Monday, 18 January 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (18.01.2016 – 24.1.2016)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

இந்தவாரம் மேஷராசிக்கு எதிர்ப்புக்களை உருவாக்கி உங்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்ற வாரமாக இருக்கும். சிலருக்கு பொருளாதார நெருக்கடியை தந்து கடன் வாங்க வேண்டிய சூழலையும் உருவாக்கலாம். யாரிடமும் கடுமையான வாக்குவாதமோ, கருத்து மோதல்களிலோ ஈடுபட வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு தடைகளுக்குப் பிறகு வெற்றி உண்டு. அரசுத்துறையில் உயரதிகாரிகளாக இருப்பவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நிர்ப்பந்தங்கள் வரலாம். கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ண வேண்டுமென்றே சிலர் திரிவார்கள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள்.

இதுவரை குலதெய்வ வழிபாட்டில் குறை வைத்திருப்பவர்கள் குலதெய்வத்தை தரிசிக்கமுடியாதவர்கள் இப்போது நேர்த்திக்கடன்களை தேடிச் சென்று நிறைவேற்ற ஆரம்பிப்பீர்கள். ஒரு சிலருக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புனித யாத்திரைகளும், நவக்கிரக சுற்றுலாக்களும் இருக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு இந்தவாரம் கெடுதல்கள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்து வந்த முட்டுக்கட்டை விலகும். குறிப்பிட்ட சிலருக்கு வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உல்லாசப் பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் உண்டு.

இதுவரை தாமதமாகி வந்த அனைத்து விஷயங்களும் தடைகள் நீங்கி உங்களின் மனம் போல் நடக்கும். இளையபருவத்தினருக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் உண்டு. தொழில் சிறப்படையும். வியாபாரம் விருத்தியாகும். வேலை செய்யும் இடத்தில் புகழ் பெறுவீர்கள்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. பழைய கடனை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். மறைமுகமான எதிரிகள் உருவாகும் காலம் இது. எவரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். எதையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்து செய்யுங்கள்.

மிதுனம்:

மிதுனத்திற்கு இப்போது தொட்டது துலங்கும் நேரம் என்பதால் ஜீவன அமைப்புகளான வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் நீங்கள் நீண்ட காலமாக செயல்படுத்த நினைத்திருந்த திட்டங்களை இப்போது செய்யலாம். அதன் மூலம் உங்களுக்கு லாபங்கள் இருக்கும்.

அம்மாவழி ஆதரவு இப்போது பரிபூரணமாக உண்டு. தாய்வழி சொந்தங்கள் உதவுவார்கள். மூத்த சகோதரிகளால் லாபம் இருக்கும். நீங்களும் அவருக்கு உதவ முடியும். சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் திடீர் லாபம் உண்டு.

நான்காம் வீட்டில் ராகுபகவான் இருப்பதால் வயதான தாயாரை கொண்டவர்கள் அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. வீடு விஷயமான எந்த விஷயங்களையும் இன்னும் இரண்டுவாரம் ஒத்திப் போடுங்கள். புதிய வாகனம் வாங்குவதையும் இரண்டு வாரம் தவிர்க்கலாம்.

கடகம்:

இந்த வாரம் உங்களின் அந்தஸ்து கௌரவம் உயரும்படியான சம்பவங்களும் குடும்பத்தில் மனமகிழ்ச்சியான நிகழ்ச்சிகளும் இருக்கும். வீடு வாகனம் போன்ற விஷயங்களில் இதுவரை நிறைவேறாத எண்ணங்கள் நிறைவேறும். கணவன் மனைவி பூசல்கள் எதுவும் இருக்காது. ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள்.

உங்களின் உடல்நலம் மனநலம் திருப்திகரமாக இருக்கும். தாயாரைக் காண சொந்த ஊருக்குச் செல்லலாம். அவரின் ஆசீர்வாதங்களை இந்த வாரம் பெறுவீர்கள். தாயை இழந்தவர்கள் தெய்வமாகி விட்ட அவரிடம் உங்கள் பிரச்னைகளை மனம் விட்டு கூறி வேண்டினால் உங்கள் தேவைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார்.

எந்த வழக்கும், வம்பும் கிட்ட வராது. வியாபாரிகள் மேன்மை அடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு நல்ல முன்னேற்றமான திருப்பங்கள் நடக்கும். அலுவலகத்தில் பெண்கள் உதவுவார்கள். குறிப்பாக பெண்களை மேலதிகாரியாக கொண்டவர்களுக்கு அவர்கள் மூலம் நன்மை உண்டு.

சிம்மம்

சிம்மத்திற்கு சிக்கல்கள் எதுவும் வரப்போவதில்லை. வாழ்க்கைத்துணை மூலம் இந்த வாரம் நன்மைகள் இருக்கும். மேலதிகாரிகள் தொந்தரவுகள் இந்தவாரம் இருக்காது. வேலைப்பளு கம்மியாக இருக்கும். விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். பணவரவிற்கு குறையில்லை.

தேவைப்படும் உதவிகள் சரியான சமயத்தில் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்கு விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. தேவையற்ற சென்டிமென்டுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். மாமன், மச்சான் அண்ணன், தம்பி என்றாலும் வாயும், வயிறும் வேறு என்று புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

தந்தை வழி உறவினர்களால் சிறு பிரச்சினைகள் வரும். பங்காளித் தகராறு உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்களில் கவனமாக இருங்கள். தந்தையின் சொத்தை பிரிப்பது போன்ற பாகப்பிரிவினைகள் இப்போது வேண்டாம். கூடுமானவரை சொத்துப் பிரச்னைகளைத் தள்ளி வைப்பது நல்லது.

கன்னி

இந்த வாரம் கன்னிராசிக்கு கெடுதல்கள் எதுவும் இல்லாத நன்மையான வாரமாகவே இருக்கும். குறிப்பாக நல்ல பணவரவு உள்ள வாரம் இது. பிரிந்தவர்கள் ஒன்று கூடுவீர்கள். நீண்ட நாள் பார்க்காத நண்பர்கள் உறவினர்களை இந்த வாரம் பார்த்து மனம் மகிழ உரையாடலாம்.

விருந்து கொடுக்கலாம். புதிய வீடு வாங்கலாம். இருக்கும் வீட்டை மேம்படுத்தலாம். புதிய நல்ல ஆடம்பரமான வாகனம் அமையும். வசதிக்குறைவான வீட்டில் இருப்பவர்கள் நல்ல வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். பிரச்சினைகள் எதுவும் கிட்டே வராது. எதிலும் வெற்றி கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களும் வலிய வந்து உதவுவார்கள். சூதாட்டம் பங்குச்சந்தை கை கொடுக்கும். பெண்கள் தொடர்பான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும்.

துலாம்:

இந்தவாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு சுமாரான வாரமாகத்தான் இருக்கும் .அதேநேரத்தில் பணிபுரியும் இடங்களில் பிரச்சனைகள் எதுவும் வராது. காவல்துறை போன்ற யூனிபாரம் அணிந்து வேலை செய்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும் வாரம் இது. எவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். கூடுமான வரையில் சண்டையை தவிர்ப்பது நல்லது.

யாரையாவது நீங்கள் திட்டினால் அது பலித்து பெரிய மனஸ்தாபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். உயிர் நண்பர்கள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்களிடம் சற்றுத் தள்ளியே நில்லுங்கள். அரசியல்வாதிகள் பேசும் போது கவனம் தேவை. அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு நல்லபலன்கள் இருக்கும்.

கணவன் மனைவி உறவு சிறப்பாகவே இருக்கும். அனுசரித்துப் போனால் குடும்பத்தில் அமைதி இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல காலம்தான். பொருட்கள் தங்காது. விற்றுத் தீர்ந்து விடும். ஆனால் விற்ற லாபம் எங்கே என்று கல்லாவில் தேடுவீர்கள். பணம் இருக்காது. வேறு வழியில் செலவழிந்து போய்விடும்.

விருச்சிகம்:

எதையும் சாதிக்க முடியும் வாரம் இது. உங்களின் கௌரவம், மதிப்பு, மரியாதை மீண்டும் புத்துயிர் பெறும். இதுவரை உங்களின் பேச்சைக் கேட்காதவர்கள் உங்களின் சொல்லைக் கேட்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து போனவர்கள் தவறை உணர்ந்து இணையத் தூது விடும் நேரம் இது.

தெய்வ அனுகூலம் கிடைக்கும். சூரியன் வலுவாக உள்ளதால் திடீர் பண வரவுகளும் எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும் வாரமாகவும் இந்த வாரம் இருக்கும். கணவன்-மனைவி உறவு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பெரிய உரசல்கள் இன்றி சந்தோஷமாகவே இருக்கும்.

கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள்.

தனுசு:

இந்தவாரம் எந்த ஒரு விஷயமும் சுலபமாக முடியாமல் இழுத்துக்கொண்டே போகும் வாரமாக இருக்கும். விரயாதிபதி வலுப்பெறுவதால் செலவு செய்து ஏதேனும் ஒரு பொருள் குடும்பத்திற்கு இந்த வாரம் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல விஷயங்கள் உண்டு.

கூட்டுத் தொழில் சிறப்படையும். தந்தைவழி உறவினர்களால் செலவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் யோசித்து தலையிடவும். வேலை செய்யும் இடங்களில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். வழக்கு சம்மந்தமாக போலீஸ், கோர்ட் என்று அலைந்தவர்கள் இனிமேல் சாதகமான திருப்பங்களை காண்பார்கள்.

அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல வாரம்தான். பெண்கள் மூலமாக இந்த வாரம் வீண் பிரச்சினைகள் வரும் என்பதால் அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பது நல்லது. குறிப்பாக பெண்களின் கீழே வேலை செய்பவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்:

இதுவரை தொழில், வியாபாரம், வேலை செய்யுமிடங்களில் இருந்து வந்த அதிருப்தி, ஏமாற்றம் ஆகியவை விலகி உங்கள் மனம் போல காரியங்கள் இந்தவாரம் முதல் மளமளவென்று நடைபெறும். நீண்டநாட்களாக குழந்தை பிறக்காதவர்களுக்கு இன்னும் ஆறு மாதத்திற்குள் குழந்தை உருவாகும்.

அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

கணவன் மனைவி உறவு மனத்தாங்கலுடன் இருந்தாலும் அதில் அன்பு இழையோடும் என்பதால் எந்தப் பிரச்னையும் இருக்காது. உலகிலேயே நல்ல கணவன் என்று மனைவியிடம் பெயரெடுத்த ஆண்மகனே கிடையாது என்று சொல்வார்கள். மனைவியைத் திருப்திப்படுத்தும் மந்திரத்தை ஆண்கள் தெரிந்து கொள்ளுவது நல்லதுதான்.

கும்பம்:

வார ஆரம்பத்தில் பணவரவு குறைந்து நெருக்கடிக்குள்ளாக்கும் என்பதால் எதையும் யோசித்து செய்ய வேண்டிய இது வாரமாக இருக்கும். அதேநேரத்தில் வராது என்று கைவிட்ட பணம் எதிர்பாராத இடத்திலிருந்து வரும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும்.

மனைவி வழி உறவினர்களுடன் மனவருத்தம் ஏற்படலாம். அவர்களிடம் உதவிகள் எதுவும் கேட்காமலும், அவர்களுக்கு உதவிகள் எதுவும் செய்யாமலும் ஒதுங்கி நிற்பது புத்திசாலித்தனம். வெளிநாடு, வெளிமாநிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், நீண்டதூரப் பயணங்களும் இருக்கும்.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கடந்த சிலமாதங்களாக இருந்து வந்த தடைகள் விலகப் போகிறது. இதுவரை இருட்டில் இருந்து வந்த நீங்கள் வெளிச்சத்திற்கு வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை வரும். குல தெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற முடியும்.

மீனம்:

செவ்வாய் எட்டில் இருந்து இளைய சகோதரர்களை உங்கள் விருப்பத்திற்கு எதிராக நடக்கும்படி செய்தாலும், மூத்தவர் என்ற முறையில் மன்னித்து பொறுத்துப் போவீர்கள். ‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்’ என்றபடி இளையவர்களுக்கு ஒன்று என்றால் மனம் பதைத்துப் போவீர்கள்.

அனைத்து விஷயங்களும் கிணற்றுக்குள் போட்ட கல்லாக இருந்து உங்களை டெண்சனாக இருக்கும் வாரமாக இது இருக்கும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வியாபாரிக்களுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும்.

பணவரவு சுமாராக இருக்கும். புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் நீண்ட காலம் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு உங்கள் எண்ணம் போலவே நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கான அடிப்படை நிகழ்ச்சிகள், ஆள் அறிமுகங்கள் இப்போது நடைபெறும்.

2 comments :

 1. Dear sir

  Mithuna rasi rahu is in 3rd position. But you written 4th place result. I am just pointing.

  Thanks & Regards
  Arul Kumar Rajaraman

  ReplyDelete
  Replies
  1. ராகு வரும் 29ம் தேதிதான் மாறுகிறார். அதுவரை நான்காமிடம்தான்

   Delete