Tuesday, 29 December 2015

ரிஷபம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்

ரிஷபம்:

ரிஷபராசிக்காரர்களுக்கு 2016-ம் வருடம் ஆரம்பத்தில் சுமாரான பலன்களைத் தந்தாலும் வருடத்தின் பிற்பகுதியில் இருந்து மிகவும் மேன்மையான நல்ல பலன்கள், பொருளாதார மேன்மைகள், சந்தோஷங்கள் தரும் வருடமாக இருக்கும்.

புத்தாண்டு தினத்தன்று உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ரிஷபராசியின் ராஜயோகாதிபதியான சனிபகவானுடன் இணைந்து ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பது மிகவும் சிறப்பான ஒரு அமைப்பு என்பதால் இந்த வருடம் உங்களுக்கு எல்லா வகையிலும் நல்ல வருடமாகவே அமையும்.

வருடத்தின் ஆரம்பத்தில் ஏழில் சனி, ஐந்தில் ராகு நான்கில் குரு என முக்கியமான கிரகநிலைமைகள் சாதகமாக இல்லை என்றாலும் வருடம் பிறந்த உடனேயே மாற இருக்கும் ராகு-கேதுக்கள் நான்கு, பத்தாமிடங்களில் மாறுவது ஒரு நிலையில் உங்களுக்கு சாதகமான அமைப்புத்தான்.

மேலும் வரும் ஆகஸ்ட்மாதம் குருபகவான் இப்போதிருக்கும் சாதகமற்ற நிலையான நான்காமிடத்திலிருந்து மாறி ஐந்தாமிடத்திற்குச் செல்வது மிகப்பெரிய யோகஅமைப்பு என்பதால் குருப்பெயர்ச்சி நடக்க இருக்கும் ஒருமாதத்திற்கு முன்பே அதிர்ஷ்டங்கள் செயல்பட ஆரம்பித்து ஜூலைமாத முதலே உங்கள் வாழ்க்கையில் நல்லமாற்றங்களும், நன்மைகளும், மேன்மைகளும் உண்டாகத் தொடங்கும்.

கிரகநிலைமைகள் ரிஷபத்திற்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும்.

எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த மேன்மைமிகு புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருப்பது கடினம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள். முதுகுக்குப் பின்னே பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.

மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம்.

பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இந்த வருடம் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர் பார்த்தபடி ஓரளவு கிடைக்கும்.

தொழிலாளர்களுக்கும் வேலைசெய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்த ஆண்டில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே சிலருக்கு அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது.

இளைய பருவத்தினருக்கு இதுவரை தாமதமாகி வந்த திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்களுக்கு அது நல்லபடியாக நடந்து நீடித்தும் இருக்கும்.

தொலைக்காட்சி சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல்துறையினர், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ஆண்டு மேன்மைகளைத் தரும். மேற்கண்டவர்களுக்கு எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்தவருடம் நடக்கும்.

புத்திரபாக்கியம் தாமதமான தம்பதிகளுக்கு இந்தவருடம் குழந்தைப்பேறு உண்டு. சிலருக்கு இந்த வருடம் வாழ்க்கைத் துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல ஒரு தொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

சிலர் கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திருவிடம் போன்ற புனிதத்தலங்களுக்குப் போக முடியும்.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

ஒரு சிறப்புப் பலனாக எந்தக்காரணம் கொண்டும் எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது இப்போது செய்யாதீர்கள். அது சரியாக வராது. அதுபோலவே இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப்பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கச் செய்வார் நான்காமிட ராகு..

நான்காமிடத்திற்க்கு ராகு மாறப்போவதால் பழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர் செலவு பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது. தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். தாயாரால் மனச் சங்கடங்கள் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள்.,

பொதுவாக ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்ற ரிஷபராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த யோகத்தை தரும்.

4 comments :

  1. அருமை ஐயா..நன்றி ஐயா

    ReplyDelete
  2. அருமை ஐயா..நன்றி ஐயா

    ReplyDelete
  3. அருமை ஐயா..நன்றி ஐயா

    ReplyDelete