Tuesday, 29 December 2015

கும்பம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்

கும்பம்

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக கோட்சாரரீதியில் சாதகமற்ற நிலைமைகள் கும்பத்திற்கு இருந்து வந்த அமைப்பு மாறி 2016 முதல் எல்லா வகையிலும் மேம்பட்ட ஒரு கிரகநிலைகள் கும்பத்திற்கு உருவாவதால் புதுவருடம் கும்பத்திற்கு நல்ல வருடமே.

குறிப்பாக இதுவரை இரண்டு, எட்டாமிடங்களில் இருந்து கொண்டு கும்பத்திற்கு பணப்பிரச்சினைகளையும், தொழில்சிக்கல்களையும் கொடுத்து வந்த ராகு-கேதுக்கள் இந்த வருட ஆரம்பத்தில் அங்கிருந்து மாறுவது கும்பராசிக்கு பணவரவில் மாற்றங்களைக் கொடுத்து எல்லாவகையிலும் பொருளாதார மேன்மையைத் தரும் என்பது உறுதி.

இதுவரை மனதில் இருந்துவந்த எதிர்மறைஎண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. இனம்புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புது உற்சாகம் அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த கெட்ட விளைவுகள் இனி இருக்காது.

இதுவரை உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும்.

பணவரவு மிகவும் நன்றாக இருக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. சேமிப்பு என்பதை மனதில் இருத்தி கொஞ்சமாவது சேமித்தீர்களானால் வாழ்க்கையில் ஆனந்தம்தான். கும்பராசி தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்லநேரம். எந்தக்காரியமும் உங்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும்.

வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான சூழல்கள் இருக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு அல்லது இரண்டும் இந்த வருடம் கண்டிப்பாக உண்டு. இந்த வருடம் உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் நல்ல நிலையில் இருக்கும்.

வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் இளைய வயது கும்பராசிக்காரர்களுக்கு நல்லசம்பளத்தில் வேலை கிடைக்கும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் வெகுவிரைவில் குணம் அடைவார்கள். மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் போக்குக்காட்டிக் கொண்டிருந்த வியாதிகள் இனிமேல் நல்ல பிள்ளையாக உங்களை விட்டு விலகும். கடந்த காலங்களில் மகன், மகள் விஷயத்தில் உங்களுக்கு கவலைகள் இருந்து வந்தன. சிலர் பிள்ளைகளுக்கு எத்தனையோ வரன் பார்த்தும் திருமணம் முடிக்க முடியாமல் இருந்தீர்கள். அவை அனைத்தும் இப்போது நீங்கி பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை இந்த வருடம் சிறப்பாகச் செய்வீர்கள்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் இந்த வருடம் இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். சிலர் தாத்தா, பாட்டியாக பதவிஉயர்வு பெறுவீர்கள். இதுவரை பள்ளி, கல்லூரிகளுக்கு ஒழுங்காக செல்லாமல் கெட்டபெயர் எடுத்து உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கிய பிள்ளை இப்போது ஒழுங்காக சென்று உங்களை சந்தோஷப்படுத்துவார்.

கடந்த வருடங்களில் வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக இதுவரை இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள், பங்காளித் தகராறு போன்றவைகள் இந்த வருடம் சுமுகமாக உங்களுக்கு லாபகரமாக முடிவுக்கு வரும்.

நேர்த்திக்கடன்களை செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக நல்லபடியாக நிறைவேற்றலாம். குலதெய்வவழிபாடு சரிவரச் செய்யாதவர்கள் உடனே அதைச் செய்யும்படி இருக்கும். வருட ஆரம்பத்தில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்து சுபவிரயங்கள் இருக்கும். திருமணம், கிரகப்பிரவேசம், பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற மங்கள நிகழ்ச்சிகளை வருட முற்பகுதியில் செய்வீர்கள்.

சரக்கு வாகனங்கள் இயக்குவோர், கூலியாட்களை வைத்து வேலை வாங்குவோர், மாற்றுத்திறனாளிகளை பராமரிப்போர், பெட்ரோல்பங்க், அநாதை விடுதிகளை நடத்துவோர், மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், காலிமனை விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், காவல்பணி செய்வோர், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் வளம் பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் போன்றவைகளில் பிரச்னை எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல வருடம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு இந்த வருடம் லாபம் வரும். அரசு, தனியார்துறை பணியாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும் வருடமாக இருக்கும்.

இதுவரை தொழில் விஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மளமளவென தொழில் முன்னேற்றம் பெறுவதை கண்ணெதிரே காண்பீர்கள். அலுவலகங்களில் இதுவரை எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அவை அனைத்தும் மாறி உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும்.

முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த வருடம் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும்.

கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள்.

சகோதரவிஷயத்தில் மனவருத்தங்களும், இழப்புக்களும் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் கெடுதலாக ஒன்றும் நடக்காது. மொத்தத்தில் இந்தப் புதுவருடம் கும்பராசிக்கு நன்மைகளையும் மேன்மைகளையும் தரும் என்பதால் எல்லாவகையிலும் இதைப் பயன்படுத்தி நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள் என்பது உறுதி.

No comments :

Post a Comment