Tuesday, 1 December 2015

கும்பம்: 2015 - டிசம்பர் மாத பலன்கள்

கும்பம்:

குருபகவான் ராசியைப் பார்ப்பதும் ராசிநாதன் கேந்திரத்தில் இருப்பதும் இதுவரை வலிமை இழந்திருந்த சுக்கிரனும், புதனும் மீண்டும் வலுப்பெற்று இருப்பதும் கும்பராசிக்கு சாதகமான கிரக அமைப்புகள் என்பதால் டிசம்பர் மாதம் கும்பத்திற்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இந்த மாதம் நினைக்கும் காரியம் நிறைவேறுதலும் இருக்கும்.

இதுவரை இருந்து வந்த அவஸ்தைகளும், சிக்கல்களும் தீரத் தொடங்கி நல்ல படியாக பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். குடும்பத்தில் வாழ்க்கை துணையிடம் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும். கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். அல்லது இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள். வேலையில் சிக்கல்கள் இருந்தவர்களுக்கு அது சரியாகும். சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும். உடல் நலம் சீராகும். பொருளாதாரம் மேன்மை பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உறவினர் வருகையும் இருக்கும் என்பதால் வீடு எந்த நேரமும் கலகலப்பும், சிரிப்புமாக இருக்கும். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருப்பார்கள். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்த மாதம் வருமானம் அதிகம் உள்ள மாதம்தான். அதே நேரத்தில் வரும் வருமானத்தை சேமிக்கத்தான் முடியாது. பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.

1,2,8,9,10,17,18,19,20,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி மாலை 4 மணி முதல் 7-ம் தேதி அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களைத் தள்ளிவையுங்கள். புதிய முதலீடுகள் முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.

1 comment :