Tuesday, 29 December 2015

மீனம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்

மீனம்

2016-ம் வருடம் பிற்பகுதியிலிருந்து மீனராசிக்கு மிகச்சிறந்த நல்ல பலன்களும் கவுரவம், அந்தஸ்து உயரும் சம்பவங்களும் நடக்கும் என்பதும் இதுவரை பொருளாதார சிக்கலில் இருந்து வந்தவர்கள் அதிலிருந்து மீண்டு நல்ல பணவரவை அடைவீர்கள் என்பதும் உறுதி.

வருடத்தின் முதல்மாதத்தில் நடக்கும் மிக முக்கியமான ராகுகேதுப் பெயர்ச்சியும் உங்களுக்கு மிகவும் சாதகமான அமைப்பிற்கு மாறி யோகம் செய்யும் என்பதால் இந்தப் புத்தாண்டு எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மைகளை மட்டுமே தரும் என்பதும் நிச்சயமான ஒன்று.

அஷ்டமச்சனி முடிந்தும் சில மீனராசிக்காரர்கள் இதுவரை நல்ல பலன்களை அடையவில்லை. அவர்களின் பிரச்னைகள் இன்னும் தீரவில்லை. அத்தகையவர்களும் கண்டிப்பாக இந்த வருடத்தில் அனைத்திலும் வெற்றி கண்டு வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.

தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இந்த வருடம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைப்பதால் இந்த வருடம் நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெற்று உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு வருடமாக இது அமையும்.

குறிப்பாக முப்பது வயதுக்களில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் நல்லபடியாக அமைந்து இந்த வருடத்திலிருந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும். இனிமேல் பணத்தட்டுப்பாடு என்பது உங்களுக்கு இருக்காது.

இதுவரை திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.

பொதுவாக சொல்லப் போனால் மீனராசி இளையபருவத்தினருக்கு இந்த வருடத்தில் இருந்து வாழ்க்கையின் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கப் பெற்று நிம்மதியாக வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு கடந்த சில வருடங்களாக வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் மேன்மேலும் பெருகும்.

புதிதாக தொழில் தொடங்குவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும் என்பதால் உடனே தொழில் தொடங்கலாம். ஏற்கனவே தொழில் சரியின்றி இருந்தவர்களுக்கு இனி நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை விரிவு படுத்தவும், புதிய முயற்சிகள் எடுக்கவும் நல்லநேரம் இது. துணிந்து எதிலும் இறங்கி செயல்படலாம். ரிஸ்க் எடுத்தால்தான் வாழ்க்கையின் உயரத்திற்குச் செல்ல முடியும்.

குலதெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு பூரணமாக கிடைக்கும் வருடம் இது. நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கலாம். நகைகள் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி இன்னும் கட்டுவீர்கள்.

அரசு, தனியார்துறைகளின் ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத்தரப்பு மீனராசிக்காரர்களுக்கும் மிகவும் அதிர்ஷ்டத்தை தரப்போகும் வருடம் இது. எனவே இந்தவருடத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள்.

கலைத்துறையினர், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். அதிர்ஷ்டம் இந்த வருடம் மிகவும் நன்றாக உங்களுக்கு கை கொடுக்கும். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் நிலைமை மாறி அனைத்தும் சாதகமாக நடப்பதை உணருவீர்கள்.

இதுவரை உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உடல்நலத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும்.

வருமானம் மிகவும் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள். வீட்டுமனையோ, கட்டிய வீடோ, வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கூடுதல் சம்பளத்துடன் நிச்சயமாகக் கிடைக்கும்.

குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும் சேமிக்க முடியும். இதுவரை நகைகளை அடமானம் வைத்த நிலை மாறி அவற்றை மீட்பதோடு புதிதாக நகை வாங்கவும் முடியும். மூத்த சகோதரசகோதரிகள் உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

ஆறாமிடத்தில் ராகு இருப்பதால் உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தாய்வழி உறவிலும் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும்.

சில நிலைகளில் பணத்திற்காக பொய்பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக் கட்டுப்படுத்துங்கள்.

பெண்களுக்கு இனிமேல் யோககாலம்தான். இதுவரை வெளியே சொல்ல முடியாமல் நீங்கள் பட்ட துயரங்கள் மிக அதிகம். கடவுள் உங்களை ஒருபோதும் கை விடமாட்டார். வீட்டிலும் அலுவலத்திலும் இனிமேல் உங்களுக்கு எந்தப் பிரச்னைகளும் இருக்காது.

மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிகப்பெரிய லாபம் அடைவீர்கள். பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.

எல்லாத் துறையைச் சேர்ந்த மீனராசிக்காரர்களுக்கும் மிக நல்ல வருடம் இது. மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், குடும்ப சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள்.

5 comments :

  1. good predictions !.hopre it happens so !

    ReplyDelete
  2. good predictions !.hopre it happens so !

    ReplyDelete
  3. புது ஆங்கில வருட புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா. நன்றி.

    ReplyDelete