Thursday, 17 December 2015

மார்கழி மாத பலன்கள் -2015

மேஷம்

மார்கழி மாதத்தில் ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதும் இன்னொரு யோகரான சூரியன் குருவின் வீட்டில் இருந்து குருபகவானுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதும் மேஷராசிக்கு நற்பலன்களைத் தரும் மாதமாக இருக்கும். குருபகவானின் வலுவால் இதுவரை உங்களுக்கு தாமதித்து வந்த தனலாபங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்த மாதம் கிடைக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் ஒரு சிலருக்கு பொருள் சேர்க்கையும் உள்ள மாதமாக இது இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும்.

வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். சுக்கிரபலத்தால் பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும். மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் மிக சிறப்பான மாதம்.

ரிஷபம்

மாத பிற்பகுதியில் ராசிநாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருந்து ராசியை பார்ப்பது சிறந்த அமைப்பு என்பதால் இந்த மாதம் ரிஷபராசிக்கு ஏற்றங்களும் மாற்றங்களும் உள்ள மாதமாக இருக்கும். அதே நேரத்தில் முற்பகுதியில் அவர் ஆறில் ஆட்சி பெறுவதால் எங்கே உங்களை கவிழ்க்கலாம் என உங்கள் எதிரிகள் திரிவார்கள் என்பதால் எதிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம். நல்ல சந்தர்ப்பங்களை இந்தமாதம் நழுவ விடுவீர்கள்.

கேது வலுப்பெறுவதால் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இந்தமாதம் அவற்றை முடிப்பீர்கள். ராஜ கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

தாயார் வழியில் நன்மைகள் நடக்கும் மாதம் இது. வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இந்தமாதம் இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்தநேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இந்தமாதம் முடித்துக் காட்டுவீர்கள்.

மிதுனம்

மார்கழி மாதம் ராசிநாதன் புதன் ஏழாமிடத்தில் அமர்ந்து தன் ராசியைத் தானே பார்த்து வலுப்படுத்துவதால் உங்களுக்கு வாழ்க்கைத்துணைவர் விஷயத்தில் நன்மைகளும் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு சச்சரவுகளும் நீங்கும் என்பதைக் காட்டுகிறது. இந்த கிரக நிலையால் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த சந்தேகங்களும் தேவையற்ற பயங்களும் விலகும் என்பது உறுதி.

அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும் மாதம் இது. பூர்வீக சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு இந்த மாதம் எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை.

மாத பிற்பகுதியில் செவ்வாய் வலுவாவதால் எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். நீண்ட நாட்களாக புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இந்த மாதம் கருவுறுதல் இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ஒரு சிலர் குல தெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

கடகம்

மார்கழிமாத ஆரம்பத்தில் ராசிநாதன் வலுவாக இருப்பதும் பணவரவிற்கு காரணமான இரண்டாமிடத்தில் குருபகவான் இருப்பதும் இந்த மாதம் பணவரவில் தடையேதும் இருக்காது என்பதை காட்டுகிறது. ஒரு சிலருக்கு நீண்டகாலமாக நிலுவையில் இழுத்துக் கொண்டிருந்த கடன் தொகையோ சம்பள தொகையோ இந்தமாதம் நல்லபடியாக செட்டிலாகி கைக்கு கிடைத்து உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

மாதம் முழுவதும் உங்களின் தொழில், வியாபாரம் போன்றவைகள் வெகு சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். பாகப்பிரிவினை போன்ற பூர்வீக சொத்து பிரச்சனைகளை இந்த மாதம் தள்ளி வையுங்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும்.

சிம்மம்

சிம்மநாதன் சூரியன் இதுநாள்வரை சனியுடன் இணைந்து பலவீனமாகி தன் தனித்தன்மையை இழந்திருந்த நிலைமாறி இந்த மாதம் குருவின் வீட்டில் பலம் பெறுவதும் அவருக்கு வீடு கொடுத்த குருபகவானுடன் பரிவர்த்தனையில் இருப்பதும் சிம்மத்திற்கு வலுத்தரும் அமைப்புகள் என்பதால். கடந்த சில வாரங்களாக உங்களுக்கு இருந்து வந்த எதிர்மறை பலன்கள் இப்போது விலகும்.

தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக காவல் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும்.

கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு விரயங்களும், செலவுகளும், பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டுமே எனவே வருமானமும் தாராளமாகவே இருக்கும். செவ்வாய் வலுவுடன் இருப்பதால் பேச்சில் நிதானத்தைக் காட்டுங்கள். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

கன்னி

கன்னிநாதன் புதன் தனது நான்காவது கேந்திரத்தில் இருந்து தன் பத்தாம் வீட்டைப் பார்ப்பதும் அவருக்கு வீடு கொடுத்த குருபகவான் அவரையும் நான்காமிடத்தையும் அனைத்து விஷயங்களிலும் லாபகரமான அமைப்புகளை தரும் என்பதால் இந்த மாதம் உங்களுக்கு தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும்.

வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது.

ராசியின் பாபரான செவ்வாய் வலுப்பெறுவதால் அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைக்குனிவை தரலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்

துலாம்

மார்கழி மாதம் உங்களுக்கு தொல்லைகள் தரும் என்று சொல்ல எதுவும் இல்லை. மாதம் முழுவதும் ஆன்மிக எண்ணங்களும் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மனதில் வருவதும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் நல்லசெய்திகள் கேள்விப்படுவதும் இருக்கும்.ராசியில் செவ்வாய் இருப்பதால் ஒருசிலர் எதிர்மறை பலன்களை சந்தித்து குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த நிலை சிறிது நாட்கள்தான்.

சிலருக்கு சிறுசிறு உடல்நலப்பிரச்னைகள் வரும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இந்த மாதம் கருவுறுதல் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.

தந்தை வழி பெண் உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். தந்தை வழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம். குடும்பப் பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்திகள் உண்டு.

விருச்சிகம்

விருச்சிகராசிக்கு இந்தமாதம் வீடு, வாகன விஷயங்களில் மாறுதல்களும், புதியவைகளும் இருக்கும். இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் இனிமேல் முடிவுக்கு வரத்துவங்கும்.. ராசிநாதனின் வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள்.. சில விருச்சிகராசிக்காரர்கள் ஏழு பிறவிக்குப் பட வேண்டிய கஷ்டங்கள் அனைத்தையும் இந்தப் பிறவியிலேயே அனுபவித்து விட்டீர்கள். இனி நீங்கள் யாருக்காகவும் எந்த விஷயத்திற்காகவும் கலங்கத் தேவையே இல்லை. கடவுள் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்.

ராசிநாதன் செவ்வாய் ஆராமிடத்தைப் பார்ப்பதால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பரப்பரப்பாக கோபத்துடன் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் சண்டை போட வேண்டாம். நிதானம் தேவை. வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு.

கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள். வேலையில் சிக்கல்கள் இருந்தவர்களுக்கு அது சரியாகும். சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது.


தனுசு

ராசிநாதன் குருவும் பாக்யாதிபதி சூரியனும் பரிவர்த்தனை பெறுவதால் மார்கழி மாதம் தனுசு ராசிக்கு மகத்தான மாதமாக அமையும். ராசிநாதன் பரிவர்த்தனை யோகத்தின் மூலம் ராசியிலேயே இருக்கும் நிலை பெறுவதால் இந்தமாதம் உங்களை யாராலும் அசைக்க முடியாது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். சுக்கிரன் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும்.எதிர்பாராத வகையில் வருமானங்கள் இந்த மாதம் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். வியாபாரிகளுக்கு இது மிகவும் அருமையான மாதம். குறிப்பாக, ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும்.

மகரம்

மகரராசிக்கு இருந்த பின்னடைவுகள் அனைத்தும் விலகி உங்களை முன்னேற்றப் பாதையில் செல்ல வைக்கும் மாதமாக மார்கழிமாதம் இருக்கும். தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் நல்ல விதமாக செயல்பட்டு உங்களுக்கு நன்மைகளை தரும்.

பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும்.

இதுவரை எந்த விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்து வந்ததோ அவைகள் இனிமேல் தீரத் தொடங்கி நல்லபடியாக மீண்டு வருவீர்கள். கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். குடும்பத்தில் வாழ்க்கை துணையிடம் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம்.

கும்பம்

கிரகநிலைகள் கும்பத்திற்கு சாதகமாக இருப்பதாலும் ஏழு பதினொன்றுக்குடையவர்கள் பரிவர்த்தனை பெறுவதாலும் இந்தமாதம் வாழ்க்கைத்துணை மூலம் லாபங்களும் நன்மைகளும் கிடைக்கும் மாதமாக இருக்கும். மாதம் முழுவதும் உங்களின் தொழில், வியாபாரம் போன்றவைகள் வெகு சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும்.


வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். அதிர்ஷ்டம் செயல்பட ஆரம்பித்து செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக முடியும். பொருளாதார சிக்கல்கள் இருக்காது. வேலையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரம் செழிப்பாக நடக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு.


கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். காவல் துறையினருக்கு இந்த மாதம் பதவி உயர்வு உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும்.

மீனம்

இதுவரை மீனராசிக்கு தடைப்பட்டு வந்த பணவரவுகள் அனைத்தும் நீங்கி இந்த மாதம் முதல் சரளமாக பணம் கிடைக்கத் துவங்கும் மாதமாக மார்கழி மாதம் இருக்கும். பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும். பொருளாதாரம் மேன்மை பெறும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம்.

செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்லமாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும்.

சிலருக்கு அப்பாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தந்தையைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.

1 comment :