Tuesday, 29 December 2015

தனுசு: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்

தனுசு

தனுசுராசிக்கு வருடத்தின் ஆரம்பமே ராசிநாதன் குருபகவான் ஒன்பதில் இருந்து ராசியை பார்க்கும் நல்லநிலையில் ஆரம்பிக்கிறது. மேலும் பெரும்பாலான தனுசு ராசிக்காரர்கள் சென்ற வருடம் பரம்பொருளின் அருளினால் தங்களுக்குரிய நியாயமான விஷயங்களை அடைந்து சிக்கல்கள் எதுவும் இல்லாமல்தான் இருந்தீர்கள்.

அதுபோலவே இந்த வருடமும் உங்களுக்கு பின்னடைவுகள் எதுவும் இல்லாமல் ஒரு நிம்மதியான சந்தோஷ அமைப்புகள் வாழ்க்கையில் இருக்கும் என்பது உறுதி.

ஒரு சிறப்பு அமைப்பாக கடந்த வருடம் பத்தாமிடத்தில் இருந்து தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றில் சில முட்டுக்கட்டைகளைக் கொடுத்து உங்களில் முன்னேற்றத்தைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருந்த ராகுபகவான் இந்த வருடம் ஒன்பதாமிடத்திற்கு மாறுவதும், கேதுபகவான் சகாய ஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்திற்கு மாறுவதும் தனுசுக்கு மிகச்சிறந்த அமைப்பு என்பதால் 2016-ம் வருடம் கவலைகள் எதுவும் உங்களுக்கு இல்லை.

உங்களுடைய வேலை தொழில் வியாபார அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.

வருடத்தின் ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும். நல்ல இடத்தில் வேலையும் கிடைக்கும்.

ஏழரைச்சனி ஆரம்பித்திருப்பதால் புதிய தொழில் எதுவும் தொடங்க வேண்டாம். இருப்பதை கண்ணும் கருத்துமாக அக்கறையுடன் கவனித்து வந்தாலே போதும். புதிய முதலீடு முயற்சிகளில் இப்போது இறங்க வேண்டாம். இப்போது தொழில் தொடங்குவோர் அடுத்து வரும் வருடங்களில் கஷ்டப்படுவீர்கள் என்பதால் கவனமுடன் இருங்கள்.

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அடுத்து வரும் ஜென்மச்சனியில் உங்களை சிக்கலில் மாட்டி வைக்கக் கூடிய சம்பவங்களையும் செயல்களையும் சனி இப்போதுதான் செய்வார் என்பதால் எதிலும் கவனமாக இருங்கள்.

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் வருடம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த வருடம் அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு இந்த வருடம் கூடுதல் சம்பளத்துடன் நிச்சயமாகக் கிடைக்கும்.

குடும்பத்தில் நல்ல சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் உடனே கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும்.

பெண்களுக்கு இந்த வருடம் மிகவும் நல்ல வருடமாக இருக்கும். பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் உங்கள் பெயர் சிறக்கும். மாமியார் மெச்சிய மருமகளாய் இருப்பீர்கள். உங்கள் மருமகளையும் நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள்.

பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டாம். முதலில் சிறிது வருமானம் வருவது போல தெரிந்தாலும் கடைசியில் உள்ளதும் போய் விடும். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம்.

இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் நடக்கும். இதுவரை இருந்ததைவிட நல்லவீட்டிற்கு இப்போது மாறுவீர்கள். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.

அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.

வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது.

ஏற்கனவே திருமணமாகி முதல்வாழ்க்கை கோணலாகி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் தற்போது நல்லபடியாக நடந்து அந்த வாழ்க்கை குறையின்றி நீடித்தும் இருக்கும்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.

விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல வருடம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு இந்த வருடம் லாபம் வரும். கலைஞர்கள் பொதுவாழ்வில் உள்ளவர்கள் மாணவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் நன்மை தரும் வருடம் இது.

No comments :

Post a Comment