Tuesday, 29 December 2015

மேஷம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்:

மேஷராசிக்கு அஷ்டமச்சனி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த 2016 ஆங்கிலப் புதுவருடம் பிறக்கிறது. ஆயினும் வருடம் பிறக்கும் முதல் நாளான புத்தாண்டு தினத்தன்று உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியை பார்க்கும் நிலையில் பிறப்பதால் புதுவருடம் உங்களுக்கு யோகமான வருடம்தான்.

இம்முறை வருடத்தின் முற்பகுதியான ஆகஸ்ட்மாதம் வரை குருபகவான் ஐந்தாமிடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்ப்பதால் அஷ்டமச்சனியின் கெடுபலன்களும் இந்த வருடம் உங்களுக்கு இருக்கப் போவது இல்லை என்பதும் ஒரு வகையில் உங்களுக்கு நல்லபலன்தான்.

மேலும் புதுவருடத்தின் பெரும்பகுதி மாதங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி நிலையிலும், நட்புநிலையிலும், உச்சநிலையிலும் இருப்பார் என்பதால் ராசிநாதனும், ராசியும் வலுவடைந்திருக்கும் காலங்களில் கெடுபலன்கள் எதுவும் நடக்காது எனும் விதிப்படி 2016-ம் வருடம் மேஷராசிக்கு சாதகமான நல்ல ஆண்டாகவே இருக்கும்.

அதேநேரத்தில் வருடத்தின் கடைசிமாதங்களிலும் அடுத்த வருட ஆரம்பத்திலும் அஷ்டமச்சனியின் தாக்கம் மேஷராசிக்கு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த வருடமே நீங்க புதிய முயற்சிகள் எதையும் தொடங்காமல் விழிப்புடன் இருப்பது நல்லது.

அஷ்டமச்சனி, ஏழரைச்சனி காலங்களில் சனிபகவான் புதிய தொழிலையோ, அல்லது வியாபாரத்தையோ தொடங்க வைத்து அதை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் புலிவாலைப் பிடித்த கதையாக அதன் போக்கில் ஓட வைப்பார் என்பதால் மேஷராசிக்காரர்கள் இந்த வருடம் தொழில், வியாபாரம் போன்றவைகளில் கவனமாக இருப்பது நல்லது.

குறிப்பிட்ட சிலருக்கு இந்த நேரங்களில் இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிப்பதற்கு ஆசைவந்து அதைப் பறந்து பிடிக்கப்போய் “உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா” கதை வரும் என்பதால் வேலை பார்க்கும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

இருக்கும் வேலையை விடுத்து அடுத்த வேலைக்கு மாற நினைப்பவர்கள் கண்டிப்பாக வேலையில் இருந்து கொண்டே மாறுதலுக்கு முயற்சி செய்து அடுத்த வேலைக்கான உறுதி ஆர்டர் வந்த பின்பு இருக்கும் வேலையை விடுவது நல்லது. சிலநேரங்களில் வேலைமாற்றத்திற்குப் பின் முன்பிருந்த வேலையே அருமை என்று நினைக்க வைப்பார் சனி.

முப்பது வயதுகளில் இருப்பவர்கள் இந்த வருடமும் அடுத்த வருடமும் செட்டிலாக விடாமல் அலைக்கழிக்க வைக்கப் படுவீர்கள். குறிப்பாக பொருளாதார சிக்கல்கள், பணவரவில் திருப்தியின்மை, பாக்கெட்டில் பணம் வைக்க முடியாத நிலை போன்றவைகள் இருக்கும்.

பிறந்தஜாதகத்தில் யோகவலுவுள்ள தசாபுக்திகள் நடக்கும். மேஷராசிக்காரர் களுக்கு மட்டும் நான் மேலே சொன்ன சாதகமற்ற பலன்கள் சற்று அடக்கி வாசிக்கப்படும்.

ஆயினும் அஷ்டமச்சனி என்பது உங்களுக்கு துன்பங்கள் என்ற பெயரில் அடுத்தவர்களிடம் எப்படி ஏமாறாமல் இருப்பது மற்றும் எப்படித் தொழில் நடத்துவது. போன்ற வாழ்க்கை அனுபவங்களை கற்றுத்தரும் என்பதால் இளைய பருவ மேஷராசிக்காரர்களைப் பொறுத்தவரை இந்த வருடம் அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும்.

அதே நேரத்தில் இந்த வருடத்தின் முற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம்.

உடல்நலம் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகள் இருக்காது. புதிய கடன்கள் வாங்க வேண்டிய தேவையின்றி போதுமான வருமானம் தாராளமாக வரப் போகின்றது. எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு தந்தையின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். தந்தையால் செலவுகள் ஏற்படலாம்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.

கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த பனிப்போர் விலகி இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க ஆரம்பிப்பீர்கள். வீட்டில் குழந்தையின் கொலுசுச் சப்தம் கேட்கும் காலம் பிறந்து விட்டது.

ஐந்தாமிடத்திற்கு ராகு மாற இருப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் மேஷராசிக்காரர்கள் அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். இந்த வருடம் அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது. காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம். இளையபருவத்தினர் தங்களின் வாழ்க்கைத் துணைவரை இந்தவருடம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். காதல் வரும் வருடம் இது.

சிலர் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள்.

மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் நீங்கள் என்பதால் அஷ்டமச்சனி பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. சனியை நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். கையில் இருக்கும் சேமிப்பை சனி கரைய வைக்கும் அவ்வளவுதான். இந்த ஆண்டு உங்களுக்கு இனிமையான ஆண்டுதான்.

2 comments :