் உங்கள் பொறுமையும் எல்லை மீறும் வாரமாகவும் இது இருக்கும்.

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். நீண்ட நாட்களாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும்.

யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். இதனால் மனவருத்தம் வீண் விரோதங்கள் வரலாம். வேலை தேடிக் கொண்டிருக்கும் இளம் பெண்களுக்கு நீங்கள் விரும்பியவாறே அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

கும்பம்:

கும்பத்திற்கு இந்த வாரம் குறைகள் எதுவும் சொல்வதற்கு இல்லை. கோட்சார நிலைகள் சாதகமாக அமைந்தும் ஒரு கும்பராசிக்காரர் கஷ்டபடுகிறார் என்றால் அது அவருடைய பிறந்தநேர ஜாதக அமைப்புபடி சரியில்லாத தசாபுக்திகளோ, வீட்டில் கணவன்-மனைவி, குழந்தைகள் யாருக்காவது விருச்சிக ராசியாக இருந்தால் மட்டுமே கும்பத்திற்கு கஷ்டம்.

நீண்ட நாட்களாக கமிஷனை எதிர்பார்த்து செய்துவந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும். உறவினர்களால் சொத்து சம்பந்தமான வில்லங்கம் வரலாம். இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் மாறுவார்கள். வழக்குகள் சாதகமாக இருக்காது. சின்ன விஷயங்கள் பெரிதாகி தொந்தரவு தரும்.

வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை விலகும்.

மீனம்:

வாரஇறுதியில் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி மீனத்திற்கு நல்ல யோகத்தை தரும் என்பதோடு வார ஆரம்பமே சந்திரன் ஆட்சியாகவும், பவுர்ணமி யோகமாகவும் ஆரம்பிக்கிறது என்பதால் அஷ்டமச்சனி முடிந்தும் இன்னும் சிக்கல்கள் தீராத மிக சில மீன ராசிக்காரர்களுக்கும் நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும் வாரமாக இது இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றபடி நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்னையால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும்.

இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். வியாபாரிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்த வாரம் மிகவும் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

1 comment :

  1. நன்றி. வாழ்க வளமுடன்,முழுநிறைவுடன்.

    ReplyDelete