Tuesday, 29 December 2015

கன்னி: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியாக 2015ம் ஆண்டு உங்கள் ராசியில் இருந்து உங்களுடைய சிந்தனை, செயல்திறன் ஊக்கம் ஆகியவற்றை முடக்கிப் போட்டுக் கொண்டிருந்த ராகுபகவான் இந்த வருட ஆரம்பத்தில் ராசியில் இருந்து வெளியேறுவதால் 2016-ம் வருடம் நல்ல வருடமே.

வருடத்தின் முதல் மாதத்திலேயே ராகு-கேதுக்கள் ராசியிலும், ஏழாமிடத்திலும் இருந்து வெளியேறுவது கன்னிக்கு மிகப்பெரிய யோகத்தைச் செய்யும் என்பதால் 2016ம் வருடம் உங்களுக்கு நல்ல நன்மைகளைச் செய்யும் என்பது உறுதி.

இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே உங்களுக்கு வெற்றியைத் தரும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும்.

இந்த ஆண்டு முழுவதும் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

கடந்த காலங்களில் பெரும்பாலான கன்னிராசிக்காரர்கள் மனக் கஷ்டங்களையும் வாழ்வில் தடைகளையும் சந்தித்தீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இப்போது இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும்.

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்னையால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும்.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போது வாங்க முடியும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நீங்கள் நினைத்தவரை மணமுடிப்பீர்கள்.

இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர காரகனாகிய குருபகவான் குழந்தைச் செல்வத்தை வழங்குவார். தாத்தா பாட்டிகள் உங்கள் வீட்டில் பேரக்குழந்தையின் மழலைச்சத்தத்தை கேட்கப் போகும் நேரம் வந்துவிட்டது.

அரசு ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப்பளுவும் இனிமேல் நீங்கி உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இனிமேல் முயற்சி பலிதமாகும்.

அரசு ஊழியர்களுக்கு இந்தப் புத்தாண்டால் நல்ல நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். 

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும்.

நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள்.

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும்.

பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும்.

சொந்தத்தொழில் செய்பவர்கள் தொழில்அதிபர்கள் வியாபாரிகள் ஆகியவர்களுக்கு தங்கள் தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

சில தொழில்முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும்பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆலய சீரமைப்பு பணிகளில் சிலர் புகழ் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும்.

கன்னிராசி இளைஞர்களுக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித் தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.

அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது உங்களுக்கு புரியும்.

எனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வருடம் நல்ல பலன்களையே தரும்.

பெண்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நல்லபலன்களைக் கொடுக்கும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை மிகச் சிறப்பாக நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.

உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்டவர்கள், கறுப்புநிறப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நல்ல வருமானங்களும், மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

4 comments :