Monday, 21 December 2015

மாலைமலர் வார ராசிபலன்கள் (21.12.15 முதல் 27.12.15 வரை)


மேஷம்:

கடந்த சில வாரங்களாக ராகுவுடன் இணைந்து பலமிழந்து இருந்த ராசிநாதன் செவ்வாய் இந்த வாரம் முதல் அந்த நிலை நீங்குவதோடு ராசியைப் பார்த்தும் வலுப்படுத்துவதால் இதுவரை எதிர்மறைபலன்களைச் சந்தித்து வந்த மேஷராசிக்காரர்களுக்கு தடைகள் அனைத்தும் நீங்கி அவர்கள் மனம் போலவே நன்மைகள் நடக்கும் வாரம் இது.

ஆறாம் இடத்து ராகுவினால் இதுவரை வெறும் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் அனைத்தும் இப்போது உங்கள் மனம் போல நிறைவேறும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு சாதனைச்செயல் புரிந்து புகழடைவதற்கான வாய்ப்புகள் இப்போது உள்ளது. கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும்.

சிலருக்கு பெற்றோர் விஷயத்தில் மனக்கஷ்டங்கள் இருக்கலாம். எந்த ஒரு தாய் தகப்பனும் தான் பெற்ற குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்களே தவிர கஷ்டப்படவேண்டும் என்று நினைக்க மாட்டர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் பெற்றோர்களின் அருமை புரியும்.

ரிஷபம்:

வார இறுதியில் ராசிநாதன் சுக்கிரன் யோகாதிபதி சனியுடன் இணைந்து ராசியை பார்ப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு ரிஷப ராசிக்காரர்களுக்கு தடைப்பட்டிருந்த பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். குறிப்பாக இரும்பு, பெட்ரோல், பிளாஸ்ட்டிக், வேஸ்ட்பேப்பர் போன்றவைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது நல்ல வாரம்.

எட்டுக்குடையவன் வலுப்பெறுவதால் சிலருக்கு திடீர் பணவரவு கிடைக்கும். வெகுநாட்களாக இழுபறியில் இருந்து வந்த ஒரு விஷயம் நல்லபடியாக முடிந்து ஒரு பெரும்தொகை கைக்கு கிடைக்கலாம். ரியல்எஸ்டேட் மற்றும் பில்டர்ஸ் தொழில் செய்பவர்களுக்கு மிகப்பெரிய இலாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்:

வாரம் முழுவதும் ராசிக்கு ராசிநாதனின் பார்வையும் மூன்று, ஏழுக்குடையவர்கள் பரிவர்த்தனையும் மிதுனராசிக்கு யோகங்களை அளிக்கும் ஒரு அமைப்பு என்பதால் இந்த வாரம் நீங்கள் இளைய சகோதர, சகோதரிகளின் மூலமும், வாழ்க்கைத்துணை வழியிலும் லாபங்களை அடையும் வாரமாக இருக்கும்.

அந்தஸ்து, கௌரவம் சிறப்பாக இருக்கும் வாரம் இது. அடுத்தவர்களால் மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள். மற்றவர்கள் உங்களுக்கு அடிபணிவார்கள். வருமானமும் நன்றாக இருக்கும். அடுத்தவரிடம் போய் நிற்க வேண்டிய அவசியம் இந்த வாரம் இருக்காது. கணவர் நீங்கள் கேட்கும் பொருளை முகம் சுளிக்காமல் வாங்கித் தருவார்.

இதுவரை பிறரைச் சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இந்த வாரம் முதல் சுயமாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். குருபகவான் வலுப்பெற்று இருப்பதால் இந்த வாரம் சிலருக்கு அனைத்து விஷயங்களிலும் மாறுதல்கள் உள்ள வாரமாக இருக்கும். வேலை மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் இருக்கலாம்.

கடகம்:

வார ஆரம்பத்தில் கடகநாதன் சந்திரன் உச்ச நிலைமையும், வார இறுதியில் ஆட்சி நிலையும் பெறுவதால் இந்த வாரம் குறிப்பிட்ட சில கடகராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத வாரமாகவும், நீண்ட காலமாக நடக்காமல் இருந்த விஷயங்கள் நடக்கின்ற வாரமாகவும் இருக்கும்.

சிலருக்கு இந்தவாரம் நீண்டதூர பிரயாணங்களோ வடமாநில புனித யாத்திரை அல்லது புனிததரிசனங்கள் போன்றவைகளோ இருக்கும். எதிர்ப்புகளை சுலபமாக சமாளிப்பீர்கள். நண்பர்களைப் போல நடித்து துரோகம் செய்துகொண்டு இருந்தவர்களை இப்போது அடையாளம் காண்பீர்கள்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். தாராளமான பணவரவு இருக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்:

ராசிநாதனும், ஐந்துக்குடையவனும் பரிவர்த்தனையாகி யோகக்கிரகங்கள் வலுவான நிலையில் இருக்கும் அதிர்ஷ்டமான வாரம் இது. சிம்மத்தினர் எந்த ஒரு செயலைச் செய்தாலும் முன்யோசனையுடன் சிறப்பாக செய்பவர்கள் என்பதால் அதிர்ஷ்டமும் உங்களுக்கு கைகொடுத்து உங்கள் செயல்திறனை மேம்படுத்தும் வாரம் இது.

வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இனிமையான நிகழ்ச்சிகள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சில இளையவர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணையை இன்னாரென்று தெரியாமலேயே சந்திப்பீர்கள்.

ராசிநாதன் உச்சவலுவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதால் தற்போது கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடக்கவே நடக்காது. அனைத்து விஷயங்களும் கிணற்றில் போட்ட கல்லாக நகர முடியாமல் இருக்கலாமே தவிர கெடுபலன் சொல்வதற்கு எதுவும் இல்லை.

கன்னி:

கடந்த சில வாரங்களாக ராசியில் அமர்ந்து உங்களை எரிச்சலும், ஏமாற்றமும் படுத்திக்கொண்டிருந்த செவ்வாய் பகவான் இந்த வாரம் முதல் ராசியில் இருந்து விலகுவதால் இதுவரை கருத்துவேற்றுமையாலும் வேலை விஷயங்களாலும் பிரிந்து கிடந்த குடும்பத்தினர் ஒன்று சேரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வாரம் இது.

ஒன்றுமில்லாத விஷயத்திற்கு இந்தவாரம் மனதை போட்டு குழப்பிக்கொண்டும் தவறாக ஏதேனும் நடந்து விடுமோ என்று அச்சபட்டுக்கொண்டும் இருப்பீர்கள். கடவுளின் துணை எப்போதும் உங்களுக்கு உண்டு என்பதால் எதுவும் எல்லை மீறாது. கவலை வேண்டாம். மனம் இந்த வாரம் தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொள்ளும்.

சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.குறிப்பிட்ட சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம்.

துலாம்:

ராசிநாதன் ராசியில் அமர்ந்து மூன்று, பதினொன்றுக்குடைய குருவும், சூரியனும் பரிவர்த்தனை பெறுவதால் உங்களுடைய தைரியமும், செயல்திறனும், சாமர்த்தியமான நடவடிக்கைகளும் சிறப்பாக வெளிப்படும் வாரம் இது. குறிப்பிட்ட சில துலாம் ராசிக்காரர்கள் ஏதேனும் ஒரு செயலால் நற்பெயரும், புகழும் அடைவீர்கள்.

மூன்றாம் இடம் வலுப்பெறுவதால் இதுவரை விடாமுயற்சியுடன் நீங்கள் முயற்சித்து வந்த ஒரு விஷயம் தற்பொழுது உங்களுக்கு சாதகமாக மாறும். சுக்கிர பலத்தால் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க முடியும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். குறிப்பிட்ட சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கைத்துணையிடம் அனுசரணையாக இருப்பீர்கள். அவரால் அனுகூலம் உண்டு. வீட்டுப்பொருள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்:

ராகுவுடன் இணைந்து வலிமையிழந்திருந்த ராசிநாதன் செவ்வாயும் இந்த வாரம் முதல் அவரிடமிருந்து விலகி வலுப்பெற்றாலும் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதைப்போல ராசிநாதனே ஆறுக்குடையவனாகி ஆறாமிடத்தைப் பார்த்து வலுப் படுத்துவதால் உங்கள் எதிரிகள் கை ஓங்கியிருக்கும் வாரம் இது.

யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்பதை நினைவில் வையுங்கள். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் நீங்கள் பணிந்து போவது ஒன்றும் தவறில்லை. புலி பதுங்குவது நல்லநேரம் வரும்போது பாய்வதற்குத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ராசிநாதன் வலுப் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு இந்த வாரம் பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உங்களைப் பிடிக்காதவர்களின் கை தற்போது ஓங்கினாலும் இறுதி வெற்றி உங்களுக்குத்தான் என்பதை நினைவில் வையுங்கள்.

தனுசு:

ராசிநாதனும், பாக்கியாதிபதியும் பரிவர்த்தனை யோகம் பெறும் யோகவாரம் இது என்பதால் மார்க்கழி மாதம் முழுவதும் தனுசு ராசிக்கு நற்பலன்களும், நல்ல பெயரும், பொருளாதார மேன்மைகளும் இருக்கும் என்பது உறுதி. குறிப்பிட்ட சில தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிவன் கோவில் திருப்பணி செய்யும் வாய்ப்பு தேடி வரும்.

பதினான்றாம் வீட்டில் செவ்வாய் சுபவலுப் பெற்றதால் உங்களுடைய முயற்சிகள் தற்பொழுது வெற்றி பெறும். எனவே முயற்சியை கைவிடாது ஊக்கத்துடன் செயல்பட்டால் அனைத்தும் உங்கள் வசம்தான். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும்.

தேவையற்றவிதத்தில் யாரிடமாவது வம்புச்சண்டை வருவதற்கோ, கோபத்தில் யாரையாவது திட்டி அவர்களை விரோதித்துக் கொள்வதற்கோ வாய்ப்பு இருப்பதால் பேசுவதில் நிதானம் தேவைப்படும் வாரம் இது.. செவ்வாய் வலுப்பெறுவதால் பணவரவிற்கு பஞ்சம் இல்லை. அதேநேரம் நண்பர்களில் ஒருவர் விலகிப் போக வாய்ப்பு இருக்கிறது.

மகரம்:

ஆறுக்குடையவன் ஆறாமிடத்தை பார்த்து வலுப்படுத்தினாலும் அவர் ராசியின் யோகர் என்பதாலும் ஜீவனாதிபதி வலுத்திருப்பதாலும் மகர ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் போட்டி, பொறாமைகள் ஓங்கி எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் நிதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டிய வாரம் இது.

ராசியை செவ்வாய் வலுப்பெற்று பார்ப்பதால் எதற்கெடுத்தாலும் கோபமும், எரிச்சலும் வர வாய்ப்பிருகிறது. யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவை இல்லாமல் அடுத்தவரை பகைத்து கொள்ளவும் வேண்டாம். வயதானவர்களுக்கு நோய்கள் தொல்லை கொடுக்கும். அனைத்திலும் தடங்கல்கள் இருக்கும்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இந்த வாரம் ஏற்படலாம். குறிப்பிட்ட சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை.

கும்பம்:

இதுவரை எட்டாம் வீட்டில் இருந்து உங்களின் பணவரவுகளை தடுத்துக் கொண்டிருந்த செவ்வாய் பகவான் அங்கிருந்து விலகும் வாரம் இது. செய்த வேலைக்கேற்ற கூலியும், வருமானமும் இதுவரை இல்லையே என்று புலம்பிக்கொண்டிருந்த கும்ப ராசிக்காரர்கள் இனிமேல் கையில காசு வாயில தோசை என்கிற அமைப்பை இந்த வாரம் முதல் அனுபவிப்பீர்கள்.

சூரியன் வலுவாக இருப்பதால் இந்த வாரம் உங்கள் கையில் தாராளமான பண நடமாட்டம் இருக்கும். தந்தைவழியில் ஆதரவான விஷயங்களும் ஆதாயங்களும் உண்டு. நீங்கள் விரும்பிக் கேட்ட பொருளை அப்பா வாங்கி தருவார். மனம் உற்சாகமாக இருக்கும்.

எட்டில் ராகு இருந்து உங்களுடைய செயல் திறமையை முடக்கிப் போட்டு உங்களை சோம்பலாக்க பார்த்தாலும் கன்னிராசி ராகுவுக்கு மிகவும் பிடித்த வீடு என்பதால் ராகு உங்களுக்கு நன்மைகளையே அதிகம் செய்வார் என்பது நிச்சயம். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பரம்பொருளின் கருணையினால் அனைத்தையும் சமாளிப்பீர்கள்.

மீனம்:

ஆறு, பத்துக்குடைய குருவும், சூரியனும் பரிவர்த்தனையாகி ராசிக்கு கடந்த சில வாரங்களாக இருந்து வந்த செவ்வாயின் பார்வை விலகுவதால் இதுவரை பணப் பிரச்சினையில் இருந்து வந்த மீனராசிக்காரர்களுக்கு புதிய மாற்றங்கள் ஆரம்பிக்கும் வாரம் இது. இதுவரை லட்சியங்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இந்த வாரம் முதல் அதற்கான ஆரம்ப வேலைகளில் இறங்குவீர்கள்.

நடுத்தர வயதை கடந்தவர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பனிரெண்டாமிடம் சுபபார்வை பெறுவதால் ஏற்றுமதி இறக்குமதி வெளிநாடு, வெளிமாநிலம் தொடர்புள்ளவர்கள் நன்மைகளை அடைவீர்கள்.

இந்த வாரம் உங்களுடைய ஜீவன அமைப்புகள் வலுப்பெறுவதால் அலுவலங்களில் உங்களுக்கு சுமுகமான சூழ்நிலை இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானத்துடன் நல்ல பெயரும் உண்டு. சிகப்புநிற பொருட்கள் சம்மந்தப்பட வியாபாரிகள் நல்ல இலாபம் அடைவார்கள்.

4 comments :