Tuesday, 29 December 2015

விருச்சிகம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்

விருச்சிகம்

விருச்சிகராசி 2015-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வருகிறது. பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டுமே ஏழரைச்சனியின் கொடுமையான பிடியில் இருந்து தப்பி கெடுபலன்கள் இல்லாத வாழ்க்கையினை அனுபவித்து வருகிறீர்கள்.

மிகப்பெரும்பாலான விருச்சிகராசிக்காரர்களுக்கு சென்ற வருடம் மிகவும் கசப்பான அனுபவங்கள் இருந்தன. அதிலும் அனுஷநட்சத்திரக்காரர்கள் பட்ட அவஸ்தையினை சொல்வதற்கும், எழுதுவதற்கும் வார்த்தைகளைப் புதிதாக தேட வேண்டியிருக்கும்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் எல்லா நிலைகளுக்கும் ஒரு எல்லை உண்டு எனும் விதிப்படி எதிர்மறைபலன்களுக்கும், சோதனைகளுக்கும் ஒரு அளவு உண்டு என்பதும் அந்த அளவையும் மீறி விருச்சிகம் கடந்த வருடங்களில் சிக்கல்களை சந்தித்து விட்டது என்பதால் 2016-ம் வருடம் உங்களுக்கு இதுவரை நடந்த அனைத்துப் பிரச்சினைகளும் தீர ஆரம்பிக்கும் வருடமாக இருக்கும்.

எனவே ஏழரைச்சனியின் தாக்கத்தினால் எந்த எந்த விஷயங்களில் உங்களுக்கு கடுமையான பலன்கள் நடந்து வந்ததோ அந்த விஷயங்கள் அனைத்தும் தீர்வதற்கான ஆரம்பங்களும், சிக்கல்களில் இருந்து நீங்கள் வெளியே வருவதற்கான அடிப்படை நிகழ்வுகளும் 2016-ம் வருடம் இருக்கும்.

இதுவரை செட்டிலாகாமல் பொருளாதாரச் சிக்கல்களில் இருக்கும் அனைவருக்கும் 2016 வருடம் நிச்சயமாக ஒரு திருப்புமுனை வருடமாக அமையும் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன். எனவே விருச்சிகராசிக்காரர்கள் எதையும் பின்னடைவாகக் கருதாமல் அனைத்து எதிர்மறைபலன்களையும் நேர்மையான முறையில் எதிர்கொண்டு இந்த வருடம் முதல் சந்தோஷத்தைப் பெற ஆரம்பிப்பீர்கள் என்பது நிச்சயம்.

புதுவருடத்தின் பெரும்பகுதி மாதங்கள் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி நிலையிலும், நட்புநிலையிலும், உச்சநிலையிலும் இருப்பார் என்பதால் ராசிநாதனும், ராசியும் வலுவடைந்திருக்கும் காலங்களில் கெடுபலன்கள் எதுவும் நடக்காது எனும் விதிப்படி 2016-ம் வருடம் விருச்சிகராசிக்கு சாதகமான நல்ல ஆண்டாகவே இருக்கும்.

இந்தப் புத்தாண்டு தொழில் வேலை வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுக்கும் என்பதால் இதுவரை மேற்படி இனங்களில் இருந்து வந்த தேக்கநிலைகள் மாறி புதுவிதமான நல்ல அமைப்புகள் உருவாகும். கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடைபெறப் போவது இல்லை.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலை கிடைக்கும். சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள் என்ற நிலை உள்ளதால் எல்லோரிடமும் பழகும் போது உஷார் தன்மை தேவை.

வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அலைச்சல்களையும் மந்த நிலையையும் ஒருபுறம் கொடுத்தாலும் இன்னொரு புறம் தொழிலில் முன்னேற்றத்தையும் வருமானங்களையும் கண்டிப்பாகத் தரும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம்.

இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமுக நிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.

டென்ஷன் அதிகமாக இருக்கும். எல்லா வேலைகளையும் நீங்கள் மட்டுமே இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய வேண்டி இருக்குமாதலால் குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

சனி ராசியில் இருப்பதால் இதுவரை இருந்து வந்த உங்களுடைய குணங்கள் மாறுபடும். சற்று முரண்பாடானவராக, பிடிவாதக்காரராக மாறுவீர்கள். எவருக்கும் வளைந்து கொடுக்கமாட்டீர்கள். மனதில் குழப்பமான எண்ணங்கள் வரும். தேவையற்ற மனக்கலக்கம் இருக்கும். எதையும் அதிகாரம் செய்து பழக்கப்பட்ட ஆளுமைத்திறன்மிக்க உங்களை முடக்கிப் போட்டு சனி சற்று அசைத்துப் பார்ப்பார் என்றாலும் யாராலும் உங்களை ஜெயிக்க முடியாது என்பது நிச்சயம்.

கோர்ட் கேஸ், போலீஸ் விவகாரங்கள், நிலம் சம்பந்தமான வழக்குகள், கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது.

ஆகஸ்டு மாதத்திற்குப் பிறகு திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற வைபவங்கள் இல்லத்தில் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

என்னதான் பிரச்னை என்றாலும் விருச்சிகராசிக்காரர்கள் வேலேந்திய வேளான தேவசேனாதிபதி முருகப்பெருமானின் தைரியமிக்க அருட்குழந்தைகள் என்பதால் அனைத்து விஷயங்களையும் சாமர்த்தியமாக சமாளித்து வெற்றிவீரனாக இந்த புத்தாண்டில் வலம் வருவீர்கள் என்பதும் உறுதி.

3 comments :

  1. sir please tell the viruchiga rasi regarding health. 20.11.1960 (nineteen sixty)morning 6.35am at gobichettipalayam, erode district. whether she will undergo both two leg moottu operation or not this year.

    ReplyDelete
  2. 2016 varudaththai aavalodu ethir parkkiren guruji avarkale... Nantrikal pala... Anaiththu makkalukkum puththandu vazhthukkal...

    ReplyDelete
  3. சார் கையில் பணமே தங்கமாட்டேன் என்கிறது என்ன செய்ய வீடு கட்டுவேனா

    ReplyDelete