Sunday, 27 December 2015

2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பொதுப்பலன்

2016-ம் ஆங்கிலப் புத்தாண்டு இந்த வருடம் கன்னிராசி உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.

ஆங்கிலப் புதுவருடம் பிறப்பது எல்லா வருடங்களிலும் டிசம்பர் மாதம் 31-ந்தேதி நள்ளிரவு 12 மணிமுதல் அதாவது 1.1.2016 அதிகாலை 0.01 முதல் பிறக்கும் என்பதால் நிரந்தரமாக எப்போதுமே அந்த நேரம் கன்னி லக்னமாகவே இருக்கும்.

எனவே நிரந்தரமாக இருக்கும் லக்னப்படி புத்தாண்டுப்பலன் கணிப்பதை விட ஒவ்வொரு வருடமும் மாறுகின்ற ராசியின் அடிப்படையில் கிரக நிலைகளைக் கணித்துப் பலன் சொல்வதே நம்முடைய இந்திய ஜோதிடமுறைக்கு ஏற்றது.

மேலும் மேற்கத்திய நாடுகளில்தான் சூரியனின் அடிப்படையிலான சாயனமுறை வழக்கத்தில் உள்ளது. அது துல்லியமானதும் அல்ல. சந்திரனுக்குப் பின் உள்ள நட்சத்திரத்தை அறிந்து உடுமகாதசை வருடங்களின் மூலம் ஒரு மனிதனின் வாழ்வைப் பகுதிகளாக பிரித்து முழு ஆயுளுக்கும் பலன் சொல்லும் நம் இந்திய ஜோதிடத்தில் நிராயனமுறையை நாம் பின்பற்றுவதால் ராசியைக் கொண்டு ஆங்கில வருடபலன் அறிவதே சரியானது.

அடுத்து மிக முக்கியமான ஒன்றாக சனி குரு ராகுகேது போன்ற கிரகப் பெயர்ச்சிகளின் போது மட்டுமே அந்தக் கிரகங்கள் தனக்குச் சாதகமில்லாத இடங்களில் வரும்போது ஒரு மனிதன் அதற்கேற்ற பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இதுபோன்று புதுவருடம் பிறக்கையில் பரிகாரங்கள் செய்ய நமக்கு விதிக்கப்படவில்லை.

இதையொட்டியே எப்போதும் புது வருடபலன்களில் நான் பரிகாரங்களைச் சொல்வதில்லை..

2016-ம் ஆண்டின் முக்கிய கிரகநிலைகளைக் கவனித்தோமானால் இதன் சிறப்பு அம்சமாக வருடத்தின் ஆரம்பநாளில் நான்கு கிரகங்கள் தங்களின் வீட்டைப் பார்ப்பதையும் குருவும், சூரியனும் பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதையும் அனைத்துக் கிரகங்களும் சிம்மத்தில் தொடங்கி மகரம் வரை அதாவது பனிரெண்டில் தொடங்கி ஐந்தாமிடம் வரை கிரகமாலிகா யோகத்தில் இருப்பதைக் குறிப்பிடலாம்.

வருடத்தின் முதல் நாளில் குரு தன் வீடான தனுசைப் பார்க்கிறார். செவ்வாய் தன் வீடான மேஷத்தையும் சுக்கிரன் தனது ராசியான ரிஷபத்தையும் சனி தனது வீடான மகரத்தையும் பார்த்து வலுப்படுத்துகிறார்கள். எனவே மேற்கண்ட நான்கு ராசிக்காரர்களுக்கும் இந்த வருடம் ஒரு சிறப்பு அந்தஸ்தை தரும்.

அடுத்து குருவும் சூரியனும் வருட ஆரம்பத்தில் பரிவர்த்தனை ஆவதும் அந்த பரிவர்த்தனை தனுசு சிம்மத்தில் நிகழ்வதும் மேற்கண்ட ராசிக்காரர்களின் தோஷத்தைப் போக்கும் ஒரு அமைப்பு.

கிரகங்கள் அனைத்தும் புதுவருட ஆரம்பத்தில் ராசியின் பனிரெண்டு, ஐந்தாம் வீடுகளுக்குள் அமைவதும் ராசியில் ராகு அமர்ந்து எட்டாம் வீடு வலுப்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

கிரகமாலிகாயோக அமைப்பு பனிரெண்டாமிடத்தில் ஆரம்பித்தாலும் திரிகோண ஸ்தானமான ஐந்தாமிடத்தில் முடிவடைவதால் பனிரெண்டாமிடத்தின் சுப அமைப்புகளான வெளிநாடு ஞானம் முக்தி போன்றவையே செயல்படும். இதன்படியே இந்த வருடப் பொதுப்பலன்கள் சொல்லப்பட்டுள்ளன.

அடுத்து வருடத்தின் மிக முக்கிய நிகழ்வாக ஜனவரி மாதத்திலேயே நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் பெயர்ச்சி அடைகின்றன. ராகு சிம்மத்திற்கும், கேது பகவான் கும்பத்திற்கும் பெயர்ச்சி அடைக்கின்றார்.

உலகியல் ஜோதிடப்படி சிம்மராசி அரசரையும், அதிகாரமுடையவரையும் ஆளுமைத்திறனும் தலைமைப்பண்பும் உடையவர்களையும் குறிக்கும் ராசி என்பதால் வருட ஆரம்பத்தில் ஆளுவோருக்கும், அதிகாரிகளுக்கும் இது பின்னடைவான காலகட்டமாக இருக்கும்.

சிம்மத்தில் ராகு அமர்வது அரசகுலத்தினர் என்று பழங்காலத்தில் சொல்லப்பட்ட ஆளுவோரின் சுற்றத்தினருக்கும் அதிகாரிகள், மற்றும் அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் பாதிப்பைத் தரும் எனும் விதிப்படி 2016-ம் வருடத்தின் பிற்பகுதி அதிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு பின்னடைவான காலகட்டமாக இருக்கும்.

ஆயினும் ராகுவை சாந்தப்படுத்தக் கூடிய ஒரே கிரகம் குருபகவான் என்பதாலும் சிம்மத்தில் ராகு குருவுடன் இணைவதாலும் மேற்கண்டவர்களுக்கு மிகப்பெரிய துன்பங்கள் எதுவும் வந்துவிடப் போவதில்லை.

இந்தப் புதுவருடத்தில் உபயராசியினரான மிதுனம் கன்னி தனுசு மீன ராசிக்காரர்கள் சிறப்பு நற்பலன்களை ராகுகேதுப் பெயர்ச்சியால் அடைவார்கள், மேற்கண்ட ராசியினருக்கு இந்த வருடம் உற்சாகமான வருடமாக இருக்கும்.

துலாம் ராசியினருக்கு கிட்டத்தட்ட ஏழரைச்சனி முடித்து விட்டநிலை இருக்கும். இந்த வருடம் துலாத்திற்கு சோதனைகள் இல்லாமல் சாதனைகளை நோக்கிச் செல்லும் வருடமாக இருக்கும். மேஷராசிக்கு அஷ்டமச்சனியின் பாதிப்புகள் ஆகஸ்டு மாதத்திற்கு மேல் உணரப்படும் என்பதால் அவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

கடகராசிக்கு வருட பிற்பகுதியிலிருந்து பொருளாதார சிக்கல்கள் இருக்கும் என்பதால் முதல் ஆறுமாதங்கள் அவர்கள் சிக்கனமாக இருப்பதன் மூலம் அனைத்தையும் சமாளிக்கலாம். மகரத்திற்கு இது மகத்தான் ஆண்டு. எதிரிகள் அழிவார்கள். மகரத்திற்கு இப்போதிருக்கும் சிக்கல்கள் அனைத்தும் ஜூலைக்குப் பிறகு பறந்தோடி விடும்.

மீதமுள்ள ரிஷபம் சிம்மம் கும்பராசிக்கு சுமாரான நற்பலன்கள் நடைபெறும் வருடமாக 2016 புதுவருடம் இருக்கும். விருச்சிகத்திற்கு மட்டும் தனிச்செய்தியாகச் சொல்லியிருக்கிறேன்.

பொதுவான பலன்கள் என்று பார்த்தோமானால் இந்த வருடம் எல்லோருடைய கையிலும் பணநடமாட்டம் இருக்கும். பொருளாதார நிலை சரிவடையாமல் சொல்லிக் கொள்ளும்படியே இருக்கும்.

பணத்திற்கு அதிபதியான குருபகவான் அதிநட்பு ஸ்தானத்தில் வலுவுடன் இருந்து பரிவர்த்தனை யோகத்துடன் இருப்பதால் எல்லோர் கையிலும் பணம் இருக்கும். எனவே அனைவரின் வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் நல்லபடியாகவே நடக்கும்.

குருபகவான் ராகுவுடன் இணைந்து பலவீனம் அடைவதால் தங்கத்தில் பெரும் முதலீடுகளைச் செய்ய வேண்டாம். வசதி உள்ளவர்கள் நிலத்திலும் முதல் ஆறுமாதங்கள் மட்டும் பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யலாம்.

ஜுவல்லரிக்காரர்கள், ஆன்மிகத்துறையினர், வட்டித்தொழில் செய்பவர்கள், வங்கித்துறை, நிதித்துறை, சட்டம் சம்பந்தப்பட்டோர், நீதியரசர்கள், மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்டோர் போன்றவர்களுக்கு வருட பிற்பகுதியில் மட்டுமே நற்பலன்கள் இருக்கும்.

புதனின் வலுப்பெற்றுள்ளதால் தகவல் தொழில்நுட்பத்துறை, கணக்குத்துறை, புத்தகம் சம்பந்தப்பட்டோர், எழுத்தாளர், பத்திரிக்கைத்துறை, கவிஞர்கள், கணிப்பொறித்துறையினர், செல்போன்துறை, வியாபாரிகள் ஆகியோருக்கு நல்லபலன்கள் இருக்கும். குறிப்பாக சென்ற மழையினால் ஈடு செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்ட பதிப்பகத்துறையினர் புதுவருடத்தில் அதை ஈடு கட்டுவார்கள்

சென்ற வருட பலனில் நீர்க்கிரகமான சந்திரனால் பெருமழை பெய்து வெள்ளத்தால் தமிழ்நாடு அதிகம் பாதிப்படையும் என்று நான் எழுதியது போலவே பெருமழை பெய்து எல்லாம் கெட்டது. இந்தவருடமும் மழை இருக்கும்.

குருவுடன் ராகு இணைவது ஒரு நல்ல சேர்க்கை இல்லையென்பதால் இந்த ஆண்டு முதல் ஆறுமாதங்களில் நல்லவர்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக ராகு இஸ்லாமியக் கிரகம் என்பதால் அன்பைப் போதிக்கும் இஸ்லாத்துக்கு மாறுபட்ட தீவிரவாதிகளின் செயல்கள் அதனை விரும்பாத பெரும்பான்மையான இஸ்லாமியர்களின் தலையில் வீண்பழியாக விழும். வருடபிற்பகுதியில் உண்மை தெரியவந்து நிலைமை மாறும்.

இந்து அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், குறிப்பாக தலைமைப் பொறுப்பில் உள்ள அந்தணர்கள் குருராகு சேர்க்கையால் தீவிரவாத செயல்களால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த வருடம் இவர்களின் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டியிருக்கும். இழிவான செயல்களுடன் இவர்களை சம்பந்தப்படுத்தி இவர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகளும் நடைபெறும் என்பதால் கவனம் தேவை.

புத்தாண்டின் தொழில் ஸ்தானம் வலுவாக அமைவதால் தொழில் துறை நன்றாக இருக்கும். புதிய தொழிற்சாலைகள் துவங்கப்படும். தொழில் அதிபர்களுக்கு நல்ல காலகட்டமாக இது இருக்கும். உழைப்பாளிகள், தொழிலாளர்கள், இயக்கும் தொழிலர், துப்புரவுப்பணியில் இருப்போர், இரும்பு சம்பந்தப்பட்டவர்கள், வாகன ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், மாற்றுத்திறனாளிகள், மதுபானத் தொழிலில் உள்ளோர், எண்ணைத்தொழில், தோல்பொருட்கள் செய்வோர் உள்ளிட்டோரின் வளம் பெருகும்.

செவ்வாய் தன் மூலத்திரிகோண வீட்டைப் பார்த்து வலுப்ப்டுத்துவதால் ரியல்எஸ்டேட், வீடு கட்டித்தருவது, போன்ற துறையினருக்கு இதுவரை இருந்துவந்த தேக்கநிலை இந்த ஆண்டு நீங்கும். தொழில் மீண்டும் சூடுபிடிக்கும்.

செங்கல் உள்ளிட்ட சிகப்பு நிறப்பொருட்களை விற்பவர்கள், ஆற்றுமணல், குவாரி, கிரானைட், சுரங்கம் உள்ளிட்ட தொழில் செய்பவர்களுக்கும் இந்த வருடம் நல்ல பலன்களை அளிக்கும். காவல்துறை, சீருடை அணியும் ராணுவம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் இது நல்ல வருடமே.

இனி ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியான பலன்களை இன்னும் இரு தினங்களில் வெளியாக இருக்கும் மாலைமலர் தனிப்புத்தகத்தில் காணலாம்...

விருச்சிகத்தின் வேதனை விலகும்

ஒரு சிறப்புப்பலனாக விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த காலங்களில் மிகப்பெரிய சிரமங்களையும் கடுமையான பலன்களையும் அனுபவித்து வருகிறார்கள். அதிலும் இளையபருவ விருச்சிகத்தினர் சிலருக்கு நடக்கும் மோசமான பலன்கள் சொல்ல முடியாதவை. ஏழரைச்சனி அவர்களைப் படாதபாடு படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள் அல்லது விருச்சிக ராசியினை வீட்டினில் கொண்டவர்கள்தான்.

குறிப்பாக சனிபகவான் இப்போது அனுஷ நட்சத்திரத்தில் சென்று கொண்டிருப்பதால் ஜென்மநட்சத்திரத்தில் சனி பயணம் செய்யும்போது எதிர்மறை பலன்களைத் தருவார் எனும் விதிப்படி அனுஷ நட்சத்திரக்காரர்களின் துன்பங்கள் மிக அதிகம்.

பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்தி அமைப்புடைய மிகச் சில விருச்சிக ராசியினர் மட்டுமே பாதிப்படையவில்லை.

நாளை மறுநாள் டிசம்பர் 28ம் தேதி முதல் சனிபகவான் அனுஷநட்சத்திரத்தில் இருந்து மாறுவதால் விருச்சிகராசிக்கு புதுவருடம் முதல் சனியின் கடுமை படிப்படியாகக் குறைந்து விருச்சிகம் மேன்மையை அடையப் போகும் ஆரம்ப ஆண்டாக இது இருக்கும்.

6 comments :

 1. SUPER PREDICTIONS BY BEST ASTROLOGER > THANKS

  ReplyDelete
 2. Mikka nantri guruji... Thankal kooriyathu pola Anushathil pirantha nanum kadantha 21/2 varudankalaka kadumaiyana thunbaththai anupaviththen. Kurippaka panaththalum manathalum nalla padankalai katru konden

  ReplyDelete
 3. குருஜி அவர்களுக்கு வணக்கங்கள்!
  நல்ல விளக்கங்களுடனான பதிவு!!
  அன்புடன்,
  -பொன்னுசாமி.

  ReplyDelete
 4. தனுசு ராசிக்கு ராசி பலன் எப்போது பதிவிடுவீர்கள்.

  ReplyDelete
 5. தனுசு ராசிக்கு ராசி பலன் எப்போது பதிவிடுவீர்கள்.

  ReplyDelete