Tuesday, 29 December 2015

சிம்மம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்

சிம்மம்

சிம்மராசிக்காரர்களுக்கு 2016ம் வருடம் சுமாரான பலன்களைச் செய்யும் வருடம்தான். ஆனால் அதேநேரத்தில் 2015ம் வருடத்தில் உங்களுக்கு இருந்த சில பின்னடைவுகள் இந்தவருடம் இருக்காது.

இளைய பருவ சிம்மராசிக்கார்கள் பலர் அர்த்தாஷ்டமச்சனி எனப்படும் நான்காமிடத்து சனியின் பாதிப்பினால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பாதிப்புகளை அடைந்து தன்னம்பிக்கையை இழந்திருக்கிறீர்கள்.

சிலருக்கு நல்லவேலை இல்லை, சிலருக்கோ வேலையே இல்லை. இன்னும் சிலருக்கு கிடைத்த வேலை கை நழுவிப் போய்விட்டது. இன்னும் சிலரின் வாய்ப்பை அடுத்தவர்கள் தட்டிப்பறித்து சென்றுவிட்டார்கள் என்றநிலைதான் தற்போது சிம்மராசிக்கு நடந்து கொண்டிருக்கிறது.

அதிலும் கோட்சார ரீதியில் ஜென்மகுரு எனப்படும் குருபகவான் ராசியில் இருக்கும் நிலை ஒரு அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சங்கடங்களையும், நிர்வாகச்சிக்கல்களையும் தரும் என்பதன்படி பொறுப்பில் இருக்கும் சிம்மராசிக்காரர்களின் ஆளுமைத்திறன் சனியின் பார்வையால் பாதிக்கப்பட்டு இப்போது சிலர் நற்பெயரை இழந்து விட்டிருப்பீர்கள்.

வருடத்தின் பிற்பகுதியில் ஆகஸ்ட்மாதம் குருப்பெயர்ச்சி நடந்தபிறகு ஜென்ம குரு அமைப்பு விலகி குருபகவான் இரண்டில் மாறியவுடன் அனைத்து நிலைமைகளும் சீராகி சிம்மராசிக்கு மீண்டும் புத்துணர்வும், நற்பெயரும் கிடைக்கும் என்பதால் பெரியவருத்தங்கள் எதுவும் இந்தவருடம் சிம்மத்திற்கு இல்லை.

மேலும் இந்த வருடம் நான்கில் இருக்கும் சனி, பத்தாமிடத்தையும், ராசியையும் பார்ப்பதால் உங்களுடைய தெளிவான சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு உங்களுடைய மனதை மாற்றி பதவியைப் பறிக்க முயற்சிப்பார் என்பதால் சிம்மராசிக்காரர்கள் தங்களின் எதிர்காலத் திட்டமிடுதல்களில் கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம்.

தொழில் விரிவாக்கங்கள் மற்றும் புதிய தொழில் ஆரம்பிப்பதை நன்கு யோசித்து செய்யுங்கள். இருக்கும் வேலையை விட்டு விட்டு புதிய வேலை தேடலாம் என்பதிலும் கவனம் தேவை. புதிதாக எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் அனைவரையும் கலந்து ஆலோசித்து செய்யவும்.

புதிய வீடு வாங்குவது அல்லது இருக்கும் வீட்டை விரிவாக்குவது அல்லது புதிதாக சொத்து வாங்குவது போன்றவைகளில் மிகுந்த கவனம் தேவைப்படும்.நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போன்றவைகளும் இப்போது கை கொடுப்பது கடினம்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் போன்ற முறைகேடான வருமானங்கள் இப்போது வருவது கடினம். எனவே மேல் வரும்படி இல்லாததால் செலவுகளை சமாளிக்க திண்டாடுவீர்கள்.பணியிடங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். அதனால் நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். ஏற்கனவே கடன் சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிக்கல்கள் உண்டாகும் என்பதால் அவசியமில்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

ஆன்மீக உணர்வுகள் சிலருக்கு அதிகமாகும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சிலரைத் தேடிவரும். ஆலயத்தில் பணி செய்ய சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். இதுவரை தரிசிக்க வேண்டும் என்று ஏங்கியிருந்த புனிதத்தலங்களுக்கு சென்று மனநிறைவுடன் திரும்பி வருவீர்கள். ஞானிகளின் ஆசிர்வாதமும் அவர்களின் தொடர்பும் கிடைக்கும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும்.

எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.
 
பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச்செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள்.

பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி மாற்றலாகி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் வீட்டில் பிரச்னை எதுவும் இருக்காது.

எல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு சலிப்பு வரும் என்பதால் யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த காலகட்டத்தில் எவருமே உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள்.

No comments :

Post a Comment