Tuesday, 29 December 2015

துலாம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்

துலாம்

ஏழரைச்சனியின் இறுதிப் பகுதியில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகள் 2016-ம் வருடம் ஆரம்பம் முதல் முடிவுவரை உங்கள் ராசிக்கு நன்மைகளைச் செய்யும் அமைப்பில் இருப்பதால் புதுவருடம் உங்களுக்கு யோக வருடமாக அமையும்.

குறிப்பாக 18 வருடங்களுக்கு ஒருமுறை கோட்சார நிலைமையில் அமையும் பதினொன்றாமிட ராகு எனும் யோகஅமைப்பு இந்த வருடம் உங்களுக்கு அமைந்து உங்களின் ராஜயோகாதிபதியான சனிபகவான் ராகுவைப் பார்ப்பது நல்ல பலன்களைத் தரும் என்பதால் புதுவருடம் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும் வருடம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

சனி முடியப்போவதால் இந்த புத்தாண்டில் இருந்து உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வந்து மீண்டும் அதிர்ஷ்டம் தேடிவந்து உங்களிடம் ஒட்டிக் கொள்ளப் போகிறது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற பய உணர்வுகளும் கலக்கமான மனநிலையும் விலகி மனதில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள்.

இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும்.

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் தொழில்தேக்கம் அதிர்ஷ்டக்குறைவு தடைகள் தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து துலாம் ராசிக்கு மிகவும் மேன்மையான காலம் ஆரம்பிக்கிறது.

உங்கள் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள்.

சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு உடனே கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரமாக நடத்தப்படுவீர்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப்பாதையில் செல்வதைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.

தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும்.

குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் வெகு சிறப்பாக நடைபெறும். மருத்துவர்களே என்ன நோய் என்று கண்டு பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக உடல்நலம் குணமாகும்.

வெளிநாட்டில் படிக்கவோ வேலை செய்யவோ முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த புத்தாண்டில் இடமாற்றங்கள் ஊர்மாற்றங்கள் வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள் நடக்கும். அந்த மாற்றங்கள் உங்கள் எதிர்காலத்திற்கு நல்லவைகளாகத்தான் இருக்கும் என்பதால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கூடுதல் சம்பளம் மற்றும் நினைத்த இடத்திற்கு இடமாற்றமும் நடக்கும்.

திருமணமாகாதவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறும். இளைய பருவத்தினருக்கு காதல் வரக்கூடிய அமைப்பு இருக்கிறது. இதுவரை குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.

பெண்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகளைத் தரும் புத்தாண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும் குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும்.

பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம். கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.

இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

இதுவரை தள்ளிப் போய் இருந்த வெளிநாட்டு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும்.

அதேபோல ஆசிரியர்பணி, மார்கெட்டிங், விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலர்கள், ஆலோசனை சொல்பவர்கள், ஊராட்சி நகராட்சி மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், வெரிபிகேசன் துறையில் இருப்பவர்கள், தபால் மற்றும் கூரியர்துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

4 comments :

  1. நன்றி குருஜி

    ReplyDelete
  2. நன்றி குருஜி

    ReplyDelete
  3. என் மனைவி ஐந்து மாதம் கற்பமாக இருக்கிறார்(முதல் குழந்தை).ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று எப்படி கூறுகிறீர்கள் பெண் குழந்தைக்கு வாய்ப்பு இல்லையா? பொதுவாக ஆண்டுபலன் சொல்லுபவர்கள் “குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்கும்“என்றுதான் கூறுவார்கள்.

    ReplyDelete