Tuesday, 29 December 2015

மிதுனம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 2016-ம் வருடம் நல்லபலன்களைத் தரும் வருடமாக இருக்கும். குறிப்பாக சென்ற 2015ஆம் வருடத்தை விட பொருளாதார மேன்மைகளும் நல்ல பணவரவும் நிலையான வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளும் இந்த வருடம் இருக்கும்.

வருடத்தின் ஆரம்பத்தில் நடக்கவிருக்கும் ராகு கேதுப்பெயர்ச்சி உங்களுக்கு மிகப் பெரிய நன்மைகளையும், அடுத்தவர்களிடமிருந்து சரியான நேரத்தில் நேர்மையான வகையில் உதவிகளையும், மற்றவர்களிடம் நல்லபெயரையும் பெற்றுத்தரும் என்பதால் 2016ம் வருடம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த வருடமாகவே இருக்கும்.

மேலும், மூன்றில் ராகு, ஆறில் சனி போன்ற இரண்டு பெரும் பாபக்கிரகங்களின் நன்மை தரும் கிரகநிலைகள் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தவருடம் மன உறுதியையும், எதையும் நேரே நின்று எதிர்கொள்ளும் ஆற்றலையும், சிறந்த நிர்வாகத் திறமையையும் உங்களுக்கு அளிக்கும் என்பதால் மிதுன ராசிக்காரர்கள் மிகச்சிறந்த முன்னேற்றங்களை இந்த வருடம் அடைவீர்கள்.

குறிப்பாக முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களுக்குள்ளே அவர்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் புத்திசாலித்தனத்தையும் வேறுபட்ட திறமைகளும் இந்த வருடம் வெளிப்பட்டு குறிப்பிட்ட சிலர் புகழடையும் வாய்ப்பும் இருக்கிறது.

கோட்சாரரீதியில் மூன்றாமிடம் எனப்படும் கீர்த்திஸ்தானத்தில் ராகு இருக்கும்போது ஒருவர் தன்னுடைய செயற்கரிய செயல்களால் புகழ் மற்றும் வெற்றிகளைப் பெறுவார் என்பது ஜோதிடவிதி அதன்படி மிதுனராசிக்காரர்கள் அவரவருடைய பிறந்தஜாதக அமைப்பு உள்ள அளவுகளின்படி புகழ் அடைவீர்கள்.

அதைவிட இந்த வருடம் மிக முக்கியபலனாக இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மேலும் ஏற்கனவே இருந்த நான்காமிட ராகுவின் தாக்கத்தினால் இதுவரை வசதிகுறைந்த வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் கூட இந்த வருடம் வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் ஒத்திக்கு வீடு எடுப்பீர்கள்.

அரசு, தனியார்துறை பணியாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும் வருடமாக இருக்கும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

இதுவரை மனதில் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. எதை நினைத்து கலங்குகிறோம் என்று தெரியாமல் இதுவரை இனம் புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இந்த வருடத்தில் இருந்து புது உற்சாகம் அடைவீர்கள்.

வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். வெகு தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக இருப்பீர்கள்.

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்டகாலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு இந்தவருடம் நல்லவேலை கிடைக்கும். பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்தவர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். மத்திய மாநில நிர்வாகப்பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும்.

சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த நன்மையை அளிக்கும். வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும்.

தொழிலதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம்.

மிதுனராசிப் பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்

கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆலய சீரமைப்பு பணிகளில் சிலர் புகழ் பெறுவீர்கள்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் தேடிவரும். அரசியல்வாதிகள் புகழ் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். விவசாயிகள் வியாபாரிகள் போன்றவர்களுக்கு வருமானம் உண்டு.

மொத்தத்தில் மிதுனராசிக்கு இந்த புத்தாண்டு நல்ல நன்மைகளை செய்வதோடு எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

9 comments :