Tuesday, 29 December 2015

மகரம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்

மகரம்

கோட்சார ரீதியில் மகரத்திற்கு பெரிய அளவிலான துன்பங்கள் எதுவும் சென்ற வருடம் இல்லை என்றாலும் 2015-ம் ஆண்டு பிற்பகுதிக்கு பிறகு குறிப்பிட்ட சிலருக்கு அஷ்டமகுருவின் ஆதிக்கத்தினால் வாழ்க்கை மாற்றங்கள் இருந்தன. இந்தநிலை இந்தவருடம் ஆகஸ்ட்மாதம் வரை நீடிக்கும் என்பதோடு வருடத்தின் பிற்பகுதி லாபகரமாக இருக்கும் என்பதால் புதுவருடத்தை நீங்கள் புத்துணர்வோடு வரவேற்கவே செய்வீர்கள்.

2016-ம்வருட ஆரம்பத்தில் ராகுபகவான் இதுவரை இருந்து வந்த ஒன்பதாமிடத்திலிருந்து மாறி எட்டாமிடத்திற்கு வருகிறார். இது மகரராசிக்கு நல்ல நிலை இல்லைதான். ஆனாலும் ஏற்கனவே அங்கிருக்கும் குருபகவானுடன் இணைந்து உங்கள் ராசியைப் பார்த்து வலுப்படுத்தும் ராசிநாதன் பதினொன்றாமிட சனியால் ராகு பார்க்கப்படுவதால் மகரராசிக்கு புது வருடத்தில் ராகுவால் கெடுதல்கள் இருக்காது.

அதேநேரத்தில் எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும்.

அரசு தனியார் துறை ஊழியர்கள் தங்களது வேலை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முறையற்ற வருமானத்திற்கு ஆசைப்பட வேண்டாம். கிரகங்கள் போடும் தூண்டிலுக்கு இரையாகி விடாதீர்கள். மேலதிகாரிகளால் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அதிகாரிகளை அனுசரித்துப் போங்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. மனதில் உள்ளதை வெளிப்படையாக யாரிடமும் பேசவேண்டாம்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். பொருட்கள் தொலையவோ, வீணாகவோ, திருடு போவதற்கோ வாய்ப்பு இருக்கிறது.

சுய தொழில் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் வரும். அரசாங்க உதவிகள் கிடைப்பது கடினம். தொழில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை இதைச் செய்து முடிக்க முடியுமா என்று யோசனை செய்வது நல்லது.

சம்பந்தமில்லாத இடத்தில் இருந்து தொழிலுக்கு இடையூறுகள் வரக்கூடும். வியாபாரிகள் கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும்.

பணவரவு சற்றுச் சுமாரான நிலையில்தான் இருக்கும் என்பதால் செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். என்ன இருந்தாலும் தேவையான நேரத்தில் பணம் வந்து விடும் என்பதால் பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள்.

பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். அலுவலகத்தில் ஒரு முட்டாள்தனமான மேலதிகாரியோடு நீங்கள் போராட வேண்டியிருக்கலாம். அங்கே அப்படி தாங்க முடியாத பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் நீங்கள்தான் அடி முதல் நுனிவரை அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கும்.

இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம் என்பதால் கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப் படுத்த வேண்டாம்.

நடுத்தர வயதுடையவர்கள் உடல்நலத்தில் அதிக கவனமுடன் இருப்பது நல்லது. வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். இதனால் மனவருத்தம் வீண் விரோதங்கள் வரலாம்.

குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். கோபங்களைக் குறைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அனுசரணை காட்ட வேண்டியது அவசியம். பிள்ளைகளால் பிரச்னைகளும் செலவுகளும் இருக்கலாம். கல்லூரி பள்ளி செல்லும் குழந்தைகளைக் கவனிப்பது நல்லது. சிலருக்கு திருமணயோகம் உண்டு.

தொழில்ரீதியான பயணங்கள் இனிமேல் அடிக்கடி இருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம்.

கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.

உறவினர்களிடம் சுமுகமான உறவு ஏற்படுவது கடினம். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை விட்டு மாறுதல், புதியதாக வீடு ஒத்திக்கு எடுத்தல் அல்லது புதிய வீடு வாங்குதல் போன்ற மாற்றங்கள் இருக்கும். மனைவி குழந்தைகளுடன் உல்லாசப் பயணம் கேளிக்கை சுற்றுலாக்கள் நவக்கிரக யாத்திரைகள் போன்ற பயணங்கள் இருக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவீர்கள். நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். எதுவும் கைமீறிப்போகாமல் உங்கள் ராசிநாதன் சனிபகவான் பாதுகாப்பார் என்பதால் மகரத்திற்கு இது நல்ல வருடம்தான்.

No comments :

Post a Comment