Tuesday, 1 December 2015

கன்னி: 2015 - டிசம்பர் மாத பலன்கள்

கன்னி:

கன்னிநாதன் புதன் டிசம்பர் மாதம் முழுவதும் நல்ல இடங்களில் இருப்பதோடு இதுவரை ராசியில் நீசம்பெற்றிருந்த சுக்கிர பகவான் இந்த மாதம் நீச நிலை நீங்கப் பெறுவதால் இதுவரை நடந்து வந்த சாதகமற்ற அமைப்புகள் நீங்கி கன்னிக்கு நல்லவை நடக்கும் மாதமாக இது இருக்கும்.

தாயார் வழியில் நன்மைகள் நடக்கும் மாதம் இது. வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இந்தமாதம் இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்தநேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்தமாதம் உங்களுக்கு விரயங்களும், செலவுகளும், பயணங்களும் உள்ள மாதமாக இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டுமே எனவே வருமானமும் இந்தமாதம் தாராளமாகவே இருக்கும். குறிப்பாக தந்தை வழி பெண்உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். தந்தை வழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம். குடும்பப்பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம்.

தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். செவ்வாய் ராசியில் வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. நெருப்பு சம்பந்தப்பட்ட வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. வியாபாரிகளுக்கு இது மிகவும் அருமையான மாதம். குறிப்பாக, ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும்.

1,5,6,7,8,11,12,16,17,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி இரவு 8 மணி முதல் 22-ம் தேதி இரவு 10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்டதூரப் பயணங்களைச் செய்ய வேண்டாம். அடுத்தவர்களுடன் விளையாட்டுச் சண்டை போடுவது கூட வினையாக முடியும் நாட்கள் இவை.

No comments :

Post a Comment