Monday, 11 January 2016

மாலைமலர் வார ராசிபலன் (11.1.2016 முதல் 17.1.2016)

மேஷம்:

ராசிநாதன் வலுவால் இந்த வாரம் மேஷராசிக்காரர்களுக்கு எதிர்ப்புகளை ஜெயிக்கும் வல்லமையும், எதையும் நிதானமாக சிந்தித்து எதிர்கொள்ளும் போக்கும் உண்டாகும் என்பதால் இந்த வாரம் உங்களுக்கு நல்லவாரம்தான். ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பது யோகநிலைமை என்பதால் பணவரவும், சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கும்.

எவரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண்வாக்குவாதங்கள், தேவையற்ற விவாதங்கள், அரசியல்பேச்சுக்கள், அரட்டைகள் போன்றவைகள் வேண்டவே வேண்டாம். இதன் மூலம் வேலை செய்யும் இடங்களில் உங்களின் மதிப்பையும், மரியாதையும் கீழிறங்கச் செய்வார் அஷ்டமச் சனி.

மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அக்கா தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு திருமணம் உறுதியாகும்..

ரிஷபம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ராசியைப் பார்ப்பதும் பணத்திற்குக் காரணமான புதபகவான் வக்ரகதியில் தன் வீட்டைத் தானே பார்ப்பதும் இந்த வாரம் ரிஷபராசிக்கு எதிலும் நன்மைகளையும், புத்துணர்ச்சி மற்றும் புதிய சிந்தனைகளையும் கொடுக்கும் வாரம் என்பதால் இந்த வாரம் யோக வாரமே.

தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் சூடுபிடித்து நாளுக்கு நாள் விருத்தி அடையும். இதுவரை இருந்து வந்த விரையங்கள் இனிமேல் இருக்காது. சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முடியும். எதிரிகள் ஒழிவார்கள். போட்டிகள் விலகும். கடன்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

சிலருக்கு வேலைமாற்றம் அல்லது டிபார்மெண்ட் மாற்றம் அல்லது டிரான்ஸ்பர் போன்ற பலன்கள் நடக்கும். அவைகள் எதிர்காலத்துக்கு நல்லது என்பதால் மாற்றத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சிண்டு முடிந்து விட சகுனிகள் தோன்றுவார்கள் என்பதால் கவனம் தேவை.

மிதுனம்:

மிதுனநாதன் புதன் வக்கிரமாக இருந்தாலும் அவர் தன் வீட்டையே பார்ப்பது யோகநிலைமை என்பதால் மிதுனராசிக்காரர்களின் அபாரமான புத்திசாலித்தனமும் அடுத்தவர்களை துல்லியமாக எடைபோடும் உங்களுடைய நுணுக்கமான திறமைகளும் வெளிப்படும் வாரமாக இது இருக்கும்.

ராசிநாதன் புதன் இப்போது வக்கிரநிலையை அடைந்தாலும் குருவின் பார்வையினால் அவர் சுபவலுப் பெறுவதால் வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் மனம் வருத்தப்படும்படியான நிகழ்ச்சிகள் இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து வார இறுதியை சந்தோஷமாக கழிப்பீர்கள் என்பது உறுதி.

வேலை, தொழில் செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் வெகு நாட்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். வக்கிர புதனால் இந்த வாரம் உங்களின் மதிப்பு மரியாதை கூடும்படியான நிகழ்ச்சிகள் இருப்பதோடு அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் யாராவது உங்களுக்கு உதவி செய்யும் வாரமாக இருக்கும்.

கடகம்:

இரண்டு நாட்கள் இந்த வாரம் சந்திராஷ்டம நாட்களாக அமைந்தாலும் உங்களது ராசிநாதன் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் அடுத்த குருப்பெயர்ச்சி நடக்கும் ஆகஸ்டு மாதம்வரை கடகராசிக்கு சந்திராஷ்டம தோஷம் இல்லை என்பதால் இந்த வாரம் உங்களுக்கு நன்மைகளை செய்யும் வாரமாக இருக்கும்.

பிள்ளைகள் விஷயத்தில் மனக்குறைகளையும், சங்கடங்களையும் ஐந்தாமிட சனி ஏற்படுத்துவார் என்பதால் பருவவயதுக் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் மேல் அக்கறை காட்டி அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதும், தெரிந்து கொள்வதும் நல்லது.

நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும்.

சிம்மம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சூரியனும், குருபகவானும் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதும் ஐந்து, ஒன்பதாம் இடங்கள் வலுப்பெறுவதும் சிம்மராசிக்கு யோகமான அமைப்புகள் என்பதால் இதுவரை சில விஷயங்களில் உங்களுக்கு இருந்து வந்த பிடிவாதத்தை நீங்கள் தளர்த்திக் கொண்டு எந்த ஒரு விஷயத்தையும் புதிய கோணத்தில் நீங்கள் அணுகும் வாரமாக இது இருக்கும்.

உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இனிமேல் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.

ஆரோக்கியக்குறைவையும், உடல்நலப்பிரச்சினைகளையும் சந்தித்தவர்கள் சீக்கிரமாக குணமடைவீர்கள். மருத்துவர்களுக்கு அடங்காத நோய்களும் இப்போது பரம்பொருளின் கருணையால் விரைவில் குணமாகும். இதுவரை மருத்துவத்துக்கென ஒரு தொகையை ஒதுக்கி வைத்தது விலகி இனிமேல் அப்படி செய்ய வேண்டியது இருக்காது.

கன்னி:

இன்னும் இரண்டு வாரங்களில் ராகுபகவான் ராசியில் இருந்து விலகுவதாலும் ராசிநாதன் புதன் வக்கிரத்தில் இருந்தாலும் நான்காம் வீட்டில் அமர்ந்து குருவின் பார்வையில் இருப்பதாலும் இளைய வயது கன்னிராசிக்காரர்களுக்கு எதிர்கால கனவுகள் நிறைவேற ஆரம்பிக்கும் வாரமாக இது இருக்கும்.

சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்த வாரம் நன்மையை அளிக்கும். குடியானவனின் வீட்டில் குதூகலம் இருக்கும், கலைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சிறப்படைவார்கள்..

ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பிள்ளைகளால் செலவுகளும், அவர்களின் படிப்பு முன்னேற்பாடுகளுக்கான அலைச்சல்களும் உங்களுக்கு இருக்கும்.

துலாம்:

ராசிக்கு இருபுறமும் சனி, ராகு எனும் இரண்டு பாபக்கிரகங்கள் இருந்து இதுவரை எல்லா விஷயங்களிலும் உங்களுக்குத், தடைகளையும், விரையங்களையும் கொடுத்து வந்த பாபக்கர்த்தாரி அமைப்பு இன்னும் இரண்டு வாரத்தில் விலகப் போகிறது என்பதால் துலாம் ராசிக்காரர்கள் துயரங்கள் இன்றி சந்தோஷப்படும் வாரமாக இது இருக்கும்.

இந்த கால கட்டத்தில் அதிர்ஷ்டம் கொஞ்சம் குறையும். சிறு விஷயங்களுக்குக் கூட மிகப் பெரிய முயற்சிகள் தேவைப்படும். எனவே எந்த ஒரு விஷயத்தையும் அசட்டையாகவும் கவனக்குறையாகவோ எடுத்துக் கொள்ளாமல் முழு கவனத்துடன் செய்வதன் மூலம் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள்.

தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.

விருச்சகம்:

ராசியில் ஜென்மச்சனியோடு இயற்கைச்சுபரான சுக்கிரபகவான் இருப்பதால் இந்த வாரம் கடல் .நடுவே மிதப்பவனுக்கு கட்டை ஒன்று சிக்கினார் போல இத்தனை பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் நீங்கள் நிதானமாக செயல்படுவதற்கான நல்ல அமைப்புகள் இந்தவாரம் உருவாவதால் விருச்சிகத்திற்கு இது நல்ல வாரம்தான்.

பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை சனிபகவான் ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். அதே நேரத்தில் பெரிய இழப்புக்களுக்கும் வாய்ப்பு இல்லை.

தனுசு:

ராசிநாதனின் பரிவர்த்தனையால் ராசி வலுவாவதோடு சூரியனும், செவ்வாயும் வலுப்பெறுவதாலும் இந்தவாரம் தனுசுராசிக்காரர்களின் மனிதநேயமும் அடுத்தவர்களுக்கு உதவும் தன்மையும் உங்களின் அருகில் உள்ளவர்களுக்கு வெளிப்படும் வாரமாக இது இருக்கும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் உடனடியாக தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வாழ்க்கையை இழந்தவர்களுக்கு புதிய அமைப்புக்கள் இந்த வாரம் தோன்றும்.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும்.

மகரம்:

மகரராசியின் ஆறு, எட்டு, பனிரெண்டுக்குடையவர்களான புதன், சூரியன், குருபகவான் மூவரும் ஒருவருக்கொருவர் சம்மந்தப்படுவதாலும் ஆறு, எட்டு, பனிரெண்டாம் பாவங்கள் வலுப்பெறுவதாலும் இந்த வாரம் மகரராசிக்காரர்கள் நிழலின் அருமையை வெயிலில் தெரிந்து கொள்வது போன்ற சம்பவங்கள் நடக்கும் வாரமாக இருக்கும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக இந்த வாரம் கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும்.

குடும்பத்தைப் பிரிப்பதற்கு சகுனி வேலை செய்வதற்கு மூன்றாவது நபராக ஒருவர் உருவாவார் என்பதால் எவரையும் நம்பாமல் குடும்பத்து பிரச்சினைகளை கணவர்-மனைவி இருவர் மட்டும் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வதன் மூலம் பிரச்னைகளை ஜெயிக்கலாம்.

கும்பம்:

ராசிநாதன் சனி சுக்கிரனுடன் இணைந்திருக்க ராசியைக் குருபார்க்கும் வாரம் என்பதால் இந்த வாரம் கும்பராசிக்காரர்களின் குடும்பங்களிலும், வீட்டிலும் சுபகாரியங்களுக்கான முன்னோட்டங்கள் மற்றும் முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். மேலும் சிலருக்கு சுபகாரிய விரைய செலவுகளும் இருக்கும்.

வாரம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மேம்பாடானதாகவும் பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டி ருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு நிரந்தரமாக கடன்கள் அடைந்து நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும்.

மீனம்:

தன, லாபஸ்தானம் எனப்படும் இரண்டு, பதினொன்றாம் இடங்கள் இந்த வாரம் வலுப்பெற்று தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் அந்த பாவத்தை பார்ப்பதால் இந்த வாரம் வேலை, தொழில், வியாபரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நீங்கள் ஒன்றுக்கு இரண்டாக லாபங்களைச் சம்பாதிக்கும் வாரமாக இருக்கும்.

நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

எந்த ஒரு விஷயமும் வெற்றி தரும். ஆரம்பிக்கும் காரியத்தை சுபமாக முடிக்க முடியும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

No comments :

Post a Comment