Tuesday, 1 December 2015

சிம்மம்: 2015 - டிசம்பர் மாத பலன்கள்

சிம்மம்:

மாதத்தின் பிற்பகுதியில் சனியின் இணைவில் இருந்து ராசிநாதன் சூரியன் விலகுவதும் சூரியனும், குருவும் பரிவர்த்தனையாவதால் ராசிநாதன் ராசியில் இருக்கும் நிலை பெறுவதும் சிம்மத்திற்கு யோகம் தரும் அமைப்புகள் என்பதால் டிசம்பர் மாதம் சிம்மத்திற்கு வெற்றியைத் தரும் மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

சிம்மத்திற்கு அனைத்து சிறப்புக்களும் சேரும் மாதம் இது. யோகம் தரக்கூடிய கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் சந்தோஷமான மனநிலையில் உற்சாகமாக இருப்பீர்கள். மறைமுகமான எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். சிம்மத்திற்கு இனிமேல் தோல்வி இல்லை. இதுவரை முயற்சி செய்தும் நடக்காத சில விஷயங்கள் இனிமேல் முயற்சி இல்லாமலே வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்களும் உங்களைத் தேடிவந்து நட்பு பாராட்டுவர். இதுவரை அதிர்ஷ்டம் இல்லாதவராக கருதப்பட்ட நீங்கள் இனிமேல் அதிர்ஷ்டசாலியாக புகழப்படுவீர்கள்.

அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும்.

2,3,4,5,6,11,12,13,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி மாலை 5 மணி முதல் 20–ம் தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் அடுத்தவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற விஷயங்களுக்கு ஜாமீன் நிற்கவும் கூடாது.

No comments :

Post a Comment