Monday, 7 December 2015

மாலைமலர் வார ராசி பலன்கள் (7-12-2015 – 13-12-2015)

இந்த வாரம் எப்படி ?

மேஷம்:

மேஷநாதன் செவ்வாய் இந்த வாரம் ராகுவிடம் இருந்து விலகுவதும் ராசிக்கு குரு சுக்கிரன் ஆகிய இரண்டு சுபர்களின் பார்வை இருப்பதும் நல்ல யோக அமைப்புகள் என்பதால் உங்களுக்கு இப்போது தொழில் வருமானம் மற்றும் பெண்கள் தொடர்பான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும்.

தந்தை வழி உறவினர்களால் சிறு பிரச்சினைகள் வரும். பங்காளித் தகராறு உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்களில் கவனமாக இருங்கள். தந்தையின் சொத்தை பிரிப்பது போன்ற பாகப்பிரிவினைகள் இப்போது வேண்டாம். கூடுமானவரை சொத்துப் பிரச்னைகளைத் தள்ளி வைப்பது நல்லது.

வாரத்தின் இரு நாட்கள் சந்திராஷ்டம நாட்களாக இருப்பதால் எதிலும் கவனமாக நிதானமாக நடந்து கொள்வது அவசியம். நீண்ட தூர பிரயாணங்களை வார ஆரம்பத்தில் ஒத்தி வைப்பது நல்லது. பயணங்களால் சில சங்கடங்கள் இருக்கலாம்.

ரிஷபம்:

பூமி சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் வீட்டு கட்டிக் கொடுக்கும் பில்டர்கள் செங்கல், மணல், ஜல்லி போன்றவை விற்பனை செய்யும் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபங்கள் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட நாள் வராத வாடகை குத்தகை பணம் இந்த வாரம் வசூலாகும்.

இதுவரை குலதெய்வ வழிபாட்டில் குறை வைத்திருப்பவர்கள் குலதெய்வத்தை தரிசிக்க முடியாதவர்கள் இப்போது நேர்த்திக்கடன்களை தேடிச் சென்று நிறைவேற்ற ஆரம்பிப்பீர்கள். ஒரு சிலருக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புனித யாத்திரைகளும், நவக்கிரக சுற்றுலாக்களும் இருக்கும்.

வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் பெண்கள் உதவுவார்கள். குறிப்பாக பெண்களை மேலதிகாரியாக கொண்டவர்களுக்கு அவர்கள் மூலம் நன்மை உண்டு.

மிதுனம்:

மிதுனத்திற்கு இப்போது தொட்டது துலங்கும் நேரம் என்பதால் ஜீவன அமைப்புகளான வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் நீங்கள் நீண்ட காலமாக செயல்படுத்த நினைத்திருந்த திட்டங்களை இப்போது செய்யலாம். அதன் மூலம் உங்களுக்கு லாபங்கள் இருக்கும்.

அம்மாவழி ஆதரவு இப்போது பரிபூரணமாக உண்டு. தாய்வழி சொந்தங்கள் உதவுவார்கள். மூத்த சகோதரிகளால் லாபம் இருக்கும். நீங்களும் அவருக்கு உதவ முடியும். சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் திடீர் லாபம் உண்டு.

நான்காம் வீட்டில் ராகு பகவான் செவ்வாயுடன் இணைந்திருப்பதால் வயதான தாயாரை கொண்டவர்கள் அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. வீடு விஷயமான எந்த விஷயங்களையும் இன்னும் ஒருமாதம் ஒத்திப் போடுங்கள். புதிய வாகனம் வாங்குவதையும் ஒருமாதம் தவிர்க்கலாம்.

கடகம்:

கடகராசிக்கு இந்த வாரம் எந்தவிதமான எதிர்மறைபலன்களும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு இதுவரை நடந்து வந்த சாதகமற்ற நிலை மாற்றம் அடைந்து இனிமேல் அனைத்தும் உங்கள் பக்கம் நன்மையாக திரும்பும் நிலை ஆரம்பிக்கிறது.

யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ரியல்எஸ்டேட் தொழிலர்கள் நல்ல பணவரவு ஒன்றினை இப்பொழுது அடைவார்கள்.

இரண்டிற்குடைய சூரியன் வலுவாக உள்ளதால் திடீர் பண வரவுகளும் எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும் வாரமாகவும் இந்த வாரம் இருக்கும். கணவன்-மனைவி உறவு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பெரிய உரசல்கள் இன்றி சந்தோஷமாகவே இருக்கும்.

சிம்மம்:

ராசியை சனி பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் பிடிவாதத்தைக் காட்டுவீர்கள். குடும்பத்தில் ஈகோ பார்க்காமல் விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் அனைத்து பிரச்னைகளையும் வெற்றிகரமாக தீர்க்கலாம் என்பதை புரிந்து கொண்டீர்கள் என்றால் இந்த வாரம் உங்கள் வாரம்தான்.

மூன்றில் இருக்கும் சுக்கிரனால் பெண்கள் மூலமாக இந்த வாரம் வீண் பிரச்சினைகள் வரும் என்பதால் அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பது நல்லது. குறிப்பாக பெண்களின் கீழே வேலை செய்பவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த வாரம் காட்டுகிறது.

கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள்.

கன்னி:

இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள்.

அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

மனம் உற்சாகமாக இருக்கும். யார் வீட்டுப் பணமாவது உங்கள் கையில் புரளும். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும்.

துலாம்:

மூத்த சகோதரஸ்தானம் வலுவாக இருப்பதால் அண்ணன், அக்காக்கள் மூலமாக நன்மைகளும், உதவிகளும் உண்டு. நீண்ட தூரத்தில் இருக்கும் தாயாரை தேடிச்சென்று பார்த்து ஆசீர்வாதம் பெற்று வருவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது.

தொழில், வியாபாரம் போன்றவைகளில் மிகவும் நல்ல பலன்களும் பண வரவுகளும் இருக்கும். செவ்வாய் வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். குறிப்பாக, வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

வெளிநாடு, வெளிமாநிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், நீண்டதூரப் பயணங்களும் இருக்கும். ஸ்டேஷனரி, புக்ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இது முன்னேற்றமான வாரமாக இருக்கும்.

விருச்சிகம் :

கடந்த சில மாதங்களாக மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் முதல் நிம்மதியை தரும் சம்பவங்களும் நல்ல செய்திகளைக் கேள்விப்படுதலும் இருக்கும். இனிமேல் எதையும் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் பிறக்கும் வாரம் இது.

ஜென்மச்சனி நடப்பதால் பொருளாதார நிலைமைகள் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. தேவையற்ற வீண் செலவுகளை தவிருங்கள். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாமல் எதிர்த்தவர்கள் இனிமேல் மனம் மாறி உங்களுக்கு சாதகமாக திரும்புவார்கள்.

கிரக நிலைமைகள் சாதகமாக இல்லை என்றாலும் ராசிநாதன் வலுப்பெற்றால் ராசிக்கு கெடுதல்கள் நடக்காது என்ற விதிப்படி உங்களுக்கு இந்த வாரம் கெடுபலன்கள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும். அதே நேரத்தில் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் தேக்க நிலைகளும் இருக்கும்.

தனுசு:

சனி பகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் குறிப்பிட்ட சிலருக்கு வேலைக்காரர்களால் விரையங்களும், அவர்கள் மூலம் பண இழப்பு நிகழ்ச்சிகளும் நடக்கும் என்பதால் கொடுக்கல், வாங்கல்களிலும் வெளி இடங்களுக்கு பணத்தை கொடுத்து விடுவதிலும் கவனம் தேவை. குறிப்பாக வேலைக்காரர்கள் திருடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள்.

பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வியாபாரிக்களுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும்.

மகரம்:

பனிரெண்டாம் இடம் வலுப்பெறுவதால் குறிப்பிட்ட சிலருக்கு இந்த வாரம் பிரயாணங்களும், அலைச்சல்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபங்களும் இருக்காது. கூடுமானவரை நீண்ட தூர பிரயாணங்களை ஒத்தி வைப்பது நல்லது. ராசியை பார்க்கும் செவ்வாயால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை வரலாம்.

நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சுக்கிரனின் வலுவால் கலைஞர்களுக்கு தற்போது நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். புகழ் அடையும் வாய்ப்பும் இருக்கிறது. குறிப்பாக பெண் கலைஞர்களுக்கு மிக சிறந்த வாரமாக இது இருக்கும்.

கும்பம்:

ராசிக்கு ஏழில் குரு. பதினொன்றில் புதன் பத்தில் ராசிநாதன் ஒன்பதில் சுக்கிரன் என கும்பராசிக்கு நிறைவான அமைப்புகளை கிரகங்கள் கொடுத்துக் கொண்டிருப்பதால் அனைத்து பாக்கியங்களும் கிடைத்தே தீர வேண்டிய வாரமாக இது இருக்கும்.

தந்தைவழி உறவினர்களால் லாபம் உண்டு. அப்பாவிடம் காரியத்தை சாதித்துக் கொள்ள இது நல்ல வாரம். இளைஞர்கள் தந்தையிடம் ஏதேனும் கேட்டுப் பெறவேண்டியது இருந்தால் இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த நிலுவைத்தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல் போன்ற விஷயங்கள் இப்போது கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்து வந்த போட்டிகள் மறைந்து இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீங்களே தனிக்காட்டு ராஜாவாக உலா வருவீர்கள்.

மீனம் :

வாரத்தின் இரு நாட்கள் சந்திராஷ்டம நாட்களாக இருப்பதால் எதிலும் கவனமாக நிதானமாக நடந்து கொள்வது அவசியம். நீண்ட தூர பிரயாணங்களை வார ஆரம்பத்தில் ஒத்தி வைப்பது நல்லது. பயணங்களால் சில சங்கடங்கள் இருக்கலாம்.

ஏழாமிடம் வலுப்பெறுவதால் வாழ்க்கைத் துணைவர் மூலம் உதவிகள் இருக்கும். நண்பர்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். கூட்டுத் தொழில் தற்போது லாபம் தரும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். மிகப்பெரிய பிரச்சினைகள் என்று எதுவும் வருவதற்கு வாய்ப்பில்லை.

வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். அரசு தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். அரசியலில் இருப்போருக்கும் கலைஞர்களுக்கும் நல்ல விஷயங்கள் நடக்கும்.

No comments :

Post a Comment